தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/டைனோ என் தோழன்! (18)

டைனோ என் தோழன்! (18)

டைனோ என் தோழன்! (18)


PUBLISHED ON : ஜன 01, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 01, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதை: அன்டார்டிகா உறைபனியில் கிடைத்த டைனோசர் உடலை வெட்டி, செயற்கை முறையில், டைனோ குட்டியை உருவாக்கி, சிறுவன் சந்திரஜெயனுக்கு பரிசளித்தார் விஞ்ஞானி யோகிபாபு. அதை பொம்மை என எண்ணி விளையாட கேட்டது ஒரு குழுந்தை. இனி -

''அது பொம்மை இல்லடா... நாய், பூனைக்குட்டி போல வளர்ப்பு மிருகம்... அது வீட்டுக்கு போற நேரமாயிருச்சு... நாளைக்கி வர சொல்றேன்; அப்ப விளையாடு...''

குழந்தை முரண்டியது.

'டைனோவை துாக்கிட்டு போ சந்திரஜெயன்' என சமிக்ஞை காட்டினாள் அந்த பெண்.

துாக்கியபடி வெளியேறினான் சந்திரஜெயன்.

அவனை தேடி வீட்டு வாசலில் இரண்டு பேர் நின்றிருந்தனர்.

சந்திரஜெயனை கண்டதும், 'வணக்கம்... நாங்க, 'அணில்' சிறுவர் பத்திரிகையிலிருந்து வருகிறோம்; அட்டைப்படத்துக்கு, உங்க டைனோ புகைப்படம் போடலாம்ன்னு நினைக்கிறோம். அனுமதிப்பீரா...' என்றனர்.

''அணில் பத்திரிகை எனக்கு மிகவும் பிடிக்கும்; தாராளமா புகைப்படம் எடுத்துக்கோங்க...''

டைனோவை துாக்கி அணைத்தபடி போஸ் கொடுத்தான் சந்திரஜெயன்.

புகைப்படங்களை எடுத்து தள்ளினார் புகைப்படக்கலைஞர்.

''எப்ப பிரசுரமாகும்...''

''இன்னும் ரெண்டே வாரத்தில்...''

''இருங்க... காபி குடிச்சுட்டு போகலாம்...''

'பரவாயில்ல... நாங்க கிளம்புறோம்...'

இருவரும் புறப்பட்டு சென்றனர்.

மறுநாள், டைனோவுடன் நடைப்பயிற்சிக்கு கிளம்பினான் சந்திரஜெயன்.

நான்கு வீடுகள் தாண்டியிருக்க மாட்டான்... எதிரே ஒரு தெரு நாய் வந்தது; அதன் பார்வைக்கு டைனோ வினோதமாக தெரிய, குரைக்க ஆரம்பித்தது; கால்களைப் பின்னி மறுகியது டைனோ. தெருவின் இன்னொரு முனையிலிருந்து, மற்றொரு நாய் வந்தது.

அதுவும் கொடூரமாய் முகத்தை வைத்தபடி குரைத்தது.

சில நிமிடங்களில், ஏழெட்டு நாய்கள் கூடின.

சந்திரஜெயன் பிடியிலிருந்த சங்கிலியை அறுத்தபடி, பயத்தில் தாவி ஓட ஆரம்பித்தது டைனோ.

கொலை வெறியுடன் துரத்தின நாய்கள்.

டைனோ ஓட, நான்கைந்து அடி துாரத்தில், ஏழெட்டு நாய்கள் தொடர்ந்தன.

திகைத்தபடி, 'என்ன காரியம் செய்தோம்... தோட்டத்து மர வீட்டில் டைனோவை பாதுகாக்காமல், வெளியே அழைத்து வந்தது பெரிய தப்பு. நேற்று எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை; இன்று அப்படி இல்லை போலிருக்கிறது. என் உயிரை கொடுத்தாவது டைனோவை பாதுகாப்பேன்' என, எண்ணியபடி, டைனோவை பிடிக்க ஓடினான்.

அதிவேகமாக ஓடிய டைனோ, திடீரென நின்றது; சுழன்று திரும்பியது; குட்டி பற்களை விரித்துக் காட்டியபடி, துரத்தி வந்த நாய்களை பயமுறுத்தியது. கொடூர குரலில் ஓலமிட்டது; தலை முதல் வால் வரை அதன் ரோமங்கள் சிலுப்பி நின்றன.

டைனோவை சுற்றிய நாய்கள் வட்டமிட்டு, பதிலுக்கு குரைத்தன.

நாய்கள் மீது பாய தயாரானது டைனோ.

விக்கித்து நின்றான் சந்திரஜெயன்.

அந்த நொடியில்...

மெல்லிய சீழ்க்கை சத்தம் கேட்டது. அது, நாய்களுக்கு பழக்கமான சத்தம்! அவற்றின் கவனம் டைனோ மீது பாய்வதிலிருந்து விலகியது. திரும்பி, சீழ்க்கை சத்தம் வந்த திசையை பார்த்தன நாய்கள்.

பிஸ்கெட் பாக்கெட்டுடன் நின்றிருந்தாள் தீவிதா.

''வாங்க செல்லங்களா...''

வாலை ஆட்டியபடி, தீவிதாவிடம் போயின நாய்கள்.

ஓடோடி சென்று, டைனோவை துாக்கினான் சந்திரஜெயன்.

''ஒரு நிமிஷம் பயந்தே போயிட்டேன்... காப்பாற்றிய கடவுளுக்கும், உனக்கும் நன்றி...''

பிஸ்கெட்களை நாய்களுக்கு போட்டபடி, ''டைனோ விரோதி இல்லை... சந்திரஜெயனின் தோட்டத்தில் நிரந்தரமாக குடியிருக்கப் போகும் கூட்டாளி...'' என்று அறிவுரை புகட்டினாள் தீவிதா.

நாய்கள் புரிந்து கொண்டன.

''இனி, டைனோவுடன் நட்பு பாராட்டுங்க...''

சற்று சாந்தமாகி, 'கிர்...' என உறுமின நாய்கள்.

டைனோவை இறக்கி விட்டான் சந்திரஜெயன். நாய்கள் நட்புடன் ஓடி வந்தன.

மிகுந்த மகிழ்ச்சியில், 'ழீயேய்...' என சத்தமிட்டது டைனோ.

மறுநாள் -

தலை மட்டும் வெளியே தெரியும்படி, ஒரு துணிப்பை தைத்து, அதற்குள், டைனோவை அமர வைத்தான் சந்திரஜெயன்.

''என்னடா செய்யற...'' என்றார் அப்பா.

''டைனோவை பள்ளிக்கு அழைத்துப் போக போறேன்...''

- தொடரும்...

- வஹித்தா நாசர்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us