PUBLISHED ON : ஜூலை 27, 2018

ஆங்சான் சூகிக்கு, 1991ல், அமைதிக்கான நோபல்பரிசு வழங்கப்பட்டது; அனைத்துலக புரிந்துணர்வுகான ஜவஹர்லால் நேரு விருது, 1993ல் இந்தியா வழங்கியது.
மியான்மரில், 2015-ல் நடந்த பொதுத்தேர்தலில், சூகியின் கட்சி அமோக வெற்றி பெற்றது. அவரின் மகன்கள், வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருப்பதால், அவரால் அதிபர் பதவியை ஏற்க முடியவில்லை. அவருக்கு நெருக்கமான, ஹிதின் கியா என்பவர் அதிபராக பதவியேற்றார். தலைமை ஆலோசகராக, சூகி பொறுப்பேற்றார்.
உடல்நலக் குறைவால், ஹிதின் கியா, அதிபர் பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான ஓட்டெடுப்பு நடந்தது. சூகியின் கட்சியைச் சேர்ந்த, வின் மையின்ட் என்பவர் தேர்வு செய்யப்படடுள்ளார்.
ஆசியா கண்டத்தில் உள்ளது மியான்மர் நாடு. அது, உருவாகியதிலிருந்தே, ராணுவ ஆட்சி தான். ஆரம்பத்தில், ஜப்பான் ராணுவ ஆதிக்கத்தில் இருந்தது. இரண்டாம் உலக போருக்கு பின், பிரிட்டன் ராணுவ ஆதிக்கத்திற்கு உள்ளானது. சுதந்திரம், ஜனநாயகம் என்ற சொற்கள் இங்கு தடை செய்யப்பட்டவையாக இருந்தன.
ராணுவ ஆட்சிக்கு எதிராக மூச்சு விட்டாலே, உயிர் பறிக்கப்படும். உழைப்பதும், உண்பதும் மட்டுமே, மக்களுக்கு அனுமதிக்கப்பட்டது.
இந்த கொடுமையை எதிர்த்து ஒருவர் எழுந்தார். 'குடும்பத்தை விட, தேச நலன் பெரிது' என முழங்கினார். 'ராணுவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தால் தான், மாற்றம் வரும்' என எழுதியும், பேசியும் வந்தார்.
இந்த முழக்கத்தை கேட்ட மக்கள், அவர் தலைமையில் அணிவகுத்தனர். இதை கண்டு, பிரிட்டன் அரசு அலறியது; ராணுவம் அவரைச் சுட்டுக் கொன்றது. இப்படி கொல்லப்பட்டவர் தான், ஆங்சான்!
அவரது மகள் ஆங்சான் சூகி, ஐரோப்பா கண்டம், இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டனில் படிப்பு முடித்து, அங்கேயே, மைக்கேல் ஆரிஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கணவர், இரண்டு குழந்தைகள் என்று, லண்டன் நகரில் நீரோடை போல வாழ்க்கை போய்க்கொண்டு இருந்தது.
அப்போது, உடல் நலிவுற்ற தாய், கின்கியை பார்ப்பதற்காக, மியான்மருக்கு பயணம் மேற்கொண்டார், ஆங்சான் சூகி. வந்தவருக்கு, தாயின் உடல் நிலையைவிட, அதிர்ச்சி தந்த விஷயம்... நாட்டில் தாண்டவமாடிய வறுமையும், ஏழ்மையும்தான். உலக நாடுகளால் மியான்மர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. ஏழை நாடுகளின் பட்டியலில் இடம் பெற்றிருந்து. மக்கள் சிரமத்தில் இருந்தனர்.
இவற்றால் உலுக்கப்பட்ட ஆங் சான் சூகி, தாய்நாட்டின் விடுதலைக்காக போராட முடிவு எடுத்தார்.
'ஜனநாயக லீக்' என்ற கட்சியை துவங்கி, அதன் தலைவியானார். மக்கள் இருகரம் நீட்டி, அவரை ஆதரித்தனர். தந்தை வழியில், போராட துவங்கினார்; தந்தையை கொன்றது போல், மகளையும் கொன்று விட, ராணுவம் முயன்றது. மக்கள் எதிர்ப்பால், அது முறியடிக்கப்பட்டது.
ஆனாலும், அவரை வீட்டு சிறையில் அடைத்தது ராணுவம். யாரையும் பார்க்ககூடாது; தொலைபேசி வசதி கிடையாது; சேதமடைந்த பழைய வீட்டில் பல நேரம் மின்சாரம் இருக்காது; பெரும்பாலும் மெழுகுவர்த்தி வெளிச்சம்தான். இப்படிப்பட்ட சூழலில்தான் சிறையிருந்தார்.
மக்களிடம் எழுச்சி ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில், ராணுவம் அவரை விடுதலை செய்வதாக, அவ்வப்போது அறிவிக்கும். வீட்டை விட்டு வெளியில் வந்த சில மணி நேரத்தில், மீண்டும் கைது செய்து, வீட்டு சிறையில் அடைக்கும். எவரும் அவரை சந்திக்க கூடாது; சந்தித்தாலும், அரசியல் பேச கூடாது என்றெல்லாம் சட்டம் போட்டு, சூகியின் செயல்பாடுகளை முடக்கியது.
மக்களை சந்திப்பதை நிறுத்தினால், விடுதலை செய்வதாக, ராணுவம் அறிவித்தது. அதற்கு, சூகி உடன் படாததால், வீட்டுச் சிறை தொடர்ந்தது.
ஆனாலும் நம்பிக்கையை விடமால், ஜனநாயக முறையில் போராட்டத்தை தொடர்ந்தார். கடிதங்கள் எழுதி, மக்களிடம் நம்பிக்கை வளர்த்தார். இந்த நிலையில், உலக நாடுகள் கண்டனத்தால், 1990ல் பார்லிமெண்ட் தேர்தல் நடத்தியது ராணுவம். வீட்டு சிறையில் இருந்தபடி, 485 இடத்தில் போட்டியிட்டு, 392 இடங்களில் ஜெயித்து காட்டினார் சூகி. ஆனால், 'தேர்தல் செல்லாது' என்று அறிவித்த ராணுவம், ஆங்சான்சூகியின் கட்சிக்கு தடைவிதித்தது. ஆனாலும், சூகியின் பக்கமே நின்றனர் மக்கள்.
இந்த நிலையில், சூகியின் கணவர், மைக்கேல்ஆரிஸ் புற்றுநோய் பாதிப்பால், 1990ல் லண்டனில் இறந்தார். செய்திக் கேட்டு, 'இறுதியாக, கணவர் உடலை காண அனுமதியுங்கள்' என்று, ராணுவ நிர்வாகத்திற்கு விண்ணப்பித்தார்.
'அனுமதிக்கிறோம்... ஆனால், திரும்பி வர கூடாது...' என்று ராணுவம் நிபந்தனை விதித்தது.
'கணவரை விட, செத்துக் கொண்டிருக்கும், என் தேச மக்களே முக்கியம்...' என்று மறுத்து விட்டார். உலக நாடுகளின் கண்டனத்தால், சூகியை, 2010ல் விடுதலை செய்தது ராணுவம்.
தேவதை செய்த தியாகத்தை பார்த்தீர்களா!
