PUBLISHED ON : பிப் 19, 2016

முல்லைபாளையம் என்னும் ஊரில் செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவரிடம் இருந்த வேலையாள் எப்போதும் 'தொண தொண' வென்று பேசிக் கொண்டே இருந்தான்.
செல்வந்தர் அவனிடம், ''என்ன நேரம் போவது தெரியாமல் எப்போதும் பேசிக் கொண்டிருக்கிறாய். இனி இப்படிப் பேசாதே,'' என்று கண்டித்தார்.
''நான் என் வேலையை ஒழுங்காகச் செய்கிறேன். நான் அதிகம் பேசுவதால் யாருக்கும், எந்தத் தொல்லையும் இல்லை. என்னை எதற்காகக் கண்டிக்கிறீர்கள்?'' என்று கேட்டான்.
''உன் பேச்சினால் எனக்கு இழப்பு ஏற்படட்டும். அதன்பிறகு நீ இங்கே வேலையில் இருக்க முடியாது. உன்னை விரட்டி விடுவேன்,'' என்று கடுப்புடன் கூறினார் செல்வந்தர்.
''எப்போது பேச வேண்டும், எப்போது பேசக் கூடாது என்பது எனக்குத் தெரியும்,'' என்றான் வேலையாள்.
நாட்கள் சென்றன -
ஒருநாள், அவனை மலர்க் கண்காட்சிக்கு அழைத்து சென்றார் செல்வந்தர்.
அங்கே விலை உயர்ந்த ரோஜாச் செடிகள் பல காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. அந்தச் செடிகளில் சிலவற்றைத் தன் வீட்டுத் தோட்டத்தில் நட்டால் தோட்டம் அழகு பெறும். எல்லாரும் என்னைப் பாராட்டுவார் என்று நினைத்தார் செல்வந்தர்.
நிறைய பணம் கொடுத்து நான்கு செடிகளை வாங்கினார்.
''இந்த நான்கு செடிகளையும் ஒரு மண் தொட்டிக்குள் வை. அதைக் கவனமாகத் தூக்கிச் செல். நம் வீட்டுத் தோட்டத்தில் நடு. நிறைய பணம் கொடுத்து வாங்கிய ரோஜாச் செடிகள் இவை,'' என்றார் செல்வந்தர்.
''நான் கவனமாக நடந்து கொள்வேன். நீங்கள் வீட்டிற்குச் செல்லுங்கள்,'' என்றான் வேலையாள்.
பசுமையான இலைகளுடன் இருந்த அந்த நான்கு செடிகளையும் ஒரு தொட்டிக்குள் வைத்தான். அந்த தொட்டியை தலையில் தூக்கி வைத்தவாறு செல்வந்தர் வீட்டை நோக்கி நடந்தான் வேலையாள்.
எதிரில் தலையில் கூடையுடன் ஒருவன் வந்தான். அந்தக் கூடையில் இரண்டு ஆட்டுக் குட்டிகள் இருந்தன.
அவனைப் பார்த்த செல்வந்தரின் வேலையாள் நின்றான்.
''என்ன ரவி! தலையில் கூடையுடன் எங்கே செல்கிறாய்?'' என்று கேட்டான்.
''இந்த ஆட்டுக் குட்டிகளை விற்பதற்காக சந்தைக்குச் செல்கிறேன். நீ எங்கே இந்தப் பக்கம்? தலையில் தொட்டியைத் தூக்கி வருகிறாய்,'' என்று கேட்டான் ரவி.
''நான் மலர்க் கண்காட்சியிலிருந்து வருகிறேன். என் முதலாளி நிறைய பணம் கொடுத்து வாங்கிய ரோஜாச் செடிகள் இந்தத் தொட்டியில் உள்ளன. இதை முதலாளியின் வீட்டுத் தோட்டத்தில் நடப் போகிறேன். இவற்றில் பல வண்ணங்களில் ரோஜாப் பூக்கும். பார்க்க மிக அழகாக இருக்கும்,'' என்றான்.
இப்படியே இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
கூடைக்குள் இருந்த ஆட்டுக் குட்டிகள் செடிகளில் இருந்த கொழுந்து இலைகளைப் பார்த்தன. தலையை நீட்டி அந்த நான்கு ரோசாச் செடிகளையும் முழுமையாகத் தின்று விட்டன.
''நேரமாகி விட்டது. நான் வருகிறேன்,'' என்று புறப்பட்டான் ரவி.
''எனக்கும் வேலை உள்ளது,'' என்று வேலையாளும் அங்கிருந்து புறப்பட்டான்.
வீடு வந்து சேர்ந்த வேலையாள் தொட்டியை இறக்கி வைத்தான். அதில் இருந்த ரோஜாச் செடிகள் முழுமையாகக் கடிக்கப்பட்டு
இருப்பதைக் கண்டு திகைத்தான்.
'இது எப்படி நிகழ்ந்து இருக்கும்? நான் கவனமாகத்தானே இருந்தேன்' என்று குழம்பினான் வேலையாள்.
வழியில் ரவியுடன் பேசிக் கொண்டு நின்றேனே. அவன் கூடையில் இருந்த ஆட்டுக் குட்டிகள் இதைத் தின்றிருக்க வேண்டும் என்ற உண்மை அவனுக்குப் புரிந்தது.
'ஐயோ! நானே அந்த ஆட்டுக் குட்டிகள் செடிகளை உண்ண தொட்டியைச் சுமந்து நின்றேனே... முதலாளி வந்து கேட்டால் என்ன செய்வேன்' என்று தவித்தான்.
செல்வந்தர் தொட்டியில் செடிகள் இல்லாததைப் பார்த்தார். அவனிடம் காரணம் கேட்டார்.
நடந்ததை எல்லாம் சொன்னான் அவன்.
''முட்டாள் என்று தெரியாமல் உன்னை வேலைக்கு வைத்தேனே. உன்னால் எனக்கு பணம் இழப்பு. இனி உனக்கு இங்கே வேலையில்லை,'' என்று அவனை விரட்டினார் செல்வந்தர்.
பேசக் கூடாத நேரத்தில் பேசினேன். அதனால் வேலை போயிற்று என்று வருத்தத்துடன் அங்கிருந்து சென்றான்.
