
மங்களகிரி நாட்டை ஆட்சி செய்தார் மங்களன்; மக்கள் மீது தீரா அன்பு கொண்டவர். முறையான திட்டங்கள் தீட்டி நாட்டை செழிப்பாக வைத்திருந்தார். இனிமையாக வாழ்ந்தனர் மக்கள்.
அந்த ஆண்டு, மழை பொய்த்தது. கடும் வறட்சி ஏற்பட்டது. பஞ்சத்தால் தவித்தனர் மக்கள்.
வருந்திய மன்னர், காட்டில் தனித்திருந்த ராஜகுருவை சந்தித்தார். தகுந்த ஆலோசனை வழங்கக் கேட்டார்.
'அரண்மனை மடப்பள்ளியில் மிகப்பெரிய பாத்திரம் உள்ளது; அதை, இறைவன் சன்னதியில் வைத்து வேண்டினால், அள்ள, அள்ள உணவை தரும். வறட்சி காலம் நீங்கிய பின், நன்றி செலுத்தி பழைய இடத்திலே வைத்து விட வேண்டும்...'
அரிய ஆலோசனை வழங்கினார் ராஜகுரு.
அதன் படி, மக்களுக்கு உணவு வழங்கி வந்தார் மன்னர்.
சில நாட்களுக்குப் பின் ------
பெரும் மழை பொழிந்து, ஏரி, குளங்கள் எல்லாம் நிரம்பின. ஆனால், மக்களுக்கு உணவு வழங்குவதை நிறுத்தவில்லை மன்னர்.
இலவசமாக கிடைத்த உணவை சாப்பிட்டு, சோம்பலுடன் பொழுதைக் கடத்தினர் மக்கள்.
ஒரு நாள் -
விளைநிலங்களின் நிலையைக் காண புறப்பட்டார் மன்னர். அன்றாடம் வழங்கும் உணவு பற்றி, மக்களிடம் கருத்து அறியவும் விரும்பினார்.
மாறு வேடம் அணிந்து நகர்வலம் வந்தார் மன்னர்.
திண்ணையில் விளையாடி கொண்டிருந்தனர் சிலர்; வெட்டியாக பொழுதை போக்கிக் கொண்டிருந்தனர் பலர். உண்ட மயக்கத்தில் மன்னரை சபித்தவர்களும் இருந்தனர். அதிர்ச்சியுடன் உற்று கவனித்தார் மன்னர்.
'பசிக்கு சோறு கிடைக்கிறதே... பின் எதுக்கு வேலை செய்யணும்...'
சோம்பி சிரித்த குரல்களைக் கேட்டார்.
'சமைத்தல், பாத்திரம் தேய்த்தல் போன்ற வேலைகளுக்கு முழுக்கு போட்டாச்சு... அப்படியே, மன்னர் துணியும் இலவசமா தந்தால், துவைக்கிற வேலையும் மிச்சமாகும்...'
பொறுப்பில்லாமல் பேசினர் பெண்கள்.
விளை நிலங்கள் பாழாக கிடந்தன. அவற்றை கவனிப்பாரில்லை. வீண் அரட்டையுடன் வாழ்ந்தனர் மக்கள். பொருளற்ற விவாதங்களில் மூழ்கி, சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்களையும் கண்டார்.
இந்த விவரங்களை ராஜகுருவிடம் தெரிவித்தார் மன்னர்.
நிதானமாக யோசித்து, 'இலவசங்களை தந்து, மக்களை சோம்பேறியாக மாற்ற கூடாது; நெருக்கடியான காலங்களில், திட்டமிட்டு வழி நடத்த வேண்டும்... இயற்கை பொய்க்கும் பச்சத்தில், மாற்று ஏற்பாடு பற்றி யோசிக்க வேண்டும்... அதுவே சிறந்த மன்னருக்கு அழகு...' என இடித்து கூறினார் ராஜகுரு.
தவறு புரிந்தது. உழைப்பின் மேன்மையை புரிய வைக்க உரிய திட்டங்களை தீட்டினார் மன்னர்.
குழந்தைகளே... உழைப்பை மறந்து விடக் கூடாது. சவால்களை சந்திக்க பழக வேண்டும்.
மல்லிகா குரு

