PUBLISHED ON : ஏப் 09, 2022

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டி பாளையம், வைரவிழா உயர்நிலைப் பள்ளியில், 1963ல், 8ம் வகுப்பு படித்தபோது, தலைமையாசிரியராக இருந்தார் அருணாசல கவுண்டர். கண்டிப்பு மிக்கவர்; தவறு செய்தால் பிரம்படி நிச்சயம் உண்டு.
வகுப்பில் மாதந்தோறும் தேர்வு நடைபெறும்; ஒரு தேர்வை முடித்தவுடன், அடுத்ததை எழுத தயாராக வேண்டும். அன்று அதற்கு படிக்க கூறி சென்றார் தலைமையாசிரியர்.
அவர் தலை மறைந்ததும், சக மாணவர்களுடன் விளையாட்டு மைதானம் சென்றேன். உயரம் தாண்டுவதில் ஈடுபட்டோம். துாரத்தில் நின்று இதை கவனித்தபடி நெருங்கி வந்தார்.
அவரிடமிருந்து தப்பிக்கும் விதமாக, வகுப்பறைக்கு ஓடி, சத்தமாக படிப்பது போல் நடித்தோம். எங்களை அடையாளம் கண்டு, பிரம்பால் சரமாரியாக விளாசினார்.
தினமும் வழிபாட்டு கூட்டத்தில், இறைவணக்கம் பாடுவதை வழக்கமாக கொண்டிருந்தேன். அன்று, 'உன் திருவிளையாடலை யார் அறிவார்...' என்ற முருகன் துதியைப் பாடினேன். அருகே வந்தவர், 'உங்க திருவிளையாடலை நேற்று தான் பார்த்தேனே...' என்றார். அன்று முதல், 'திருவிளையாடல் போறான் பாருங்கள்' என கேலி செய்தனர் மாணவர்கள்.
எனக்கு, 72 வயதாகிறது; அந்த நிகழ்வை இன்று நினைத்தாலும் மனம் நெகிழ்ந்து சிரித்து விடுகிறேன்.
- டி.பி.முத்துக்குமார், திண்டுக்கல்.
தொடர்புக்கு: 97507 76533
