PUBLISHED ON : ஜூலை 19, 2019

விழுப்புரம் மாவட்டம், சிங்கனுார், ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில், 2001ல், 11ம் வகுப்பு படித்தேன்.
எங்கள் வேதியியல் பாட ஆசிரியர் முருகேசன், தனித்தன்மையுடன் பாடம் நடத்துவார். வகுப்பறைக்குள் நுழைந்ததும், கருத்துள்ள ஒரு பாடல் பாடிய பின் தான், பாடத்தை துவங்குவார்.
நாங்கள் உற்சாகத்துடன் கவனம் செலுத்துவோம்.
அரையாண்டு தேர்வுகள் முடிந்த பின், சோகமாக வகுப்புக்கு வந்தவர், 'அரசு பொது தேர்வுக்கு, உங்களை நல்ல முறையில் தயார் படுத்தி விடலாம் என நினைத்தேன்; அதற்குள் பணிமாறுதல் வந்து விட்டது...' என்றார்.
வேதனை அடைந்த எங்களுக்கு, 'பெற்றோர் கஷ்டப்படுவதை உணர்ந்து, நன்றாக படியுங்கள்...' என, அறிவுரை தந்தார்.
கடைசி வகுப்பில், 'கண்கள் இரண்டும் உன்னைக் கண்டு பேசுமோ... காலம் இனி நம்மை ஒன்றாய் சேர்க்குமோ...' என்று பாடி, பிரியா விடை பெற்றார்.
அவர் அறிவுரையை ஏற்று, நன்றாக படித்து தேர்ச்சி பெற்றேன். எனக்கு, 32 வயதாகிறது. பள்ளி படிப்பை முடித்து பல ஆண்டுகளுக்கு பின்னும், கண்கள் அவரை தேடிக்கொண்டே இருக்கின்றன.
- ஆர்.ராஜ்மோகன், திண்டிவனம்.
