தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பொக்கிஷம் (18)

பொக்கிஷம் (18)

பொக்கிஷம் (18)


PUBLISHED ON : ஆக 14, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 14, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்றவாரம்: சிங்கனும் கேசரியும் சென்ற கப்பல் கடலில் மூழ்கியது. இருவரும் கட்டைகளை பிடித்தபடி மிதந்தனர். மறுநாள் காலை அவ்வழியே வந்த மேலைநாட்டு படகு ஒன்று அவர்களை மீட்டது. இனி-



கடுங்குளிரால் உடல்கள் விரைத்து கட்டை போல் காணப்பட்டது. கேசரியால் தூக்க முடியவில்லை. உடனே, அந்த படகின் தலைவனும் சேர்ந்து தூக்கி சிங்கனை மெல்ல படகில் போட்டனர்.

அவன் உடல் இன்னமும் அசைக்க முடியாமல் கட்டை போல் இருந்தது. உடனே அந்த மேலை நாட்டு தலைவனும், கேசரியும், அவன் உள்ளங்கால்களை சூடு பறக்க தேய்த்தனர்.

ம்... மெல்ல முனகினான் சிங்கன்.

''கேசரி நான் தண்ணீரில் இருந்தபோது எதுவும் தெரியலடா. ஆனால், இப்போ தண்ணியை விட்டு வந்ததும் தான் எந்த அளவுக்கு பாதிக்கப் பட்டிருக்கிறேன் என்பது புரிகிறது!''

''அய்யா மீட்புகலத்தின் தலைவரே வணக்கம்!''

''ம்... நான் தலைவன் அல்ல... படகோட்டி அவ்வளவே!''

''எப்படியோ நல்ல சமயத்தில் கேசரியை யும், அவன் உதவியால் என்னையும் காப்பாற்றி இந்த மேலை நாட்டுக்கு பெரும் கடமை செய்திருக்கிறீர்கள்!'' என்றான் சிங்கன்.

''என்ன? உங்களை காப்பாற்றியதால் எங்கள் நாட்டுக்கு என்ன இருக்கிறது. நான் செய்தது வெறும் மனிதாபிமானம் கொண்டது. அவ்வளவுதான்!''

''இல்லை. உங்களுக்கு தெரியாமல் அதற்கு மேலும் ஒரு ரகசியம் இருக்கிறது. நாங்கள் போயிருந்தால் அந்த ரகசியம் இந்த மேலை நாட்டுக்கு தெரியாமலேயே போயிருக்கும்!''

''நீங்கள் கீழை நாட்டை சேர்ந்தவர்கள்தானே. எங்களுக்காக உங்களிடம் அப்படி என்ன ரகசியம் இருக்க முடியும். அப்படி என்றால் வழி தவறி புயலால் அடித்து வரப்பட்ட மீனவர்கள் இல்லையா நீங்கள்!''

''இல்லை. நாங்கள் உளவாளிகள். ஆம் மேலை நாட்டிற்காக கீழை நாடுகளில் உளவு பார்க்கும் உளவாளிகள். இதுமட்டும் தான் என்னால் கூறமுடியும். அதுவும் தாங்கள் எங்களை காப்பாற்றியதால்!''

''அப்படி என்றால் உங்கள் பயணம்?''

''நாங்கள் வந்ததே உங்கள் நாட்டுக்குத் தான். ஆனால், வழி தெரியாமல் எங்கோ போய்விட்டோம். நல்ல வேளையாக புயலும் வந்தது. நீங்களும் வந்தீர்கள். இல்லை யென்றால், அய்யோ நான் எப்படி உங்கள் ராஜ தந்திரிக்கு பதில் சொல்வேன்!''

''என்ன எங்கள் நாட்டு ராஜ தந்திரியை தங்களுக்கு தெரியுமா?'' என்றான் படகோட்டி.

''தெரியுமாவா... அவர் இருப்பதே எங்கள் தலைவரிடம் தான்!''

''அய்யோ அப்படி என்றால் நீங்கள் ராஜ விருந்தினர்கள் என்று நினைக்கிறேன். நான் இப்போது என்ன செய்ய வேண்டும். கட்டளை மட்டும் கொடுங்கள் போதும்,'' என்றான் அந்த படகோட்டி.

''நண்பா நாங்கள் உடனே மன்னரை காணவேண்டும்!''

''என்ன மன்னரையா? அது என்னால் இயலாது. ஆனால், கீழைநாட்டுக்கான குறும்படைத்தலைவர் இருக்கிறார். நான் அவரிடம் உங்களை ஒப்படைக்கிறேன். மன்னரை காண்பதும் காணாததும் உங்கள் செயலைப்பொறுத்து இருக்கிறது!'' என்றான்.

''நல்லது. அப்படியே செய்யுங்கள்!''

அந்த படகு வேகமாக சென்று கொண்டி ருந்தது. இப்போது பல வண்ணங்களில் ஆன கொடிகள் பறக்க விடப்பட்டு ஒரு சிறு தீவு காணப்பட்டது.

''கீழை நாட்டு ஒற்றர்களே. இந்த தீவுகள் தான் எங்களின் காவல் தீவு. எங்கள் நாட்டிற்கு யார் நுழைய வேண்டுமானாலும் அதற்கு என்று பிரத்யேகமாக எங்கள் அரசி யாரின் உருவம் பொறித்த தங்க லட்சினை கொடுக்கப்பட்டிருக்கிறது.

எங்கள் நாட்டு மீனவர்களுக்கும் எங்களை போன்ற ராஜாங்க பணியாற்றுவர்களுக்கும் அது கிடைக்கும். ஆனால், உங்களை போன்ற வர்கள் இந்த தீவில் இறக்கி வந்த விவரத்தை கூறி அதன் உண்மைத்தன்மையை கண்டறிந்த பின் எங்கள் நாட்டிற்கு அனுப்பப்படுவீர்கள். நீங்கள் மீனவர்களாக இருந்தால் புயலில் திசை மாறி வந்து விட்டதாக எங்கள் பாது காப்பு தீவின் தலைவனே படகு கொடுத்து உங்களை அனுப்பி வைப்பார். ஆனால், உங்கள் காரியமோ ராஜ காரியம். எனவே, எச்சரிக்கையுடன் செயல் ஆற்றுங்கள். நான் தலைவரிடம் சென்று உங்களை ஒப்படைத்த பின் நான் என் இடத்திற்கு சென்று விடுவேன். என்னிடம் எதுவும் கூறியதாக தலைவரிடம் கூறிவிடாதீர்கள். எந்த ரகசியமும் நாட்டு மக்களுக்கு தெரிவதை எங்கள் நாடு விரும்பாது. எச்சரிக்கை!'' என்று கூறியவன் அவர்களை காவல் தீவின் தலைவனிடம் ஒப்படைத்தான். பின் அவன் சென்று விட்டான்.

''கீழை நாட்டு வாசிகளே! உங்களுக்கு பயணம் செய்ய படகு வேண்டும் அவ்வளவு தானே!''

''இல்லை பிரபு. எங்களுக்கு உடனே மன்னரை பார்க்க வேண்டும்!''

''மன்னரையா... நீங்கள் யார்?''

''உங்கள் நாட்டின் ஒற்றர்கள். ஆம். கீழை நாடுகளை வேவு பார்த்து உளவு சொல்பவர் கள். நாங்கள் உங்கள் ராஜதந்திரிக்கும், மன்னருக்கும் கட்டுப்பட்டவர்கள். உங்க ளிடம் எல்லாம் நாங்கள் எதுவும் பேசக் கூடாது என்பது ராஜதந்திரியின் கட்டளை!''

''ஓ. சரி... அப்படி என்றால் அரச லட்சினை வைத்துள்ளீர்களா?''

''ஹா... ஹா'' உரக்கச் சிரித்தான் சிங்கன்.

''ஏன் எக்காளமிடுகிறாய். கிண்டலா?''

''அடித்த புயலில் எங்கள் மூளையே கழண்டு விழும் போது, அந்த லட்சினை மட்டும் அப்படியே இருக்குமா? ராஜதந்திரியார் கொடுத்த மிக மிக ராஜ ரகசியம் கொண்ட செய்தியை கூறுவதற்காக உயிரை கையில் பிடித்திருந்த நாங்கள் லட்சினையை பற்றியா கவலைப் படுவோம். முடிந்தால் அனுப்புங்கள்; இல்லை நாங்கள் ராஜதந்திரியாரிடம் உண்மையை கூறி எங்கள் இயலாமையை தெரிவித்து விடுகிறோம்,'' என்று சிங்கன் பாங்காக பேசினான்.

''சரி! இதற்கு மேல் நான் ஒன்றும் சொல் வதற்கில்லை. ஆனால், உங்கள் எண்ணம் தவறானதாக இருந்தால் உங்களுக்கு கிடைக்கும் பரிசு மரணம்; எச்சரிக்கை!'' என்ற தலைவன், முதலில் உங்களை எங்கள் தளபதி யிடம் அழைத்து செல்கிறேன். அவரே நேரில் உங்களை மன்னரிடம் அழைத்து செல்வார் என்றவன், தான் ஒரு பெரும் குதிரையில் ஏறி இருவரையும் இரு குதிரை வீரர்கள் உதவி யுடன் தளபதியின் மாளிகைக்கு அழைத்து வந்தான். தளபதிக்கு மரியாதை செலுத்தி விட்டு விவரம் கூறி உடனே, அங்கிருந்து வெளியேறினான் குறும்படைத்தலைவன்.

தளபதி கம்பீரமாக அமர்ந்திருந்தான். அவன் உடையே பார்ப்பதற்கு ஒரு அச்சம் தருவதாக இருந்தது. இடையில் பெரும் தோலால் ஆன பட்டயம் அணிந்திருந்தான். அதனுள் நிறைய கைத்துப்பாக்கிகள் வேறு இருந்தன.

சிங்கனையும், கேசரியையும் ஒரு அலட்சிய பார்வையுடன் நோக்கினான்.

''ம். யார் நீங்கள்?'' அவன் குரலில் கம்பீரம் இருந்தது.

''ராஜதந்திரியின் உளவாளிகள்!''

''ஆதாரம்?'' அவர்களை சந்தேகத்துடன் பார்த்தான்.

அடித்த புயலில் சிக்கியதால் எல்லாம் தொலைந்து விட்டது.

''இதை நான் நம்ப வேண்டும்...'' தளபதி கோபத்துடன் பார்த்தான்.

''வேறு வழி இல்லை. பவுர்ணமி நெருங்கிக் கொண்டிருக்கிறது. விஜயபுரி நாட்டின் பொக்கிஷ ரகசியம் தெரிந்து கொண்டாகிவிட்டது. அதனால் உடனே விஜயரெங்கனை அழைத்துக்கொண்டு அவனுடன் உங்கள் நாட்டில் போருக்கு உபயோகப்படுத்தும் துப்பாக்கி மற்றும் ரவைகளை கொடுத்து அனுப்புமாறும் ராஜ தந்திரி கூறினார். இது உடனே நிகழ்ந்தாக வேண்டும். பவுர்ணமி அன்று போர் தொடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாம். அப்போது மட்டும் உங்கள் வீரர்கள் போர்கப்பல்களில் வந்தால் போதும்,'' என்றும் கூறிவிட்டார்.

''அப்படி என்றால் இந்த துப்பாக்கிகளும் ரவைகளும் எதற்கு?''

''அதுதான் ராஜதந்திரியின் ராஜதந்திரம்!''

''என்ன உளறுகிறாய்!'' தளபதி கத்தினான்.

''ராஜதந்திரியின் செயலை இப்படி தாங்கள் கொச்சைப்படுத்துவது நல்லதல்ல. இப்போது ராஜ தந்திரியும், குறும்படைத் தலைவனும் விஜயபுரி நாட்டின் தளபதியின் ராஜ விருந்தினர் களாக இருக்கின்றனர். தளபதியின் மூலம் கைதேர்ந்த மற்றும் திறமைமிக்க வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர். அவர்களுக்கு துப்பாக்கி பயற்சி அளிக்க குறும்படைத் தலைவனிடம் உத்தரவிட்டுள்ளார் ராஜதந்திரி. அதற்குத்தான் துப்பாக்கியும், ரவைகளும் தேவைப்படுகின்றன!''

''எங்கள் வீரர்கள் ஏன் பவுர்ணமி அன்று போர் தொடுக்க வரவேண்டுமாம்?'' தளபதி ஒரு சந்தேகம் கலந்த பார்வையோடு கேட்டான்.

- தொடரும்...

- பூரணி


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us