
புதுச்சேரியில் பாரம்பரியம் மிக்க பள்ளி, கல்வே காலேஜ். அங்கு, 1963ல், 8ம் வகுப்பு படித்தபோது, கணித ஆசிரியராக இருந்தார் பழனிபிள்ளை.
துாக்கத்தில் எழுப்பி கேட்டால் கூட, வாய்ப்பாடுகளை பிசகாமல் சொல்லும் அளவு பலமான அஸ்திவாரம் போட்டிருந்தார். வகுப்பில் அவர் உட்காரும்போது, மேஜையில் பிரம்பும் உட்காரும். தப்பாக கணக்குப் போட்டால் பிரம்புக்கு வேலை கொடுப்பார்.
அன்று, கணித விடைத்தாளைத் திருத்தி தந்தார். ஒரு கேள்வியில் படிப்படியாக எழுதி, கணக்குப் போட்டிருந்தேன்; கடைசிப்படிக் கூட்டலில் தவறு இருந்தது. ஜீரோ மார்க் போட்டிருந்தார்.
'சரியாக எழுதி விடை கண்டிருந்த படிகளுக்காவது, மதிப்பெண் போட்டிருக்கலாமே' என்று எண்ணியபடி, பயத்தில் எட்ட நின்று கேட்டேன்.
அருகே அழைத்தவர், 'பாதிக் கணக்கு சரியா இருந்தா, பாதி மதிப்பெண் வேணுமா...' என்று கேட்டார். ஜீரோவின் குறுக்கே கோடு போட்டு, பாதியாக்கினார். பின், 'பாதிக்கணக்கு சரி என்று எல்லாம் பார்க்கக் கூடாது; எதையும் முழுமையா செய்ய பழகணும். அதற்கு தீர்மானம் செஞ்சுக்கோ...' என அறிவுரைத்தார்.
அன்று அவர் கூறியது, இன்றும் காதில் ஒலித்தபடியிருக்கிறது. இப்போது எதையும் திருந்த செய்தால் தான் திருப்தி வரும். அறைகுறை வேலை என்பது, என் அகராதியில் கிடையாது.
என் வயது, 72; முழுமையாக வாழும் வகையில் என்னை செதுக்கிய சிற்பியின் பாதங்களில் தலை வணங்குகிறேன்!
- ராம சுப்பிரமணியன், சென்னை.

