
சென்னை, ராமகிருஷ்ணா மிஷன் மேல்நிலைப் பள்ளியில், 1981ல், 6ம் வகுப்பில் சேர்ந்தேன். அதுவரை, தமிழ் வழியில் படித்திருந்ததால், ஆங்கில பாடம் மட்டுமல்லாமல், ஆங்கில வழியில் பயிலும் அனைத்து பாடங்களும் புரியாமல் தவித்தேன்.
என் சிரமம் கண்ட ஆங்கில ஆசிரியர் நாராயண மூர்த்தி விசாரித்தார். இயலாமையை வருத்தத்துடன் விளக்கினேன். அதை புரிந்து கொண்டார்.
வகுப்பில், 72 மாணவர்கள் இருந்தோம். ஒவ்வொருவர் மீதும் ஆசிரியர்களால், தனி கவனம் செலுத்த இயலவில்லை. எனவே, வசதியான குடும்ப மாணவர்களுக்கு, ஒவ்வொரு பாட ஆசிரியரும் வீட்டில் தனியாக, டியூஷன் எடுத்தனர்.
என்னிடம், 'நாளையில் இருந்து என் வீட்டுக்கு டியூஷனுக்கு வந்து விடு; உன்னை ஆங்கில புலமையுள்ளவனாக மாற்றுகிறேன்...' என்று நம்பிக்கை அளித்தார்.
என் தந்தை, தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்ததால், குடும்ப செலவுக்கும், பள்ளி கட்டணம் செலுத்தவும் சிரமப்பட்டார். டியூஷனுக்கு தனியாக பணம் கொடுக்க முடியாத நிலை இருந்தது.
என் குடும்ப சூழலை உணர்ந்த ஆசிரியர், காசு வாங்காமல் கற்பிக்க முன் வந்தார். ஆனால், டியூஷனுக்கு வரும் மாணவர்களுக்கு, குடிநீர் பிடித்து வைக்கும் வேலையை, குருதட்சணையாக செய்தேன்.
மிகுந்த சிரத்தையுடன் கவனித்து படித்தேன். வகுப்பிலேயே ஆங்கில பாடத்தில், முதல் மாணவனாக வந்தேன். சரளமாக ஆங்கிலத்தில் பேசவும் முடிந்தது.
இப்போது என் வயது, 50; வாழ்வில் விளக்கேற்றிய அந்த ஆசிரியரின் நினைவு பனிப்படலமாக உருகி, மனதை நெகிழ வைக்கிறது!
- எஸ்.சீனிவாசன், சென்னை.

