PUBLISHED ON : டிச 11, 2021

முன்கதை: அன்டார்டிகா பனிப்பாறைக்குள் கிடந்த டைனோசர் உடலில் இருந்து, நவீன விஞ்ஞான அடிப்படையில் குட்டி ஒன்றை உருவாக்கி, சிறுவன் சந்திரஜெயனுக்கு பரிசளித்தார் விஞ்ஞானி யோகிபாபு. அது ஆபத்தானது என பலரும் வெறுத்தனர். இனி -
பறவை கூண்டுகளுக்கு அருகில், கடித்து குதறப்பட்டு கிடந்தது ஒரு பாம்பு.
பார்த்த கணமே புரிந்து கொண்டான் சந்திரஜெயன்.
முந்தின நாள் இரவு, சந்திரஜெயன் வளர்க்கும் பறவைகளை தின்ன பாம்பு வந்திருக்கிறது. அந்த பாம்பை, எதிர்த்திருக்கிறது டைனோ; இதில் இரண்டுக்கும் மூர்க்கத்தனமாக சண்டை மூண்டிருக்கிறது; சண்டை முடிவில், பாம்பை கடித்து குதறி கொன்றிருக்கிறது.
டைனோ வில்லன் அல்ல; பக்கா கதாநாயகன்.
''அவசரப்பட்டீர்களே அப்பா... வந்த முதல் நாளே, டைனோ கதாநாயக சாகசத்தை காட்டியிருக்கிறது. வகுப்பில், ௨௦ அல்லது ௩௦ மதிப்பெண்கள் எடுப்பான் என எண்ணிய மாணவன், 100 மதிப்பெண்கள் எடுத்தால் வியக்கும் ஆசிரியர் போல் திகைத்து நிற்கிறேன் நான்....''
வளர்ப்பு மிருகங்களும், பறவைகளும் டைனோவை கட்டிப்பிடித்து, முத்த மழை பொழிந்தன; அது நாணி கோணியது.
சந்திரஜெயனின் அப்பா மந்திரமூர்த்தி, ஒரு மாதிரி சிரித்தார்.
''என்னப்பா சிரிக்கிறீங்க...''
''காக்கை உக்கார, பனம் பழம் விழுந்த கதை; இந்த டைனோ வளர்ப்பு பறவைகளை காப்பாற்றிய விதம்...''
''நீங்களா இப்படி பேசுறீங்க...''
''நீ சிறுவன்; நான், ௪௦ வயதை நெருங்கியவன்; என்ன தான் ஆராய்ச்சியில், ஒரு மிருகத்தை உருவாக்கியிருந்தாலும், அதன் பிறவி குணம் மாறவே மாறாது...''
''புது பிறவி...
புது குணம்...''
''அதையும் பார்ப்போம்...''
யாரும் எதிர்பாராத வகையில், டைனோவை இடுப்பில் துாக்கி வைத்து ஆடியது சின்சான்.
புதிதாக செய்த மர வீட்டை எடுத்து வந்தார் தச்சர்.
''ரெண்டு நாள் ஆகும்ன்னு சொல்லிட்டு, ஒரே நாள்ல எடுத்து வந்துட்டீங்க...''
''உங்க டைனோவை பார்த்தேன்; அது மேல ஈடுபாடு வந்திருச்சு... அதுக்கு எதாவது செய்யணும்ன்னு நினைச்சேன்; மர வீட்டை ஒரே மூச்சுல செஞ்சு முடிச்சுட்டேன்...''
மரவீட்டை முறைப்படி சேர்த்து வைத்தார்.
டைனோவை, மர வீட்டுக்குள் விட்டான் சந்திரஜெயன்.
அதற்குள் உருண்டு புரண்டு, 'ழியேய்...' என கூச்சலிட்டு சிரித்தது.
''நான் தயார் செய்து கொடுத்த மர வீடு, டைனோவுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு போல...'' என்றார் தச்சர்.
''ஆமா...''
''ஐயாயிரம் ரூபா பேசினேன்; 500 ரூபாய் குறைச்சு கொடுத்தா போதும் தம்பி...''
பணத்தை நீட்டினான் சந்திரஜெயன். கூண்டிலிருந்து வெளியே குதித்தது டைனோ; குனிந்து கொஞ்சினார் தச்சர்; அவர் முகத்தில் முத்தமிட்டது.
கன்னத்தை தடவியபடியே கிளம்பினார் தச்சர்; மர வீட்டில், 'டைனோ' என்ற பெயரை ஒட்டினான் சந்திரஜெயன்.
அப்போது தோழி தீவிதா வந்து சேர்ந்தாள்.
''ஒரு விஷயம் கேள்விப்பட்டியா சந்திரஜெயன்...''
''என்ன தீவி...''
''திடீரென்று விண்வெளியில் ஒரு விண்கல் தோன்றியுள்ளது; அந்த விண்கல் மணிக்கு, ௪௦ ஆயிரம் கி.மீ., வேகத்தில் பூமியை நோக்கி வருகிறது...''
''அட கடவுளே... பூமியின் எந்த பகுதியை தாக்குமாம்...''
''இந்தியாவை தான் தாக்கப் போகுதாம்... விண்கல் கடலில் விழுந்தால், சேதத்தை முழுமையாய் தவிர்க்கலாம் என்கின்றனர்...''
''இன்னும் எத்தனை மணி நேரத்தில் தாக்குமாம்...''
''இப்போது காலை மணி, ௮:௦௦ மணி; இன்னும், ௧௬ மணி நேரத்தில் தாக்க கூடும் என கணித்திருக்கின்றனர்...''
''ஓ... நள்ளிரவு, ௧௨:௦௦ மணியிலிருந்து, ௧:௦௦ மணிக்குள் என்கிறாய்...''
''ஆம் நண்பா...''
''நீயும், நானும் கூட இறைவனை வேண்டிக் கொள்வோம்; உலகின் ஒரு சிறு துரும்புக்கு கூட சேதமில்லாமல், விண்கல் கடலில் விழுந்து சாம்பலாகி விட வேண்டும்...''
அவர்கள் பேசுவதைக் கேட்ட டைனோவின் முகம் இருண்டது; இந்த விஷயம் முன்பே தெரியும் என்பது போல் முகபாவத்தை காட்டியது.
ஏதோ பிரார்த்திப்பது போல தோன்றியது.
மதியம் இந்தியா முழுக்க அந்த செய்தி பாஸ்பரஸ் துண்டாய் பரபரத்தது.
'டிவி' செய்தி அறிக்கைகள் கூடுதலாய் பயமுறுத்த ஆரம்பித்தன.
'விண்கல் பூமியை தாக்கும் போது, லட்சம் டிகிரி சென்டிகிரேட் வெப்பம் பரவும். தாக்கின இடத்திலிருந்து, ௫௦ கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எந்த பொருளும் மிஞ்சாது; அனைத்தும் சாம்பலாகி போகும்...'
அனைவரும் வீடுகளில் முடங்கினர்; போக்குவரத்து அறவே நின்றது; 10 மடங்கு ஊரடங்கை மக்கள் அனுஷ்டித்தனர்.
இரவு சிலர் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை எடுத்து, ஏழைகளுக்கு வினியோகிக்க ஆரம்பித்தனர்.
பிரதமர், 'டிவி'யில் தோன்றி, மக்களை அமைதிப்படுத்தினார்; எல்லாரின் எதிர்பார்ப்புக்கு மாறாக, ராட்சஷ விண்கல் சந்திரஜெயனின் வீட்டை குறி வைத்து பாய்ந்து வந்தது.
ஷிக்கும்... ஷிக்... ஷிக்...
- தொடரும்...
- வஹித்தா நாசர்
