PUBLISHED ON : மார் 04, 2023

மார்ச் 8 மகளிர் தினம்!
இந்தியாவின் முதல் பெண் துாதர் சி.பி.முத்தம்மா. இந்த தகுதியை பெற அவர் நடத்திய போராட்டம் நெடியது. இது சாதிக்க விரும்பும் பெண்களுக்கு வழிகாட்டியாக அமையும்.
கர்நாடகா மாநிலம், குடகு மாவட்டம், விராஜ்பேட் நகரில், ஜனவரி 24, 1924ல் பிறந்தார் முத்தம்மா. ஒன்பது வயதில் தந்தையை இழந்தார். தாய் அரவணைப்பில் வளர்ந்தார். சென்னை, பெண்கள் கிறிஸ்தவ கல்லுாரியில் பட்டப்படிப்பில், மூன்று தங்கப் பதக்கங்கள் வென்று சாதித்தார்.
அந்த காலத்தில் இந்திய வெளியுறவுப் பணியில் ஆண்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில், கடந்த, 1949ல் நடந்த இந்திய ஆட்சி பணி தேர்வில் முதன்மை தகுதி பெற்றார் முத்தம்மா. பெரும் சவால் நிறைந்த வெளியுறவு துறை பணியில் சேர்ந்தார்; தடைகளை முறியடித்து முன்னேறினார். ஆர்வமுடன் பயிற்சிகள் பெற்றார்.
அந்த காலத்தில், 'உயர் பதவி வகிக்கும் பெண், திருமணம் செய்ய அரசிடம் கட்டாயம் முன் அனுமதி பெற வேண்டும்; திருமண வாழ்க்கை அந்த பணிக்கு தடையாக இருப்பதாக அரசு கருதினால், ராஜினாமா செய்துவிட வேண்டும்' என்ற கடும் விதி அமலில் இருந்தது.
இதை எதிர்த்து, 'பணியை சிறப்பாக செய்ய திறமையைத்தான் அளவுகோலாக்க வேண்டுமே தவிர, ஆண் - பெண் பேதம் கூடாது' என நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார் முத்தம்மா. சமத்துவத்துக்கு தடையாக, அந்த விதி இருப்பதை சுட்டிக்காட்டினார்.
வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. தீர்ப்பில், 'பணி நியமனங்களில் ஜாதி, மதம், இனம் மற்றும் பால் ரீதியாக பாகுபாடு காட்டக்கூடாது என, அரசியல் அமைப்புச் சட்டம் வரையறுத்துள்ளது; இதற்கு மாறாக உள்ள பணி விதிகளை நீக்க வேண்டும்' என உத்தரவிட்டது.
இந்திய பெண்கள் முன்னேற்ற வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக அது அமைந்தது. முத்தம்மாவுக்கு பதவி உயர்வு கிடைத்தது. ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில், இந்திய துாதராக நியமிக்கப்பட்டார். முதல் பெண் அயல்நாட்டு துாதர் என்ற பெருமையை பெற்றார். திறமையாக, 30 ஆண்டுகளுக்கும் மேல் சேவையாற்றி ஓய்வு பெற்றார்.
டில்லியில் அவருக்கு சொந்தமான, 15 ஏக்கர் நிலத்தை பொது மருத்துவமனை அமைக்க தானமாக வழங்கினார். வாழ்வின் இறுதி மூச்சு வரை சமூக வளர்ச்சிக்காக பாடுபட்ட முத்தம்மா, அக்டோபர் 14, 2009-ல், 85ம் வயதில் பெங்களூருவில் காலமானார். மரணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன், பிறந்த ஊரில் நுாலகம் அமைக்க நிதி உதவி செய்திருந்தார்.
சாதிக்க துணியும் பெண்கள், முத்தம்மா அமைத்துள்ள பாதையில் முன்னேறலாம்.
- எம்.வி.நிகிதா