
தென்காசி மாவட்டம், சுரண்டை, பேரன்புரூக் உயர்நிலைப் பள்ளியில், 1971ல், 11ம் வகுப்பு படித்தபோது தலைமை ஆசிரியராக இருந்தார் டி.ஜி.நோயல். கனிவு, கண்டிப்பால் நிர்வகித்து வந்தார்.
வகுப்பில், 53 மாணவர்களுடன், ஒன்பது மாணவியர் இருந்தோம். வகுப்பு தலைவன் ஆறுமுகம், படிப்பிலும், ஒழுக்கத்திலும் சிறந்தவன். எல்லா ஆசிரியர்களிடமும் பாராட்டை பெறுவான். ஆனால், மாணவியரைக் கண்டால் பிடிக்காது.
அக்கம் பக்கத்து கிராமங்களில் வசித்த நாங்கள், காலை வீட்டு வேலைகளை முடித்து, வெகுதுாரத்தில் இருந்து பள்ளிக்கு நடந்து வருவோம். தாமதமானால், நேரத்துக்கு வர இயலாத மாணவியர் மீது புகார் கூறி, வகுப்பில் பங்கேற்பதை தடுத்துவிடுவான். இதனால் மிகவும் அவதிப்பட்டோம்.
படிப்பை முடித்து திருமணமாகி, கணவர், மூன்று குழந்தைகளுடன் சென்னையில் வசிக்கிறேன். ஒருமுறை சொந்த ஊர் சென்றபோது அரசு பேருந்தில் பயணித்தேன். நடிகர் ரஜினிகாந்த் பாணியில், 'டிக்கெட் கேட்டு வாங்குங்க...' என, நடத்துனர் குரல் வித்தியாசமாக கேட்டு திரும்பினேன்.
வகுப்பில் தொந்தரவு தந்திருந்தவரை கண்டேன். புன்னகைத்தபடி நலம் விசாரித்தார். பெண் பயணியரிடம் மிக கனிவுடன் நடந்து கொண்டார். பேருந்தில் இருந்து இறங்க சிரமப்பட்ட முதிய பெண்ணுக்கு கைகொடுத்து பரிவுடன் உதவினார். இது ஆச்சரியம் தந்தது.
தற்போது, என் வயது, 67; வகுப்பறையில் மாணவியரை வெறுத்தவர், பணியில் கனிவாக செயல்பட்டது மகிழ்ச்சி தந்தது. இந்த நெகிழ்வான நடத்தை அவரை பேருந்து அதிபராக உயர்த்தியுள்ளது.
- தேவகுமாரி ஞானபிரகாசம், சென்னை.
தொடர்புக்கு: 74488 76798