
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி, அரசு உயர்நிலைப் பள்ளியில், 1958ல், 10ம் வகுப்பு படித்த போது வகுப்பாசிரியராக இருந்தார், பாலுச்சாமி. அன்று, 'ஆண்டு விழா பேச்சு போட்டியில், யார், யார் பங்கேற்கிறீர்கள்...' என்று கேட்டார்.
வகுப்பில் ஐந்து பேருடன், மாற்றுத்திறனாளியான நானும் கை துாக்கினேன்; மாணவர்கள், என்னை பார்த்து ஏளனமாக சிரித்தனர். அதைப் பொருட்படுத்தாமல், மேடையில் பேச பயிற்சி செய்தேன்.
விழா மேடையில் சரளமாக பேசியதால், பலத்த கைதட்டல் கிடைத்தது. பரிசுக்குரியோரை தேர்வு செய்த தலைமையாசிரியர், 'முதல் பரிசு சீனிவாசன்...' என்றார். ஏளனம் செய்தவர்கள் முகம் சுருங்கியது.
மேடையில் பரிசு வழங்கி, 'முயற்சிக்கு ஊனம் தடையில்லை... அது உடலில் இருக்கலாம்; மனதில் இருக்க கூடாது; உன்னால் முடியும் தம்பி... என்ற வாசகத்திற்கு இணங்க வெற்றி பெற்றுள்ளார் இந்த மாணவர்... பலத்த கைத்தட்டலால் அவரை உற்சாகப்படுத்துங்கள்...' என்றார்.
அந்த அறிமுகம் பெரும் நம்பிக்கையை தந்தது. நன்றாக படித்து, ஊரக வளர்ச்சி துறையில் பணியாளராக சேர்ந்தேன். பதவி உயர்வுகளுடன் ஓய்வு பெற்று, நிம்மதியாக வாழ்கிறேன்.
எனக்கு இப்போது, 80 வயதாகிறது; தன்னம்பிக்கையுடன் முன்னேற பாதை அமைத்து தந்த அந்த ஆசிரியரை நினைவில் கொண்டு தினமும் வணங்கி வருகிறேன்.
- எம்.எஸ்.சீனிவாசன், மதுரை.
தொடர்புக்கு: 75027 41826