PUBLISHED ON : ஏப் 14, 2017

நான், ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது நடந்த நிகழ்ச்சி... எங்கள் வகுப்பில், ரவி என்ற மாணவன் இருந்தான். அவனுக்கு சரியாக படிப்பு வராது. 'படிப்பு வரவில்லையே...' என்ற தாழ்வு மனப்பான்மை இல்லாமல், எல்லாரிடமும் கலகலப்பாக பேசுவான், எல்லாரையும் கலாய்ப்பான்.
ஒருநாள், கணக்கு வாத்தியார், பாடம் நடத்தி கொண்டிருந்தார். எல்லாரும் கணக்கை போட்டு வாத்தியாரிடம் காண்பித்தோம். ஆனால், அவன் மட்டும் நோட்டை காட்டவில்லை. 'என்ன ரவி கணக்கை போட்டுட்டியா...' என்றதும், 'என்ன கணக்கு போட்டிருக்கீங்க... ஐந்தில் எப்படி சார் ஏழு கழியும்...' என்றான்.
'பக்கத்தில் ஒன்று கடன் வாங்கணும்...' என்றார். உடனே அவன், 'அது மட்டும் முடியாது சார்... எங்க அப்பா யாரிடமும், கடன் வாங்க கூடாதுன்னு சொல்லியிருக்கார்...' என்றானே பார்க்கலாம், வாத்தியார் உட்பட, வகுப்பறையே சிரிப்பில் மூழ்கியது.
அதுமட்டுமா, முழு ஆண்டு தேர்வில், வாத்தியார் வினா தாளை கொடுத்து விட்டு, எல்லாரிடமும், 'இரண்டரை மணி நேரம் தான் அவகாசம். தெரியாததை பார்த்து முழிச்சிட்டிருந்து, நேரத்தை வீணடிக்காமல், எது தெரியுமோ அதை முதலில் எழுதுங்கள்...' என்றார். ஆனால், ரவியோ சிறிது நேரத்தில் தூங்கி விட்டான்.
அதை கண்டதும், 'ஏண்டா பரீட்சை நேரத்தில் தூங்குற...' என்றார் வாத்தியார். 'நீங்க தானே சார், 'தெரியாததை பார்த்து முழிச்சிட்டிருக்காமல், எது தெரியுமோ அதை செய்யுங்கள்'ன்னு சொன்னீங்க... எனக்கு தெரிந்ததை செய்தேன்...' என்று வெகுளியாக கூற, அனைவரும் சிரித்து விட்டோம். அவனை இப்போது நினைத்தாலும், சிரிப்பு தான் வருகிறது...
- பா.ஹிட்லர், மதுரை.
