தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஊக்கமது கைவிடேல்!

ஊக்கமது கைவிடேல்!

ஊக்கமது கைவிடேல்!


PUBLISHED ON : நவ 27, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 27, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லிவாக்கம் அரசு பள்ளியில், 8ம் வகுப்பு படித்து வந்தான் சிவகுரு.

பள்ளி விளையாட்டு போட்டியில் பங்கேற்க ஆலோசனை கூறினார் விளையாட்டு ஆசிரியர்.

அங்கு வந்த வகுப்பு தோழன் கோபி, நக்கலாக சிரித்தபடி, ''போயும், போயும் இவன் கிட்ட எதுக்கு ஐயா, ஓட்டப் பந்தயம் பற்றி பேசுறீங்க; குண்டு பூசணிக்காய்க்கு, கையும், காலும் முளைச்ச மாதிரி இருக்கிறான். இவன் உருண்டு, புரண்டு வர்றதுக்குள்ள, விளையாட்டு விழாவே முடிஞ்சிடும்...' என கிண்டல் செய்தான்.

''கவலைப்படாதே... முயற்சி செய்தால் நிச்சயமாக பரிசு பெறலாம்...'' என நம்பிக்கை ஊட்டினார் ஆசிரியர்.

மறுநாள் -

பயிற்சியின்போது சிவகுருவிற்கு வியர்த்து கொட்டியது; மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியது.

கவலையுடன், ''நடக்கவே சிரமமாக இருக்கு... இந்த நிலையில் எப்படி ஓடுவது...'' என, அப்பாவிடம் கேட்டான்.

''கவலைப்படாதே... யோகாசன வகுப்பில் சேர்த்து விடுகிறேன். விடாமல் பயிற்சி செய்; நொறுக்குத் தீனியை தவிர்த்து, பசித்தால் மட்டும் உணவு சாப்பிடு; ஒரே மாதத்தில் பலன் தெரியும்...'' என்றார் தந்தை.

யோகாசன வகுப்பில் தவறாமல் பயிற்சி செய்தான்; அம்மா தந்த சத்தான உணவையும், அளவுடன் உண்டான். உடலில் தேவையற்ற சதை கரைந்து, வளைவும், வனப்பும் ஏற்பட்டது; மனதில் மகிழ்ச்சியும், தன்னம்பிக்கையும் பிறந்தது.

சில நாட்களுக்கு பின் -

விளையாட்டு ஆசிரியரை சந்தித்தான் சிவகுரு.

''நல்லா மெலிந்து உடல் நலமாக இருக்கிறாய்... இது எப்படி நடந்தது...'' என்று பாராட்டினார்.

பயிற்சி செய்வது பற்றி கூறினான்.

மகிழ்ச்சியுடன், ''பயிற்சியை தொடர்ந்தால், மேலும் பலன் கிடைக்கும்; ஓட்ட பந்தயத்தில் வெல்ல நினைக்கிறாய் அல்லவா... முதலில், 100 மீட்டர் துாரத்தை, எத்தனை நிமிடங்களில் கடக்கிறாய் என கணக்கிட்டு கொள். பின், அதைவிட குறைந்த நேரத்தில் கடக்க முயற்சி செய்; பின், 200 மீட்டர் துாரம் ஓட பயிற்சி செய்... படிப்படியாக துாரத்தை கூட்டி, நேரத்தை குறைத்து, வேகமாக ஓடி பழகு; வெற்றி உன்னதாகும்...'' என்றார் ஆசிரியர்.

தினமும் சிவகுரு பயிற்சி செய்வதைப் பார்த்து, அக்கம் பக்கத்து சிறுவர், சிறுமியரும் சேர்ந்தனர்.

தினமும், எத்தனை நிமிடங்கள் ஓடினான்; எவ்வளவு துாரத்தை கடந்தான் என்ற, புள்ளி விபரத்தைக் கூறி, விடாமல் உற்சாகப்படுத்தி வந்தாள் அவன் தோழி. அது தன்னம்பிக்கையை ஊன்றியது.

அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றான் சிவகுரு; கிண்டல் செய்த வகுப்புத் தோழன் பின்தங்கினான். கர்வத்தில், சரியாக பயிற்சி செய்யவில்லை அவன். வெற்றிக்கு விடா முயற்சியும், ஊக்கமும் தான் தேவை. இதை, 'ஊக்கமது கைவிடேல்' என்று அறமாக உரைத்துள்ளார் பழம்புலவர் அவ்வையார்.

குழந்தைகளே... எந்த செயலிலும் வெற்றி அடைய ஊக்கத்தோடு முயற்சி செய்ய வேண்டும்!

பா.செண்பகவல்லி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us