தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பொக்கிஷம் (17)

பொக்கிஷம் (17)

பொக்கிஷம் (17)


PUBLISHED ON : ஆக 07, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 07, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்றவாரம்: மன்னரை சிறைப்பிடித்த தளபதி, மேலை நாட்டு வீரர்களை வரவழைத்து போர் நடத்துவதுபோல நாடகமாட எண்ணினான். அதில் மன்னரும் அமைச்சரும் இறப்பதுபோல் மக்களிடம் செய்தி பரப்பவும் திட்டமிட்டான். இனி-

குணாளனும், மற்றவர்களும் நான்கு திசைகளிலும் சென்று கடைசியில் அவனை இழுத்து வந்தனர்.

'டேய் யார் நீ?''

அப்போது ஒரு கோட்டை வாயிலின் தலைவன், 'மன்னா இவன் நம் அரண்மனை நந்தவனத்தின் தோட்டக்காரன்!''

'இவனுக்கு இங்கு என்ன வேலை? அப்படியென்றால் நம் ராஜதந்திரம் தோல்வியுற்றதா? இன்னமும் மன்னனின் ஆட்கள் இங்கு இருக்கிறார்களா?'' கோபத்துடன் கேட்டான் தளபதி.

'குணாளா! இவன் ஏதோ வேவு பார்த்திருக்கிறான். இவனை தீர்த்துக்கட்டுங்கள்!'' என்றான் தளபதி.

'தளபதியாரே நான் எந்த தவறும் செய்யவில்லை. என்னை கொன்று விடாதீர்கள். ஒரு முக்கிய விஷயம் கூறவே வந்தேன்!'' என்று கூறி தளபதியின் காலில் விழுந்து அழுதான்.

'என்ன முக்கிய விஷயம்?''

'ஒரு பெரியவரை நந்தவனத்தில் கண்டேன். ஒரு வீரன் ரத்தம் கொப்பளிக்க விழுந்து கிடப்பதாக கூறி என்னை அவனை பார்க்க தூண்டிவிட்டு நான் திரும்பி வருவதற்குள் அவர் எங்கோ மறைந்து விட்டார்!''

'குணாளா அப்படியென்றால் அந்த கிழவன் அந்த குரங்குடன் வந்தவன்தானே!

'எப்படி கோட்டையின் அனைத்து கதவுகளும் சாத்தியிருக்கும் போது அவன் மட்டும் தப்ப முடியும். நிச்சயம் அது சாத்தியமில்லை. அவன் அந்த பெரும் நந்தவனத்தில்தான் மறைந்திருக்க வேண்டும். உடனே அவனை கண்டுபிடியுங்கள். அப்படியே அந்த குரங்கும் அங்குதான் இருக்கும். அதையும் பிடியுங்கள்!''

'மன்னா! குரங்கு அந்த சிறுவர்களுடன் மதில் தாண்டி தப்பி விட்டதை நம் வீரர்கள் பார்த்து கூறினர். இலை தழைகளுடன் நல்லானும் அந்த குரங்கின் மிரட்டலால் பெரும் மதில்மீது ஏறி அந்த குரங்குக்கு பயந்து அவனும் சென்று விட்டான். இப்போது நாம் அந்த பெரியவரை மட்டும் தான் தேட வேண்டும். ஆனால், நம் மலைகாட்டு ஒற்றன் நல்லான் கிடைத்தால்தான் நமக்கு அந்த பெரியவரின் முழுவிவரமும் கிடைக்கும்!'' என்றான் குணாளன்.

'சரி! உடனே அதற்கு ஏற்பாடு செய். ஏதோ ஒரு செய்தி கொடுத்ததால் இந்த தோட்டக்காரனை கொல்ல வேண்டாம். மாறாக, நம் விஷயம் இவனுக்கு தெரிந்து விட்டபடியால் இவனை பாதாளச் சிறையில் அடையுங்கள்,'' என்று கட்டளை இட்டான் தளபதி.

தோட்டக்காரன் பாதாளச் சிறையில் அடைக்கப்பட்டான். அனைத்து வீரர்களும் இப்போது சல்லடை போட்டு நந்தவனம் மற்றும் அரண்மனை முழுவதும் அந்த பெரியவரை தேடினர்.

அதே நேரம்-

இரவு, பகல் என்று பல நாட்கள் கப்பலில் பயணித்தனர் சிங்கனும், கேசரியும். சிங்கன் மிகவும் கவலையுடன் காணப்பட்டான். கேசரியும் எதுவும் புரியாமல் அதேசமயம், ஒரு அச்சத்துடன் இருந்தான். காரணம், வானில் ஏற்பட்ட மாற்றங்கள் அவனுக்கு ஒரு பயத்தை கொடுத்தன. அப்போது தான் கேசரி பார்த்தான். அவனுக்கு பெரும் அதிர்ச்சி.

''அண்ணே...''

''என்ன கேசரி... ஏன் இந்த பதட்டம்!''

''இப்போது நீராவி உண்டாக்க, கொதி கலனில் நீரை சூடுபடுத்த கூடிய விறகு கட்டைகள் தீர்ந்து போய் விட்டன. இருக்கும் நீராவி உந்துவிசையால் எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ அவ்வளவு தூரம்தான் நாம் பயணிக்க முடியும். இப்போது நாம் இருப்பதோ நடுக்கடல்.

''கேசரி நீ சொல்வது அனைத்தும் உண்மையே. எனக்கு இது முன்னமேயே தெரிந்துவிட்டது. நீ அச்சப்படுவாய் என்றுதான் சொல்லாமல் இருந்தேன். இருக்கும் உந்து விசை கொண்டு கப்பலை கரை நோக்கி செலுத்துகிறேன். பிறகு நடப்பது நடக்கட்டும்,'' என்றான் சிங்கன்.

சற்று நேரத்தில் பெரும் காற்று பேய்க் காற்றாக வீசத் தொடங்கியது. கனமழையும் பெய்தது. இப்போது கப்பல் அந்த பேய்காற்றில் வேகமாக சுழல ஆரம்பித்தது.

பேய் காற்றில் கப்பலின் ஒவ்வொரு பாகமும் கழன்று கடலில் விழுந்தன. கடைசி யில் நீர் முழுவதும் உள்ளே புகவும் சிங்கனும், கேசரியும் ஜெய் விஜயபுரி; ஜெய் ஜெய் விஜய புரி என்று உரக்க கோஷமிட்டு அந்த மரத்தடி களை பிடித்தபடி கடலில் மூழ்க ஆரம்பித்தனர். என்ன இருந்தாலும் அவர்கள் கங்கை பிரவாகத் தில் நீச்சல் அடிக்கும் திறமை பெற்றிருந்த காரணத்தால் அந்த மரக்கட்டையை இறுக்க பிடித்தபடி இப்போது மிதக்கலாயினர். அவர் கள் பயணித்த கப்பல் சுக்கு நூறாகி அவர்கள் எதிரிலேயே மூழ்கியது. ஆங்காங்கே மரத் துண்டுகள் மட்டும் மிதந்து காணப்பட்டன. இப்போது கடல் முழுவதும் இருள் பரவ ஆரம்பித்தது. ஒருவரை ஒருவர் பார்க்க முடியாதபடி காரிருள் சூழ்ந்தது.

''கேசரி...'' மெல்ல அழைத்தான் சிங்கன்.

இப்போது குளிர் வாட்ட ஆரம்பித்ததால், அவன் குரலில் ஒரு நடுக்கம் இருந்தது.

''அண்ணே கவலைப்படாதீங்க! இப்ப எனக்கு என் வாண்டுபயல் முகமும், என் மனைவி முகமும் தான் தெரியுது. நான் செத்தாலும் அவங்களாவது நல்லா இருக் கட்டும்னு வேண்டிட்டிருக்கேன். நீங்க ஜாக்கிரதையா இருங்கண்ணே... தூக்கத்திலே அந்த கட்டையை விட்டுடாதீங்க!''

''கேசரி உன் கவலையும், மனவருத்தமும் எனக்கு புரிகிறது. நம்மை போன்றவர்களுக்கு தேசம் தான் வாழ்க்கையே. அது நன்றாக இருந்தால் தான் நாமும், நம்மை நாடி இருக்கும் மக்களும் நன்றாக இருப்பர். நாட்டு நலன் காக்க அதாவது, மக்களின் நலன் காக்கவே நம்மை இந்த பணிக்கு நியமித்து இருக்கிறார்கள். அதை நாம் சரியாக செய்தோம். ஆனால், தோற்று விட்டோம். இனி கவலை பட ஒன்றும் இல்லை. மாறாக, சோதனை வரும் போதுதான் நாம் மன திடத்தை இழக்காமல் இன்னும் அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். நீ பிரார்த்தனை செய்தபடி இரு. நாளை சூரிய உதயம் நல்லபடியாக ஆரம்பிக்கட்டும். சரி ஜாக்கிரதையாக இரு,'' என்ற சிங்கன் குளிர் நடுக்கத்தால் வாய் பேச முடியாமல் மவுனியானான்.

எப்படியோ, இரவு பெரும் அச்சத்துடனும், கடுங்குளிரால் ஏற்பட்ட நடுக்கத்துடனும் சென்றது. மழையும், காற்றும் அதன் வேகத்தை தணித்து மெல்ல மெல்ல நின்று போயின.

சிங்கன் கட்டையை பிடித்தபடி மிதந் திருந்தான். இப்போது ஆதவன் மெல்ல தன் செங்கதிர்களை பரவவிட்டபடி ஆடம்பரமாக தலையை நீட்டலானான். சிங்கன் மனம் மகிழ்ந்தான்.

அதே சமயம், ''அய்யோ...'' என்று சிங்கன் கத்தினான்.

காரணம், அங்கே கேசரியை காணவில்லை.

அங்கும், இங்கும் தேடினான் சிங்கன். கேசரியை காணவில்லை. ஆனால், அவன் பிடித்திருந்த கட்டை மட்டும் வெகுதூரத்தில் மிதந்து காணப்பட்டது.

'அய்யோ அப்படி என்றால் அவன் என்ன ஆகியிருப்பான். கட்டை மட்டும் இருக்கிறதே. அப்படி என்றால்?... அய்யய்யோ நினைக்கவே பயமாக இருக்கிறதே. தன் மனைவியையும், மகனையும் மிகவும் நினைப்பதாக கூறினானே. அவன் இல்லாமல்... நான் மட்டும் என்றால்... இல்லை இல்லை நானும் என் தாய் நாட்டிற்காக உயிரை விட்டு விடுகிறேன்' என்ற அவனது கண்கள் கலங்கின.

'ஒரு வேலை ஏதாவது சுறாமீன் அவனை தின்றிருக்குமோ அல்லது திமிங்கிலம் விழுங்கியிருக்குமோ? நினைக்கவே உடல் நடுங்குகிறதே' என்று பலவாறாக சிந்தித்து, தடுமாறி, நிலைகுனிந்து இருந்தவனுக்கு ஆறுதல் தரும் வார்த்தை ஒன்று காற்றில் கலந்து வந்தது.

''அண்ணே! அண்ணே!'' என்ற குரல் கேட்டது.

ஆச்சரியத்துடன் சிங்கன் ஒலி வந்த திசையை உற்று நோக்கினான். ஒரு படகு வந்து கொண்டிருந்தது. அதில் ஒரு வெள்ளை கொடி பறக்க விடப்பட்டு இருந்தது.

இந்த கடலில் இந்த நேரத்தில் நமக்கு பழக்கப்பட்ட குரல்... ஆம் அது நம் கேசரியே தான். அவன் மனம் ஆனந்திக்கவும் படகு அருகில் வரவும் சரியாக இருந்தது.

''அண்ணே ஏறுங்க!'' என்றான் கேசரி.

''ஏய் கேசரி நீ எப்படி இந்த படகில்?''

''அண்ணே நீங்க மன உறுதியுடன், உடல் உறுதியும் மிக்கவர். அதனால் பிடித்த கட்டையுடன் இருந்த இடத்திலேயே இருந்து விட்டீர்கள். ஆனால், நான் அலைகளின் தாக்கத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் அது இழுத்த இழுப்பில் சென்றிருக்கிறேன். ஆனால், அதுவே எனக்கு தெரியவில்லை. அப்போது தான் இந்த படகு வந்தது.

''இது நாம் செல்ல இருக்கும் மேலை நாட்டு படகாம். அங்கு பெரும் புயல் மழையாம். அதனால் மேலை நாட்டு மீனவர்கள் யாராவது நடுக்கடலில் சிக்கி இருக்கிறார்களாக என்று கண்டறியவும், அப்படி இருந்தால் அவர்களை மீட்டு வரவும் அந்த நாட்டு அரசு இந்த மீட்பு படகை அனுப்பி இருக்கிறது. அவர்கள் தான் மிதந்து கொண்டிருந்த என்னை கண்டு அலக்காக தூக்கி, இந்த படகில் போட்டனர். அவர்கள் செல்ல இருந்த போதுதான் தாங்கள் நடுக்கடலில் சிக்கி தவிப்பதாக கூறவும், உடனே அவர்கள் சம்மதித்து, உங்களை தேடி, பிறகு இங்கு மிதப்பதை தங்கள் தூரப்பார்க்கும் கண்ணாடி வாயிலாக அறிந்து வந்தனர்.

''உடனே ஏறுங்கள்,'' என்றவன் கையை நீட்டி சிங்கனை மெல்ல மேலே இழுத்தான்.

- தொடரும்...

- பூரணி


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us