PUBLISHED ON : மார் 27, 2021

விருதுநகர் மாவட்டம், பாவாலிரோடு, நகராட்சி நடுநிலைப் பள்ளியில், 1955ல், 6ம் வகுப்பு படித்த போது...
ஆசிரியை கமலா, மிகவும் அன்புடன் இருப்பார். கட்டணமின்றி வீட்டில் டியூஷன் கற்றுத் தந்தார். சில நேரம் காபி, மிச்சர் கூட கொடுப்பார்.
ஒருநாள் வகுப்பில், தவறாக பாடத்தை ஒப்பித்தான் ஒரு மாணவன். பிரம்பால் அடிக்க கையை ஓங்கினார் ஆசிரியை. அடி படாமல் தவிர்க்க, 'சட்' என குனிந்தான் அந்த மாணவன்; மேஜை முகப்பில் மோதி, மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
பதறியபடி கைக்குட்டையால் காயத்தை அமுக்கி, ரத்தத்தை நிறுத்த முயன்றார் ஆசிரியை. நாங்கள் ஓடி சென்று உதவினோம்; அவனை, குதிரை வண்டியில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.
மருத்துவரிடம் விவரம் சொல்ல, கட்டு போட்டு அனுப்பினார். கவனமுடன் உடன் இருந்து உதவினார் ஆசிரியை. அவனை, வீட்டுக்கு அழைத்துச் சென்றோம். பதறியபடி இருந்த ஆசிரியையிடம், 'அம்மா... தைரியமாக இருங்க...' என தேற்றினர் அவன் பெற்றோர்.
என் வயது, 77; பள்ளி வாழ்க்கையில், அது மறக்க முடியாத சம்பவமாக அமைந்து விட்டது.
- எஸ்.செய்யது முஹம்மது, விருதுநகர்.

