தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தீமை!

தீமை!

தீமை!


PUBLISHED ON : நவ 18, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 18, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாவக்குளம் சாலையோர மரங்களில் நாவல் பழங்கள் பழுத்திருந்தன. அதைப் பார்த்ததும், பறவைகளுக்கு மிகவும் கொண்டாட்டம். அணில்களும் அங்கு கூடி பழங்களையும், அதன் விதைகளையும் ருசித்து மகிழ்ந்தன.

அப்போது, எங்கிருந்தோ வந்தது ஒரு குரங்கு. மரத்தின் மீது சுகமாக அமர்ந்து பழங்களை பறித்து தின்றது. அதிகார தோரணையுடன் காணப்பட்டது. அந்த குரங்கை பார்த்து, பயந்து நடுங்கின பறவைகள்.

ஆனாலும், பயத்தை வெளிகாட்டாமல் பழங்களை உண்பதற்காக வந்தன. குரங்கு சேட்டையை காட்டியபடி, 'என் மூதாதையர்களால், வளர்க்கப்பட்டது இந்த மரம். எனக்கு மட்டுமே சொந்தம்; யாராவது, இங்கு வந்து தங்கினாலோ, பழங்களை ருசித்தாலோ, தண்டனை கடுமையாக இருக்கும்...' என அச்சம் கொள்ளும் படி அறிவிப்பு செய்தது.

அதை கேட்டதும் அணில்களும், பறவைகளும் நடுங்கின.

'நெடுங்காலமாக, இந்த நாவல் மரத்தில் கூடுகட்டி, பருவ காலத்தில், பழங்களை ருசித்த எங்களுக்கு, இப்படி ஒரு சோதனையா...' என வயதில் மூத்த கொக்கிடம் முறையிட்டன.

அவற்றின் கவலையை போக்கும் விதமாக, 'குரங்கே... ருசியும், சத்து மிகுந்த கனியையும் தரும் இந்த நாவல் மரம், அனைவருக்கும் பொதுவானது; அதை நீ மட்டும் சொந்தம் கொண்டாடுவது முறையல்ல; உன் மனதை மாற்றிக்கொள்...' என்றது கொக்கு.

எதற்கும் மசியவில்லை குரங்கு. பறவைகளும், சிறு உயிரினங்களும் கலந்து ஆலோசித்தன.

தொடர்ந்து நடந்த கூட்டத்தில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

'குரங்கை கல்லெறிந்து காயப்படுத்தலாம்...'

'விஷம் வைத்து கொல்லலாம்...'

'தடியால் அடித்து விரட்டலாம்...'

இப்படி ஆலோசனை வழங்கின.

அவற்றை பொறுமையாக கேட்ட முதிர்ந்த கொக்கு, 'நண்பர்களே... தீமைக்கு, தீமை தீர்வு ஆகாது; நன்மை தான், நல்ல பலனை தரும்...' என கூறி ரகசிய ஆலோசனை ஒன்றை வழங்கியது.

'சரி... இதையும் தான் செய்து பார்ப்போம்...'

பறவைகளும், அணில்களும் சம்மதம் தெரிவித்தன.

மழை வரும் என்ற வானிலை அறிவிப்பின்படி, கருமேகம் சூழ்ந்தது. மின்னல் வெட்டியது.

சிறிது நேரத்தில் -

மழை பொழியும் நிலை உருவானது; பறவைகளும், அணில்களும் நனையாமல் தப்ப கோவில் கோபுரங்களை நோக்கி சென்றன.

ஒன்றிரண்டு மழைத்துளி விழத் துவங்கிய போது, குரங்குக்கு அச்சம் வந்தது.

'மழையில் நனைந்தால், குளிர் வாட்டும்; சளி பிடிக்கும்; தும்மல், காய்ச்சல் வரும். இதை தவிர்க்க என்ன செய்யலாம்' என, திணறியது குரங்கு.

மழையின் வேகம் அதிகரித்தது.

அணில், பறவைகள் சார்பாக, குரங்கிடம் வந்த முதிர்ந்த கொக்கு, பரிசு பொதி ஒன்றை நீட்டியது. விருப்பம் இன்றி, அதை வாங்கி, இப்படியும், அப்படியும் ஆட்டியது குரங்கு. அதற்குள் இருந்த குடை விரிந்தது.

கனமழை பொழிய ஆரம்பித்தது.

மழையில் நனையாமல் குரங்கை காப்பாற்றியது அந்த குடை.

நன்மையை கண்டதால் தலை வணங்கியது குரங்கு.

மழை ஓய்ந்ததும், நாவல் மரத்துக்கு திரும்பின பறவைகள். அணில்களும் வந்தன. அவற்றிடம் மன்னிப்பு கேட்டு, நண்பனாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டியது குரங்கு. அதை ஏற்று அனைத்து உயிரினங்களும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தன.

குழந்தைகளே... பிறர் தீமை செய்தாலும், பதிலுக்கு, நன்மை தான் செய்ய வேண்டும்!

- எஸ்.டேனியல் ஜூலியட்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us