
திண்டுக்கல் மாவட்டம், பழனி, காரமடை அரசு மேல்நிலைப் பள்ளியில், 2013ல், 12ம் வகுப்பு படித்தபோது வகுப்பு ஆசிரியையாக இருந்தார் ஜயரஞ்சனி. அன்று இந்திய பொருளாதாரத்தில், 'செல் விகிதம்' என்ற பாடத்தை நடத்திக் கொண்டு இருந்தார்.
அப்போது, பள்ளி விடுமுறை பற்றிய பொது அறிவிப்பு வந்தது. அதை கேட்டதும், வகுப்பில் மேற்கொண்டு யாரும் பாடத்தை கவனிக்கவில்லை. கண்டபடி வம்பு பேசிக் கொண்டிருந்தோம். எங்களை அமைதிப்படுத்தி, பாடம் கற்பிக்க முயன்றார் ஆசிரியை.
அதற்கு மரியாதை இல்லாமல் போகவே கடுப்பாகி, 'இனி, இந்த வகுப்பில் பாடம் நடத்த மாட்டேன்...' என்று கூறியபடி கோபத்தில் வெளியேறினார். தலைமை ஆசிரியரிடம் கண்ணீருடன் விளக்கம் சொல்லி, எங்களுக்கு வகுப்பு எடுக்க வருவதை தவிர்த்தார். பின், வரவே இல்லை.
பயிற்சி ஆசிரியை ஒருவர் வந்து கடமைக்கு பாடம் நடத்தினார். அது, யாருக்கும் புரியவில்லை. பொதுத்தேர்வில் கேள்விகளுக்கு சரியாக பதில் எழுத இயலவில்லை. மனப்பாடம் செய்திருந்ததை எழுதி, குறைந்த அளவு தான் மதிப்பெண் பெற முடிந்தது. பின், அந்த ஆசிரியையிடம் மன்னிப்பு கேட்க முயன்றோம். ஆனால், சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
படிப்பை சிறப்பாக முடித்து, அரசு போட்டி தேர்வு எழுதினேன். அதில், அந்த ஆசிரியை நடத்திய பாடத்தில் இருந்து கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதைக் கண்டதும், வகுப்பில் இடையூறு செய்ததால் பாடம் நடத்த இயலாமல் வெளியேறிய அந்த வேதனை முகம் நினைவில் வந்தது.
எனக்கு, 27 வயதாகிறது. பெரியோருக்கு இடையூறு செய்து கோபத்திற்கு உள்ளாக்க கூடாது என்ற பாடத்தை அந்த சம்பவத்தில் இருந்து கற்றுள்ளேன்.
- கலைவாணி, திண்டுக்கல்.