PUBLISHED ON : ஜூலை 25, 2020

தமிழக முதல்வராக பதவி வகித்த காமராஜர், தன்னிலமற்ற பெருந்தலைவர். நேர்மை, எளிமையால் புகழ் பெற்றவர்; அவரை, தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, கல்விக்கு கண் தந்த செம்மல் என, அன்புடன் அழைப்பர் மக்கள்.
முதல்வராக இருந்தபோது, சேலம் மாவட்டத்தில் சுற்றுபயணம் செய்தார். ஆத்துார் அருகே, உடையார் பட்டி கிராமத்தில் மக்கள் திரண்டு வரவேற்க காத்திருந்தனர்.
வசதி படைத்தவர்கள், கும்பலாக ஒருபுறம் நின்றனர்; ஏழை, எளிய மக்கள் மற்றொரு புறம் நின்றிருந்தனர். இதை கவனித்தார் காமராஜர். உடன் சென்ற அந்த ஊர் பிரமுகர், வசதிபடைத்தவர்களை சந்திக்க கூறினார். ஆனால், ஏழை எளிய மக்கள் பக்கம் காரை செலுத்த கூறினார் காமராஜர்.
முதலில், ஏழை, எளியோர் வரவேற்பை பெற்ற பின், வசதியானவர்களை சந்தித்தார்.
விடை பெற்ற போது, 'வசதியானவர்கள் சொந்த தேவைகளுக்காக என்னை வரவேற்றனர்; ஏழை, எளிய மக்கள் எந்த பலனையும் எதிர்பார்க்காமல் காத்திருந்தனர்; அதனால் தான், அவர்களின் மரியாதையை முதலில் பெற்றேன்...' என கூறினார்.
பிரமுகர் வியந்து நின்றார்.
