PUBLISHED ON : ஜூலை 31, 2021

எப்படியாவது, தப்பி விட விரும்பியது மவுஸ். கணினியில், தன் வாலை இணைத்து, சுதந்திரத்தை பறித்தவர் மீது, கடும் கோபம் கொண்டிருந்தது.
அன்று -
வழக்கம் போல், கணினியில் வேலை முடித்து, ஓய்வெடுக்கச் சென்றான் சுரேஷ்.
'இது தான் சரியான தருணம்' என, எண்ணிய மவுஸ், கணினியுடன் பிணைத்திருந்த வாலை அறுத்தது. பல நாட்கள், ஒரே இடத்தில் இருந்ததால், கால்கள் மரத்து போயின. இங்கும், அங்கும் ஓடி, கால்களை செயல்பட வைத்தது.
ஒரே ஓட்டத்தில் எலியூரை அடைந்தது.
மவுசை பார்த்தவுடன், எலிகளுக்கு ஆச்சரியம். தோற்றத்தில் மாறுபட்டு இருந்தது. உடலில், ரோமங்கள் இல்லை. பெரிய வாய், சப்பையான முதுகு என, புதுமையாக இருந்தது.
மவுசுக்கு கடும்பசி!
தின்பண்டங்களைத் தேடியபடி, ஒரு வீட்டிற்குள் நுழைந்தது. வயிறு முட்ட தின்று, எலியூருக்கு திரும்பியது.
பசியெடுத்த போதெல்லாம், அதே வீட்டுக்கு சென்று பண்டங்களை தின்றது.
இதை கவனித்த பூனை, எப்படியாவது, மவுசை பிடித்து தின்று விட துடித்தது.
அன்று குறி வைத்து பாய்ந்து பிடிக்க எத்தனித்தது பூனை. அப்போது, எதேச்சையாக இடம் மாறியது மவுஸ்; கீழே விழுந்த பூனைக்கு, மூக்கு உடைந்தது; இதனால் அஞ்சி ஒதுங்கியது.
எலியூருக்கு திரும்பிய மவுஸ், பகலிலேயே ஊர் சுற்ற துவங்கியது; இந்த பழக்கம், மற்ற எலிகளுக்கு வியப்பை தந்தது.
மவுசுக்கு பயமே இல்லை; யாரைப் பற்றியும் கவலை படவில்லை.
உணவு தேடி புறப்பட்டது மவுஸ். வழியில் பதுங்கியிருந்த பூனை, அதன் மீது பாய்ந்தது. தடாலென விலகிய மவுஸ், 'கண்ணு கிண்ணு தெரியாம போச்சா... பார்த்துப் போ... எங்கேயாவது முட்டிக்காதே...' என்று கிண்டலாக கூறி, நடையைக் கட்டியது.
ஆச்சரியத்தில், 'கண்டதும் தலை தெறிக்க ஓடும் எலியா இது... பயமின்றி கிண்டல் செய்கிறதே' என, எண்ணி திகைத்தது பூனை.
என்ன ஆனாலும், ஒரு கை பார்க்காமல் விடுவதில்லை என சபதம் எடுத்தது; மீண்டும் மவுஸ் மீது பாய்ந்தது பூனை. தாக்க பாய்கிறது என்பதை உணர்ந்த மவுஸ் வேகமாக ஓடி, எலியூரை அடைந்தது.
அங்கிருந்த எலிகளிடம், 'என்னை ஒரு குட்டி மிருகம் துரத்துகிறதே...' என்றது. எலிகளெல்லாம் கட்டுப்படுத்த முடியாமல், 'கொல்' என, சிரித்தன.
முதிய எலி, 'அது பூனை... நம் பரம்பரை எதிரி; காலங்காலமாக நம்மை அடித்து தின்பது தானே அதன் வேலை... இதுகூட தெரியாதா...' என்றது.
மவுசுக்கு நெஞ்சுவலி வந்து விட்டது. வேதனையுடன், 'என்ன... பூனை கொன்று விடுமா... நான் மாட்டியிருந்தால்...' என, புலம்ப ஆரம்பித்தது.
அன்று இரவு முழுக்க, மவுசுக்கு துாக்கம் வரவில்லை. பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் யோசித்தது.
எலிகளை எல்லாம் இணைத்து, ஒரு மாநாட்டைக் கூட்டியது மவுஸ். அந்த கூட்டத்தில், 'இவ்ளோ நாளா, பூனைகளுக்குப் பயந்து வாழ்ந்தது போதும்... உடனே, இதற்கு தீர்வு காண வேண்டும். இல்லையென்றால், நம் பரம்பரையே அழிந்து விடும்' என ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, மவுஸ் தலைமையில், எலிகள், பூனையூருக்குச் சென்றன. பூனை அரசனை சந்தித்து, நிறைவேற்றிய தீர்மானத்தை கொடுத்தன.
அதில், எந்த பூனையும் எலிகளை தாக்க கூடாது; மீறினால், எலிகளும் பதிலடி தர நேரிடும் என்றிருந்தது.
அதைப் படித்த பூனை அரசன் இறுமாப்புடன், 'உங்களால, என்ன செய்ய முடியும்...' என்றது.
'உடன்படிக்கைக்கு சம்மதிக்கவில்லை என்றால், போர் நடத்துவது தவிர, வேறு வழியில்லை...' என்று, எச்சரித்தன எலிகள்.
பூனைகள் பணியவில்லை.
பல்லாயிரம் எலிகள் குவிந்தன.
திட்டமிட்டப்படி போர் மூண்டது.
முதல்நாள் போரில், பூனைகள் கையே ஓங்கியது.
அடுத்தநாள் -
பூனைகளை விரட்டியடிக்கும் உறுதியோடு, வியூகம் அமைத்து போர்க்களம் புகுந்தன எலிகள்.
பூனைப்படையின் ஆதிக்கம் சரிய துவங்கியது; வேறு வழியின்றி பூனை அரசன் சரணடைந்தது. எலிப்படை துள்ளி குதித்து, வெற்றியைக் கொண்டாடியது.
'இனி எலிகளைக் கொல்ல மாட்டோம்...' என, பூனை அரசன் உறுதியளித்தது. ஒரு ஒப்பந்தமும் கையெழுத்தானது.
வெற்றி களிப்பில் நடனமாடின எலிகள்.
இந்த போராட்டத்தை துவங்கிய மவுசிற்கு, எலியூரில் சிலை எழுப்பப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும், ஒப்பந்த தினத்தன்று, அந்த சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தின எலிகள்.
குழந்தைகளே... முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.

