PUBLISHED ON : ஜூன் 29, 2012

முன்னொரு காலத்தில் ஊரைத் தாண்டியதும் மயானப் பகுதி ஒன்று இருந்தது. அந்தத் தெருவில் செல்பவர் ஒவ்வொருவரும் இறந்து போயினர். அப்படி அவர்கள் மரணம் அடைவதற்கு காரணம் ஒரு பாம்பு கடித்ததினால்தான் என்று சிலர் கூறினர். ஆனால், வேறு சிலர், தேள் அவர்களைக் கொட்டியதால்தான் அவர்கள் இறக்க நேரிட்டது என்று கூறினர்.
ஆனால், பாம்போ, தேளோ எதுவாக இருந்தாலும் ஏதோ ஒன்றினால் அத்தெருவில் செல்பவர் எவரும் இறந்து போவது மட்டும், நிச்சயிக்கப்பட்ட விதியாக இருந்தது. ஒரு சமயம் வயதான கிழவர் ஒருவர் அந்தத் தெருவின் வழியாகச் சென்று கொண்டிருந்தார். அவருக்கு மிகவும் களைப்பு ஏற்பட்டதால், தெருவில் ஓரமாகக் கிடந்த ஒரு கல்லின் மீது சிறிது நேரம் இளைப்பாறுவதற்காக உட்கார்ந்தார்.
அப்போது அவருக்கு வெகு அருகில் ஏதோ ஒன்று ஊர்ந்து செல்வதைக் கண்டு, சட்டென்று திடுக்கிட்டு, அதைக் கூர்ந்து பார்த்தார். அது ஒரு தேள்! கீழே தரையில் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. அவர் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அது ஒரு பயங்கரமான பாம்பாக உருமாறியது.
கிழவருக்கு அந்தக் காட்சியைக் கண்டு வியப்புத் தாங்க முடியவில்லை. அவர் அப்படியே ஒரு கணம் ஸ்தம்பித்து நின்று விட்டார். அந்தப் பாம்பு அவரைக் கடந்து தரையில் ஊர்ந்து செல்லத் துவங்கியதும், அவரும் அதைப் பின்தொடர்ந்து போய் என்ன நடக்கிறதெனப் பார்க்க வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டார்.
அந்த பயங்கரமான பாம்பு இரவும், பகலும் வெகு வேகமாக ஊர்ந்து போய்க் கொண்டிருந்தது. கிழவரும் அதன்பின் இடைவிடாமல் தொடர்ந்து சென்று கொண்டே இருந்தார். பாம்புக்கும் தூக்கமில்லை; கிழவருக்கும் தூக்கமில்லை. இருவர் பயணமும் தொடர்ந்து கொண்டேயிருந்தது.
போகும் வழியில் அந்தப் பாம்பு ஒரு சத்திரத்தினுள் புகுந்து, அங்கு தங்கியிருந்த வழிப்போக்கர்கள் பலரையும் கடித்துக் கொன்றுவிட்டது. கொலைவெறி தலைக்கேற அந்தப் பாம்பு பின்னர் அரசனின் அரண்மனையை நோக்கி ஊர்ந்து சென்றது.
அரண்மனைக்குள் நுழைந்த பாம்பு, அங்கிருந்த அரசனைத் தன் விஷப்பற்களால் கடித்துக் கொன்றது. பிறகு, அரசியின் அந்தப்புரத்திலுள்ள நீர்ச் சுனையின் அருகே ஊர்ந்து சென்று, அங்கிருந்த இளைய ராஜகுமாரியையும் கடித்துக் கொன்றது.
இவ்விதமாக, அந்தக் கொடிய பாம்பு போகும் இடங்களிலெல்லாம் சிறிதும் கருணையில்லாமல், பலரைக் கடித்து கொன்று குவித்துக் கொண்டே போனது. அது செல்லுமிடங்களில் எல்லாம் மரண ஓலங்களும், ஒரே அழுகையும், கூப்பாடும், புலம்பல் ஓசையும்தான் எழுந்தன.
அதை நிழல் போல் தொடர்ந்து சென்று கொண்டிருந்த கிழவரோ, ஓசைப்படாமல் மவுனமாகவே அந்தப் பாம்பைப் பின் தொடர்ந்து சென்று கொண்டேயிருந்தார்.
பாம்பு சென்று கொண்டிருந்த தெரு, கடைசியில் விஸ்தாரமாகவும், ஆழமாகவும், வேகமாகவும் சுழிந்து ஓடும் ஓர் ஆற்றங்கரையில் போய் முடிந்தது. அங்கு பல ஏழைப் பயணிகள் ஆற்றங்கரையை கடந்து செல்வதற்காகக் காத்துக் கொண்டிருந்தனர்.
அவர்கள் அந்த ஆற்றை கடந்து அக்கரைக்குச் செல்ல வேண்டும் என்றால், படகின் மூலமாகத் தான் சென்றாக வேண்டும். ஆனால், படகிற்கு கூலி கொடுப்பதற்குத் தேவையான பணம் பயணிகளிடம் இல்லாததால், அவர்கள் வருத்தம் தோய்ந்த முகங்களோடும், ஏக்கத்தோடும் கரையோரங்களில் உட்கார்ந்திருந்தனர்.
ஊர்ந்து சென்று கொண்டேயிருந்த பாம்பு சட்டென்று, ஓர் ஆண் எருமையாக மாறியது. அதன் கழுத்தைக் சுற்றிலும் பித்தளை மணி வடம் ஒன்றும், சின்னஞ்சிறு மணிகளும் பளிச்சென்று மின்னின. அந்த எருமை மாடு நதிக்கரை ஓரமாக வந்து நின்றது.
அதைப் பார்த்ததும், அங்கிருந்த அப்பாவிப் பயணிகள் தங்கள் முகத்தில் அளவு கடந்த மகிழ்ச்சி பொங்க, ''ஆஹா! இந்த எருமை மாடு ஆற்றின் அக்கரையிலுள்ள அதன் வீட்டுக்குத் திரும்பிச் செல்லப் போகிறது. அது ஆற்றில் இறங்கித்தான் ஆற்றைக் கடந்து செல்லும். அதன் முதுகில் ஏறி அமர்ந்தும், அதன் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டும் அக்கரைக்கு காசு கொடுக்காமலே போய் சேர்ந்துவிடலாம்,'' என்று தங்களுக்குள் சொல்லிக் கொண்டனர்.
பயணிகள் அனைவரும் அந்த எருமை மாட்டின் முதுகில் மேல் நெருக்கமாக ஏறி அமர்ந்து கொண்டனர். அதன் வால் பகுதியிலும் சிலர் வாலை கெட்டியாக பிடித்துக் கொண்டனர்.
எருமை மாடு அக்கரையை நோக்கி நீந்திச் சென்றது. பயணிகள் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தனர். ஆனால், அவர்களது உற்சாகமும், உயிரும் ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. எருமை மாடு ஆற்றின் நடு மையத்தை அடைந்ததும், தன்னுடைய பின்னங்கால்களைப் பலமாக உதைக்கத் தொடங்கியது. அதனால், வால் பகுதியில் இருந்தவர்கள் சிதறி ஆற்றுக்குள் விழுந்து மூழ்கிச் செத்தனர். முதுகின் மீது இருந்த பயணிகளுக்கும் இதே கதிதான். ஒவ்வொருவராக தொப்பு தொப்பு என்று கீழே தள்ளப்பட்டு, ஆற்று வெள்ளத்தில் மூழ்கி மடிந்தனர்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டு பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்த கிழவரோ, ஒரு படகின் மூலம் ஆற்றைக் கடந்து, மறுகரைக்கு போய்ச் சேர்ந்தார். அப்போது அந்த எருமை மாடு மாயமாக மறைந்து போய் அதற்குப் பதிலாக அங்கே ஒரு காளை மாடாக நின்றது.
அந்தக் காளைமாடு அங்குமிங்கும் உல்லாசமாக நடை போட்டுக் கொண்டிருந்த போது, அவ்வழியே சென்று கொண்டிருந்த உழவன் ஒருவன் அதைப் பார்த்து விட்டான். அவன் அந்தக் காளை மாட்டின் அருகில் நெருங்கி வந்தான். சட்டென்று அதைப் பிடித்துத் தன் வீட்டிற்குக் கொண்டு போய், மற்ற கால்நடைப் பிராணிகளுக்கு மத்தியில் கட்டி வைத்தான். மாடும் சாதுவாக இருந்தது.
ஆனால், நள்ளிரவில் அந்தக் காளைமாடு பழையபடி பாம்பாக உருமாறி, அந்தக் கொட்டிலில் கட்டப்பட்டிருந்த ஆடு, மாடு, கோழி, புறா முதலான எல்லா பிராணிகளையும், பறவைகளையும் தன்னுடைய விஷப் பற்களால் கடித்து மடியச் செய்தது.
பின்னர் அந்த வீட்டினுள் தரையோடு தரையாக ஊர்ந்து சென்றது. அங்கே உறங்கிக் கொண்டிருந்த உழவனையும், அவனது குடும்பத்தினர் அனைவரையும் கடித்துக் கொன்றுவிட்டு, தன் வழியே திரும்பிச் சென்றது.
இந்தக் கொடிய காட்சிகளையெல்லாம் பின் தொடர்ந்து சென்றபடியே கவனித்துக் கொண்டிருந்த கிழவனும், விடாமல் நிழல்போல் ஓசைப்படாமல் அந்தப் பாம்பைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தான்.
கடைசியில் அந்தப் பாம்பு தன்னுடைய பாம்பு உருவத்தை நீக்கிவிட்டு, வெள்ளைத் தாடியுடன் கூடிய வயதான ஒரு கிழவராக உருமாறியது. இவ்வளவு நீண்ட தூரம் அதன் பின்னாலே தொடர்ந்து வந்து கொண்டிருந்த கிழவர், திகைப்பும் ஆச்சரியமும் அடைந்தார்.
அந்தக் கிழவர் தைரியத்துடன், வெண்தாடிக் கிழவனின் தாடியை 'லபக்' கென்று பிடித்துக் கொண்டு, ''நீ யார்?'' எதற்காக இவ்வளவு மோசமான காரியங்களை செய்து வருகிறாய்?'' என்று கேட்டார்.
அதற்கு வெண்தாடிக் கிழவன் சிரித்துக் கொண்டே, ''என்னை மரண தேவன் என்றும் காலதேவன் என்றும் சிலர் அழைப்பர். ஏனென்றால், இந்த உலகத்தில் உள்ளவர்களுக்கு மரணங்களைக் கொண்டு வருவதற்காகவே நான் இப்படிப் பலவேடங்களில் அலைந்து கொண்டிருக்கிறேன்,'' என்று கூறினான்.
அப்படியானால், ''எனக்கு மரணத்தைக் கொடுத்து விடு. நான் வெகுதூரம் உன்னை நிழல்போல மவுனமாகப் பின்தொடர்ந்து வந்திருக்கிறேன். அதனால் நான் அதிகம் களைத்துப் போய்விட்டேன். இந்த உலகில் வாழ்ந்து நான் அலுத்துப் போய்விட்டேன். ஆகவே, இப்போதே எனக்கு மரணத்தைக் கொடு,'' என்று கூறினான்.
அதற்கு மரண தேவன், ''உன்னுடைய விருப்பப்படி என்னால் நடக்க முடியாது. அவரவர் ஆயுள் விதிப்படி தான் நான் செய்ய முடியும். உன் ஆயுள் விதிப்படி உனக்கு எண்பது வயதானால்தான் காலம் முடியும். அப்போது நான் உன்னை அழைத்துக் கொண்டு போவதற்கு வருவேன்,'' என்று கூறிய வெண்தாடிக் கிழவர் மாயமாய் மறைந்துவிட்டார்.
***
