PUBLISHED ON : ஜூலை 18, 2020

அது பயங்கர இரவு. குளிர் நடுங்க வைத்தது; கை நீட்டும் துாரத்தில் இருப்பதைக் கூட காணமுடியாத பனி மூட்டம். இரவைக் கிழித்து, அசுர வேகத்தில் போய்க் கொண்டிருந்தது அந்த ரயில்.
மடிப்பு மடிப்பாக, நாலா பக்கமும் மூடுபனி இறங்கியிருந்தது. ரயிலின் சக்தி வாய்ந்த முகப்பு ஒளி, பனி மூட்டத்தைக் கிழித்தது. அதன் வழியாக, கண்களை இடுக்கி தண்டவாளத்தை கூர்ந்து பார்த்து ரயிலை ஓட்டிக் கொண்டிருந்தார் டிரைவர்.
எப்போதும், நேரந் தவறாமல் ரயிலைச் செலுத்தும், அவரிடம் ஒரு பதற்றம். அதற்கு, மூடுபனியும், பயங்கர இரவும் மட்டும் காரணமல்ல; வண்டியில், நுாற்றுக்கணக்கான பயணியருடன், அந்த நாட்டின் மகாராணியும் பயணம் செய்து கொண்டிருந்தார்.
திடும் என ஒரு காட்சி விரிந்தது. ஒரு கணம், இதயத் துடிப்பு நிற்பது போல் இருந்தது. தண்டவாளத்தின் குறுக்கே, கருப்பு அங்கியுடன் உருவம் ஒன்று, இரு கைகளையும் விரித்து நிற்பது போல் இருந்தது. இந்த தோற்றத்தைக் கண்டு நடுங்கினார்.
பேயா... பிசாசா...
பிரேக்கை பரபரப்புடன் அழுத்தியது கைகள். தண்டவாளத்தில் நெருப்பு பொறி பறக்க, 'கிரீச்' என, சத்தமிட்டபடி நின்றது ரயில்.
அதற்குள், பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் போனது. அவர்கள் இறங்கி, தண்டவாளத்தை சுற்று முற்றும் பார்த்தனர்; ஆய்வு செய்தனர். அக்கம் பக்கம் குரல் எழுப்பி கூப்பிட்டனர். வண்டியை தடுத்த மர்ம உருவம் எங்கே...
எதையும் அறிய முடியாமல் திணறினர். ஒரே குழப்பம். முடிவில், 'யாரோ, வேடிக்கையாக தடுத்து தப்பியிருக்கலாம்' என்ற முடிவுக்கு வந்தனர்.
ரயில் ஓட்டியவருக்கு உள்ளூர உறுத்தல். 'தண்டவாளத்தில் நின்றது என்ன உருவம்... ஏன் தடுத்தது' என, சிந்தித்தார். மீண்டும் ரயிலைக் கிளப்பும் முன், இந்த கேள்விகளுடன், தண்டவாளத்தில் சிறிது துாரம் நடந்தவர் நிலைகுலைந்தார். முகம் வெளுத்தது; விழிகள் பிதுங்கின; இயதத் துடிப்பு அதிகமானது.
ரயிலை நிறுத்தியிருந்த இடத்திலிருந்து, 200 அடி துாரத்தில், ஒரு காட்டாற்றுப் பாலம். அது துண்டிக்கப்பட்டிருந்தது. அதன் மீதான தண்டவாளம், நதிக்குள் சரிந்து கிடந்தது.
நதியில் பெருக்கெடுத்திருந்த வெள்ளம் செய்த வேலை அது.
மர்ம உருவம் ரயில் பாதையில் குறுக்கிட்டு மறித்திருக்கா விட்டால், நதிக்குள் குப்புற விழுந்திருக்கும் ரயில்; அதில் பயணித்த அனைவரும் பலியாகியிருப்பர்.
நடுங்கும் குளிரிலும், வியர்வையால் குளித்தபடியே, கடவுளுக்கு நன்றி செலுத்தினார் ரயில் டிரைவர். பாதை செப்பனிடப்பட்டது. சேர வேண்டிய ஊரை, ரயில் அடைந்த பின்பும், மறித்த உருவ மர்மம் விடுவிக்கப்படவில்லை.
எல்லாரும் நிம்மதி அடைந்திருந்தாலும், ஓட்டுனருக்கு அமைதி ஏற்படவில்லை. ரயில் முகப்பு விளக்கை சோதனையிட தோன்றியது. பணிக்கூடத்தில் ரயிலை நிறுத்தினார்; கண்ணாடியை திறந்தபோது, முகப்பு விளக்கின் அடியில், பெரிய பட்டுப் பூச்சி ஒன்றின் உடல் கிடந்தது.
அதை, உள்ளங்கையில் வைத்தபடி யோசித்தார் ரயில் டிரைவர். பட்டு பூச்சியின் விறைத்த சிறகுகளை விரித்து பதப்படுத்தினார். பின், முகப்பு விளக்கின் மூடிக்குள் நிறுத்தி மூடினார். இப்போது, ஸ்விட்ச்சை போட்டார்.
அடுத்த வினாடி, 'நினைத்தது சரி தான்...' என்ற வியப்பொலி, அவரிடமிருந்து எழுந்தது. இருளைக் கிழித்த விளக்கின் நீண்ட ஒளி வெள்ளத்தின் நடுவே, அதே கருப்பு உருவத்தைக் கண்டார். இப்போது, அதன் கரங்கள் அசையவில்லை; நிலையாக காணப்பட்டது!
ஓடும் ரயிலை, பயங்கர விபத்திலிருந்து காப்பாற்றிய மர்ம உருவம், இந்த பட்டுப் பூச்சி தான். உடைந்த பாலத்தை நெருங்கும் முன், ரயிலின் பிரகாசமான முகப்பு ஒளியால் கவரப்பட்டுள்ளது பட்டுபூச்சி. மூடுபனியால் திணறி விளக்கில் மோதி சிக்கியுள்ளது. விளக்கு ஒளியில் அதன் நிழல், தண்டவாளத்தில் நின்று, கைகளை அகல விரித்து தடுக்கும் மனித உருவமாக தோன்றியிருக்கிறது.
உயிரைக் கொடுத்து, அந்த நாட்டின் மகாராணியை காப்பாற்றி விட்டது சிறிய பூச்சி.
இந்த சம்பவம் கதையல்ல; நிஜம்.
பட்டுப்பூச்சியின் பெருங்கருணையால் தப்பியவர் விக்டோரியா மகாராணி. இவர், ஐரோப்பிய நாடான இங்கிலாந்தை ஆட்சி செய்தவர். இவர் காலத்தில் தான், உலகில் முதல் ரயில் போக்குவரத்து துவங்கியது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில், பதப்படுத்திய அந்த பட்டுப்பூச்சியின் உடல் பாதுகாக்கப்படுகிறது. மகாராணியின் உயிரைக் காத்த பூச்சியை, இன்றும் பேணிவருகிறது அந்த நாட்டு அரசு!
செல்லங்களே... எதையும், அறிவுக்கண் கொண்டு பார்த்தால், ஆராய்ச்சியில் சிறந்து விளங்கலாம்; அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி உலகை காக்கலாம். பேய், பிசாசு, பூதம் என பயந்தால், சிந்திக்கும் ஆற்றலை இழந்து புலம்பித் திரிய வேண்டியது தான்.
வாண்டுமாமா
