PUBLISHED ON : மே 25, 2018

தஞ்சாவூர், அரசு உயர்நிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பு படித்த போது, பழனிசாமி என்ற தமிழ் ஆசிரியர், மாற்றலாகி வந்த, 10 நாட்களில், ஒவ்வொரு நாளும், ஒரு திருக்குறள் என்று, முதல் பத்து திருக்குறளை அனைவரையும் சொல்ல வைத்த பிறகே, அன்றைய வகுப்பை துவங்குவார்.
மீதம் உள்ள நாட்களில், அந்த பத்து திருக்குறளை, திரும்ப திரும்ப சொல்ல வைப்பார். இப்படியே பள்ளி வாழ்க்கையை முடிப்பதற்குள், 1,330 குறளையும், மனப்பாடம் செய்ய வைத்து விட்டார்.
திருக்குறள் போட்டி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசும் வழங்கி ஊக்குவிப்பார்.அவரது முயற்சியால், நிறைய மாணவர்களுக்கு, தமிழ் மீது ஆர்வம் அதிகமானது.
தற்போது, என் வயது 49; என் மகனுக்கும், அதே யுக்தியை கையாண்டு, 1,330 திருக்குறளையும், ஒரு பிழையின்றி சொல்ல, தயார் படுத்தி விட்டேன்; என் மகனும், பல பரிசுகளைப் பெற்றுள்ளான்.
அதற்கு காரணமான, என் தமிழ் ஐயாவை நினைத்தால், இன்றும் பெருமையாக உள்ளது. கணித ஆசிரியையான நான், ஐயாவின் யுக்தியை கையாண்டு, என் மாணவர்களை, கணித பார்முலாக்களை பிழையின்றி சொல்ல, தயார்படுத்தி வருகிறேன்.
- செ.ஜெயலட்சுமி, சென்னை.
