PUBLISHED ON : டிச 18, 2021

முன்கதை: அன்டார்டிகா பனிபாளத்தில் கிடைத்த டைனோசர் உடல் பாகத்தில் நவீன அறிவியல் மூலம் டைனோசர் குட்டியை உருவாக்கி, சிறுவன் சந்திரஜெயனுக்கு பரிசளித்தார் விஞ்ஞானி யோகிபாபு. அது இருந்த இடத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டன. இனி -
சந்திரஜெயன் வீட்டை குறி வைத்து, பாய்ந்து வந்தது விண்கல்.
காற்று மண்டலத்துக்குள் பிரவேசித்ததும், அதீத வெப்பத்தால் பொசுங்க ஆரம்பித்து, அதன் சுற்றளவு குறைந்தது.
ஒரு தேவநொடியில், விண்கல்லின் திசை மாறியது.
அது சந்திரஜெயன் வீட்டின் அருகே விளையாட்டு மைதானத்தில் விழுந்தது.
லட்சம் இரும்பு குண்டுகள் ஒரே இடத்தில், 'னங்கார்...' என விழுந்தது போல, 10 பனை மர உயரத்துக்கு, ஆரஞ்சு நிற ஜ்வாலை எழுந்தது; தொடர்ந்து, புகை மூட்டம்.
பதறி எழுந்தான் சந்திரஜெயன்.
பெற்றோரும், 'என்னாச்சு... என்னாச்சு...' என்றனர்.
''படு பயங்கரமா இடி விழுந்தது மாதிரி சத்தம் கேட்டது...''
''ஒரு வேளை விண்கல் நம்ம நகரத்தை தாக்கிருச்சோ...'' என்றார் சந்திரஜெயனின் அப்பா.
''சப்தத்தை பார்த்தால், நம்ம வீட்டு மேல விழுந்திருக்குமோன்னு சந்தேகம் வருது...''
தெரு மக்கள் அரக்க பரக்க பதறியபடி வந்தனர்.
தோட்டத்துக்கு ஓடினான் ஜெயன்; கண்கள் டைனோவை தேடின; மர வீட்டில் மூச்சு திணறியபடி அல்லாடியது.
சுற்றி எழுந்த புகையில் அனலடித்தது.
எரிமலை சாம்பல் போல, எல்லா இடங்களிலும் துாசி படர்ந்திருந்தது.
டைனோவை பத்திரமாக வீட்டுக்குள் கொண்டு வந்தான்; குளிர்பதன மூட்டப்பட்ட அறைக்குள் விட்டான்.
அது இயல்புக்கு திரும்பியது.
வெளியே, தீயணைப்பு வாகனங்கள் வந்து நின்றன.
ஏராளமான தீயணைப்பு வீரர்கள் இறங்கினர்.
விண்கல் விழுந்த இடத்தில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டிருந்தது. பள்ளத்தின் விளிம்பில் நின்று வெளிச்சம் அடித்து பார்த்தனர் மக்கள்.
'எம்மாம் பெரிய பள்ளம்... இதுல, ஆயிரம் கார், 500 லாரிகளை நிறுத்தலாம் போல... இந்த விண்கல், நம்ம வீடுகளை தாக்கியிருந்தா நொடியில் பஸ்பம் ஆயிருப்போம்...'
மிச்ச சொச்சம் தீயை, தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
ஊடகம், தொலைக்காட்சி நிருபர்கள் குழுமியிருந்தனர்; ராட்சச பள்ளத்தை வீடியோ எடுத்தனர்; தெரு மக்களிடம் நேர்காணல் செய்தனர்.
தொலைபேசியில், ''என்னடா மருமகனே... எல்லாரும் பத்திரமா இருக்கீங்களா...'' என்றார் யோகிபாபு
''ஆம் மாமா...''
''டைனோ பத்திரமா இருக்கா...''
''புகை மூட்டத்தில் மூச்சு திணறிட்டு இருந்துச்சு... அதை காப்பாத்தி, என் அறைல வெச்சுருக்கேன்...''
''விண்கல் உங்க வீட்டை குறி பார்த்து தான் வந்தது; கடைசி நேரத்துல பாதை விலகி, விளையாட்டு மைதானத்துல வெடிச்சு சிதறிருச்சு...''
''எதுக்கு நம்ம வீட்டை விண்கல் குறிப் பார்க்கணும்...''
''டைனோவை கொல்ல நடந்த சதி...''
''உயிரில்லாத விண்கல், டைனோவை கொல்ல ஏன் சதி செய்யணும் மாமா...''
''நல்ல கேள்வி... பல லட்சம் ஆண்டுகளுக்கு முன், டைனோசர்கள் எப்படி அழிந்தன...''
''விண்கல் தாக்கி...''
''அழிந்த உயிரினம் மீண்டும் உயிரோடு வந்தது இயற்கைக்கு பிடிக்கல; அதனால, விண்கல்லை ஏவி, டைனோவை அழித்தொழிக்க பாத்துச்சு இயற்கை...''
''அடக்கடவுளே...''
''விண்கற்களை பற்றி சொல்றேன் கேள்... பாறை போன்ற வஸ்துகள் சூரியனை சுற்றி வருகின்றன. விண்கற்கள், ௧௫௦ கி.மீ., நீளம் கூட இருக்கும். சில பல அடிகள் நீளமும் இருக்கும். விண்வெளியில், ௧௫ கோடி விண்கற்கள் சுற்றி வருகின்றன. அவற்றின் ஒட்டு மொத்த எடை ஏறக்குறைய, நிலவின் எடைக்கு சமம்; செரஸ், பல்லாஸ், வெஸ்டா எனப்படும் மூன்றும் ராட்சச விண்கற்கள்...''
''பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் டைனோசர்களை, ஒட்டு மொத்தமாய் அழித்த விண்கற்கள், எந்த வகையை சார்ந்தவை மாமா...''
''அவை, 'சி' டைப் விண்கற்கள்; இந்த வகையில், களி மண்ணும், சிலிகேட் பாறையும் கலந்திருக்கும். இப்ப உங்க வீட்டை தாக்க வந்த விண்கல்லும், சி டைப்பாதான் இருக்கும்...''
''அந்த காலத்தில், விண்கல் தாக்கி, டைனோசர்கள் எப்படி இறந்தன மாமா...''
''விண்கல் மோதலால் எழுந்த துாசி புயல், சூரிய வெளிச்சத்தை மறைத்தது; அதனால், பூமி இருட்டாய் மாறியது. நச்சு வாயுக்கள் நிரம்பின; உஷ்ணம், பூமியை வெம்மையாக்கியது. நச்சு புகையாலும், வெப்பத்தாலும் டைனோசர்கள் சுருண்டு விழுந்து இறந்தன. இன்று நீ டைனோவை புகை மூட்டத்திலிருந்து பாதுகாத்திருக்கா விட்டால் இறந்திருக்கும்...''
''கடவுளே... நிஜமாவா...''
''ஆம்... சமயோசிதமாக செயல்பட்டுருக்க...''
''இத்தோடு விண்கல் தாக்குதல் முற்று பெறுமா அல்லது மீண்டும் தாக்கி டைனோவை அழிக்க பார்க்குமா...''
- தொடரும்...
- வஹித்தா நாசர்
