PUBLISHED ON : டிச 10, 2022

நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 1980ல், 7ம் வகுப்பு படித்த போது, வகுப்பாசிரியராக இருந்த எம்.கிருஷ்ணன், கணித பாடமும் நடத்தினார். மிகவும் கண்டிப்பானவர்.
அனுமதியின்றி விடுப்பு எடுத்தாலோ, வீட்டுப் பாடம் செய்யவில்லை என்றாலோ, வகுப்பறைக்கு வெளியே வெயிலில் நிறுத்தி விடுவார். வானத்தை நோக்கி அண்ணாந்து பார்க்க சொல்லி நெற்றியில் சிறிய கல்லை வைத்து, 'மறுமொழி சொல்லும் வரை இப்படியே நில்...' என தண்டிப்பார்.
சற்று குனிந்தாலும், நெற்றியிலிருக்கும் கல் விழுந்து விடும். விழுந்தால், பின்புறம் பிரம்பால், ஒரு அடி விழும். இதற்கு பயந்தே, பாடங்களை சரியாக படிப்போம். விடுப்பு எடுக்க மாட்டோம். சமீபத்தில், ஆசிரியராக பணிபுரிந்த என் உறவினர் பணிநிறைவு விழாவிற்கு சென்றிருந்தேன். அங்கு வந்திருந்தவர்கள், மாணவர்களின் ஒழுங்கின்மை குறித்த அனுபவங்களை பகிர்ந்தனர். அதில் என் ஆசிரியரும் இருந்தார்.
அவரை சுட்டிக் காட்டி, 'ஐயாவிடம் அடி வாங்கி, பய பக்தியுடன் படித்ததால் தான், இன்று நல்ல வேலையில் இருக்கிறேன்...' என்றேன்.
சிரித்தபடியே, 'ஏம்ப்பா... நீ சொல்றதை கேட்டு எல்லாரும் என்னை கொடுமைக்காரனா நினைக்கப் போறாங்க...' என்றார்.
என் வயது, 53; தற்போது, பள்ளி பெற்றோர் -- ஆசிரியர் கழகத் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் அந்த ஆசிரியரின் கண்டிப்பான செயல்களை எண்ணி நெகிழ்கிறேன்.
- ப.சீனிவாசன், நாகப்பட்டினம்
