PUBLISHED ON : டிச 26, 2014

ஓர் ஊரில் விவசாயி ஒருவன் இருந்தான். அவன் கடின உழைப்பாளி. அவனுக்கு நீண்ட நாளைய ஆசையொன்று இருந்தது. அதாவது, தன்னுடைய மன்னரான அக்பருக்கு ஏதாவதொரு பொருளைப் பரிசாக அளிக்க வேண்டும் என்பதே அவனது ஆசை. அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு, மன்னர் அக்பரைக் காண்பதற்காக ஒருநாள் புறப்பட்டான்.
மன்னரின் அரண் மனையை அடைந்த விவசாயி, வாயிற் காப்பானிடம் தான் வந்த விவரத்தைக் கூறினான். சில நொடிகளில் மன்னரைக் காண அவனுக்கு அனுமதி கிடைத்தது.
மன்னரிடம் சென்று, அவரை வணங்கி, ''மேன்மை தங்கிய மாமன்னர் அவர்களே! உங்களுக்கென்றே ஒரு பரிசுப் பொருளை நான் பல மைல்கள் கடந்து எடுத்து வந்திருக்கிறேன். அதுவும் அதை மிகப் பாதுகாப்பாகக் கொண்டு வந்திருக்கிறேன். இந்த ஏழையின் இச்சிறு காணிக்கையைத் தாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்,'' என்று கூறி, அழகான கிளி ஒன்றைக் கொடுத்தான் அந்த ஏழை விவசாயி.
மாமன்னர் அக்பர் மன மகிழ்ச்சியுடன், அந்த ஏழை விவசாயி கொடுத்த கிளியைப் பெற்றுக் கொண்டு அவனுக்கு நன்றி தெரிவித்தார்.
ஏழை விவசாயி, மன்னரிடம் விடைபெற்றுச் செல்லும் முன், ''மன்னா! இக்கிளியைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்லியாக வேண்டும். இது எல்லாக் கிளிகளையும் போல் சாதாரண கிளி அல்ல. இது மனிதர்களைப் போலப் பேசும்; பாடும்; நடனமாடும். கோணங்கித்தனம் செய்து எல்லாரையும் சிரிக்க வைக்கும். இதையெல்லாம் சொல்வதற்கு நான் இந்தக் கிளியைக் கஷ்டப்பட்டு பழக்கியிருக்கிறேன்,'' என்று சொல்லிய விவசாயி, அக்கிளியிடம் பேசிக் காட்டினான்.
நடனமாடச் செய்தான். ஒரு பாட்டும் பாடச் சொல்லிக் காட்டினான்.
மாமன்னரும், சபையோரும் கிளியின் இந்தச் செய்கையால் பரவசம் அடைந்தனர். மாலை நேரத்தை இந்தக் கிளியைப் பயன்படுத்தி, இனிதாக பொழுது போக்கலாம் என்று எண்ணினார் அக்பர்.
அற்புதமான கிளியைக் கொண்டு வந்து கொடுத்த அந்த ஏழை விவசாயிக்கு சில தங்க நாணயங்களைக் கொடுத்தனுப்புமாறு, கருவூல அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் மன்னர். தங்க நாணயங்களைப் பெற்றுக் கொண்ட விவசாயி, மாமன்னரை மனதிற்குள் வாழ்த்தியவாறே ஊர் போய்ச் சேர்ந்தான்.
மாமன்னர் தன்னுடைய வேலைக்காரர்களில் இருவரை அழைத்து, ''இனிமேல் இந்தக் கிளியைப் பராமரிக்க வேண்டியது உங்கள் இருவருடைய பொறுப்பு. யாரும் எந்தவிதமான கேடும் இக்கிளிக்கு விளை விக்கக்கூடாது.
''சரியான நேரத்திற்குச் சரியான அளவு உணவு தர வேண்டும். இதை அடைத்து வைக்க தங்கக் கூண்டு ஒன்றைத் தயாரிப்பதற்கு ஏற்பாடு செய்கிறேன். நன்றாகப் பழக்கப்பட்ட கிளி இறந்து விடுமேயானால், அது இறந்த செய்தியினை என்னிடம் எவன் வந்து முதலில் சொல்கிறானோ, அவனையும் கொன்று விட உத்தரவிடுவேன். கிளியைக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும்,'' என்று கூறினார்.
மன்னர் கூறியதில் முதல் பாதி அந்த வேலைக்காரர்களுக்குப் பிடித்திருந்தது. ஆனால், அவர் இறுதியாகக் கூறியதைக் கேட்டு வேலைக்காரர்கள் பீதியடைந்தனர். என்றென்றும் கிளி சாகாமல் இருக்க வேண்டும் என்று தாங்கள் விரும்பிய தெய்வங்களிடமெல்லாம் மனதார வேண்டிக் கொண்டனர். கிளிக்கோ நல்ல வாழ்க்கை! அதனைப் பராமரிப்பவர்களோ மரண பயத்தில் உழன்று கொண்டிருந்தனர்.
தங்கத்தினால் கூண்டு செய்யப்பட்டது. கிளியை அக்கூண்டில் அடைத்தனர். வேலைக்காரர்கள் மன்னரின் ஆணைப்படியே அக்கிளியை நன்கு பராமரித்து வந்தனர். கிளி, தன் பாடல், ஆடல், பேச்சு மூலம் அரண்மனையில் உள்ள அனைவரையும் மகிழ்வித்துக் கொண்டிருந்தது.
மாமன்னர் மாலை நேரங்களில் கிளியைக் காண்பதற்காக வருவதை ஒரு வழக்கமாகவே ஆக்கிக் கொண்டு விட்டார். தனது மனைவி மற்றும் குழந்தைகளோடு அமர்ந்துகொண்டு, கிளியுடன் பொழுதுபோக்குவது மன்னருக்குத் தினசரி வாழ்க்கையாகி விட்டது.
விலை உயர்ந்த பழங்கள், பருப்பு வகைகள் அக்கிளிக்குக் கொடுக்கப்பட்டன. அவைகளை உண்டு கிளி கொழு கொழுவென வளர்ந்திருந் தது. கிளியைப் பராமரித்த வேலைக்காரர்கள் இருவருக்கும் மாத வருமானத்தை அதிகரித்துக் கொடுக்கும்படி மன்னர் உத்தரவிட்டார்.
தங்களுடைய வருவாய் அதிகமான போதிலும் அந்த இரண்டு வேலைக்காரர்களுக்கும் எப்போதும் நிம்மதியே இல்லை. மரணம் தங்களுக்கு எப்போது வரப்போகிறதோ என்றெண்ணி மனம் நொந்து, நடைப்பிணமாக மாறிக் கொண்டிருந்தனர்.
என்றாவது ஒருநாள் கிளி இறந்து தான் போகும். அந்தச் செய்தியை நாம் மன்னரிடம் சொல்லும் நிலை ஏற்படுமேயானால், நம் உயிரும் பாதிக்கப்பட்டுவிடுமே என்று தினசரியும் அவர்கள் அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்தனர்.
இரவு நேரங்களில் அந்த வேலையாட்கள் இருவரும் சரியாகத் தூங்குவது கூடக் கிடையாது. கிளி நலமாக இருக்கிறதா என்று ஒருவர் மாற்றி ஒருவர் பார்த்து, ''அப்பாடா! கிளி உயிரோடு இருக்கிறது,'' என்று பார்த்துப் பார்த்து நிம்மதியடைந்தனர்.
கிளி இரவில் உறங்கினால் கூட, அதை நிம்மதியாகத் தூங்க விட மாட்டார்கள் அவர்கள் இருவரும். கூண்டுக்குள் ஒரு குச்சியை விட்டு தட்டித் தட்டி கிளி அசைகிறதா என்று பார்ப்பர். கிளி கொஞ்சம் அசைந்தால் போதும்.
''அப்பாடா! கிளி உயிருடன் இருக்கிறது,'' என்றெண்ணி நிம்மதி அடைவர்.
எத்தனை அக்கறை எடுத்தும், எப்படிப் பராமரித்தும் என்ன? பூமியில் ஜனனம் எடுத்த ஜீவராசிகள் எப்படியும் ஒருநாள் மரண தேவனின் வாசலில் மண்டியிட்டுத்தான் ஆக வேண்டும். இந்த நியதிக்கு அந்த அற்புதக் கிளி மட்டும் விதிவிலக்கு ஆகிவிடுமா என்ன?
ஒருநாள் கிளி இறந்துபோயிற்று. இந்தச் செய்தியை அதாவது தாங்கள் மரணம் அடையப் போகும் செய்தியை மன்னரிடம் எப்படிச் சொல்வதென்று வேலையாட்கள் இருவரும் திகில் அடைந்தனர். சொல்லாமல் இருக்கவும் முடியாது. சொன்னால் இருவரில் ஒருவர் மரணம் அடைவது உறுதி. அதனால், செய்வதறியாது இருதலைக்கொள்ளி எறும்பு போல் துடித்துக் கொண்டிருந்தனர். சாவுக்களை அவர்களுடைய முகத்தை கவ்விக் கொண்டது. வேலையாட்கள் தங்கள் உயிர்பிச்சைக்காக யாரிடம் மன்றாடுவது என்றெண்ணி அழுது புலம்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, வழக்கமாக மன்னரைக் காண்பதற்காக வரும் அமைச்சர் பீர்பால் அந்த வழியாக வந்தார்.
- தொடரும்.
