தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பொன் அழகி!

பொன் அழகி!

பொன் அழகி!


PUBLISHED ON : மே 16, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 16, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்னொரு காலத்தில் ஒரு ஊரில் ஒரு இளம் தம்பதியர் வசித்து வந்தனர். கணவனும், மனைவியும் ஒருவர் மீது ஒருவர் அளவிட முடியாத அன்பு செலுத்தி, பிரிக்க முடியாத பாசத்தோடு வாழ்ந்து வந்தனர். மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்த அவர்கள், 'தங்களுக்கு ஒரு குழந்தை பிறக்கவில்லையே...' என்று கவலைப்பட்டனர். இறைவனை மனமுருகி வேண்டினர்.

அவர்கள் வேண்டுதலுக்கு விரைவிலேயே பலன் கிடைத்தது. மனைவி கருவுற்றாள். கணவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கருவுற்ற மனைவியை கணவன் மிகவும் பத்திரமாக பார்த்துக் கொண்டான். அவள் எதை கேட்டாலும், அவள் கேட்ட பொருள் எவ்வளவு விலையானாலும், அது எவ்வளவு தூரத்தில் கிடைத்தாலும், அந்த பொருளை வாங்கிக் கொடுத்து, அவளை மகிழ்ச்சி அடையச் செய்தான்.

காலம் வேகமாக உருண்டோடியது. மனைவி பிரசவ காலத்தை நெருங்கினாள். அப்போது அவளுக்கு உடல் நலத்தில் கோளாறு ஏற்பட்டு, சரிவர உணவு உட்கொள்ள முடியாமல் அவதிப்பட்டாள். அவள் தன் கணவனிடம், தூதுவளை கீரை எங்கேயாவது கிடைத்தால் பறித்து வரும்படி கூறினாள்.

தம்பதியர் வசித்து வந்த வீட்டிற்கு பின்புறம் இருந்த மதிற் சுவருக்கு பக்கத்தில் ஒரு பெரிய தோட்டமும், தோட்டத்துக்கு பக்கத்தில் ஒரு பெரிய வீடும் இருந்தது. தோட்டத்தில் பல வண்ண பூச்செடிகளும், தீர்க்க முடியாத வியாதிகளை தீர்க்கக்கூடிய சக்தி வாய்ந்த மூலிகை செடிகளும் நிறைந்திருந்தன. தோட்டமும், தோட்டத்தில் இருந்த பெரிய வீடும், மாய மந்திரங்கள் தெரிந்த ஒரு மந்திரக்கார கிழவிக்கு சொந்தமானது.

மனைவி கேட்ட தூதுவளை கீரை, மந்திரக்காரியின் தோட்டத்தில் இருப்பதை அறிந்த கணவன், மனைவி இடம் மந்திரக் காரியின் தோட்டத்தில் இருப்பதாக கூறினான்.

கணவன், தான் கேட்ட கீரை மந்திரக்காரியின் தோட்டத்தில் இருப்பதாக கூறியதை கேட்டதும் மனைவி சற்று நேரம் யோசித்தாள்.

''கீரையை மந்திரக்காரியின் தோட்டத்தில் இருந்து பறிப்பது சற்று கடினமாயிற்றே எப்படி பறிக்கப் போகிறீர்கள்?'' என்று கேட்டாள்.

''நீ கூறுவது போல் கீரையை மந்திரக்காரியின் தோட்டத்தில் இருந்து பறிப்பது சுலபமான காரியம் இல்லை. நடு இரவில் மந்திரக்காரி உறங்கும் நேரத்தில் அவள் தோட்டத்தில் இருந்து கீரையை பறித்து வந்து விடுகிறேன்,'' என்று கூறினான் கணவன்.

கணவனும், மனைவியும் சூரியன் மேற்கே மறைந்ததும், தங்கள் வீட்டிற்கு பின்புறம் இருந்த மந்திரக்காரியின் வீட்டையே பார்த்துக் கொண்டு இருந்தனர்.

நடு இரவு வந்தது. மந்திரக்காரி, தன் வீட்டு விளக்குகளை அணைத்தாள். தான் சென்று மந்திரக்காரியின் தோட்டத்தில் இருந்து கீரையை பறித்து வருவதாக கூறினான். கணவன்.

கணவன் ஓசைப்படாமல், மந்திரக்காரியின் தோட்டத்துக்கு சென்று தூதுவளை கீரையை பறித்துக் கொண்டு வந்து தன் மனைவியிடம் கொடுத்தான். மனைவியும் தன் கணவன் கொண்டு வந்து கொடுத்த தூதுவளை கீரையை நன்கு சமைத்து சாப்பிட்டாள். தூதுவளை கீரையை உண்பதால், மனைவியின் உடலில் புத்துணர்ச்சி ஏற்பட்டு, மகிழ்ச்சியோடு காணப்பட்டாள். மனைவியை பார்த்த கணவன் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தான்.

கணவனின் மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. மனைவிக்கு மீண்டும் உடல்நல குறைவு ஏற்பட்டு, தன் கணவனிடம் மந்திரக்காரியின் தோட்டத்தில் இருந்து தூதுவளை கீரையை பறித்து வரும்படி கூறினாள்.

இரவு வந்ததும் கணவன் மந்திரக்காரியின் தோட்டத்துக்கு சென்று தூதுவளை கீரையை பறித்துக் கொண்டிருந்த போது, திடீர் என்று மந்திரக்கார கிழவி அவன் முன் வந்தாள்.

''என் தோட்டத்தில் வளர்ந்துள்ள தூது வளை கீரையை என் அனுமதி இல்லாமல் எப்படி பறிக்கலாம்?'' என்று கூச்சல் போட்டாள்.

அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவன் நடுநடுங்கியபடியே, மந்திரக்கார கிழவியை பார்த்தான்.

''தன் மனைவி கருவுற்றிருப்பதாகவும், அவள் ஆசைப்பட்டு தூதுவளை கீரையை கேட்பதால் தான், தான் வந்து தூதுவளை கீரையை பறித்ததாகவும்,'' கூறினான்.

''உன் மனைவி கேட்பதால், நீ தூதுவளை கீரையை பறித்துச் செல்ல அனுமதி அளிக்கிறேன். ஆனால், நீ தூதுவளை கீரையை எடுத்துச் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டால், நீ உன் மனைவிக்கு பிறக்கும் முதல் குழந்தையை என்னிடம் ஒப்படைக்க வேண்டும்,'' என்று கூறினாள்.

மந்திரக்கார கிழவி கூறியதை கேட்ட அவன், அதிர்ச்சியுற்று, மயக்கமடைந்தான்.

மயக்கம் தெளிந்த அவன் மந்திரக்கார கிழவியை பார்த்தான்.

''தனக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு இப்போதுதான் முதல் குழந்தை பிறக்கப் போகிறது. பிறக்கும் முதல் குழந்தையை கேட்காதீர்கள்,'' என்று மிகவும் பணிவாக கூறினான்.

மந்திரக்கார கிழவி அவன் கூறியதை கேட்பதாக இல்லை. அவள் விடாப்பிடியாக முதல் குழந்தையை தன்னிடம் ஒப்படைத்தால் தான் தூதுவளை கீரையை எடுத்துச் செல்ல அனுமதிப்பதாக கூறினாள். மனைவி ஆசைப்பட்ட தூதுவளை கீரையை அவள் சமைத்து உண்டு மகிழ்வதை காண ஆசைப்பட்ட கணவன் மந்திரக்கார கிழவி கேட்டபடி, தன் முதல் குழந்தையை அவளிடம் ஒப்படைப்பதாக கூறி தூதுவளை கீரையை பறித்து, அதை எடுத்து வந்து தன் மனைவியிடம் கொடுத்தான்.

மனைவி தன் கணவன் தான் ஆசைப்பட்ட தூதுவளை கீரையை கொண்டு வந்து தன்னிடம் கொடுத்ததை வாங்கி, அதை சுவையாக சமைத்து தன் கணவனுக்கும் உண்ண கொடுத்து, தானும் உண்டு மகிழ்ச்சி அடைந்தாள்.

தன் மனைவி தனக்கு கொடுத்த சுவையான தூதுவளை கீரையை உண்டாலும், கணவனின் முகம் கவலையோடு காணப்பட்டது.

கணவன் கவலையோடு இருப்பதை பார்த்த அவன் மனைவி, கவலைக்கான காரணம் என்ன என்று கேட்டாள்.

கணவனும், தூதுவளை கீரையை பறிக்கும்போது மந்திரக்கார கிழவி தன்னிடம், பிறக்கும் முதல் குழந்தையை அவளிடம் ஒப்படைக்கச் சொன்னதை தன் மனைவியிடம் சோகத்தோடு கரகரத்த குரலில் கூறினான்.

கணவன் கூறியதை கேட்ட மனைவி சற்றும் கலங்கவில்லை. அவள் தன் கணவனை பார்த்து கவலைப்படாமல் இருக்குமாறு கூறி, ''எல்லாம் ஆண்டவன் கட்டளைப்படிதான் நடக்கும். நமக்கு பிறக்கும் முதல் குழந்தை மந்திரக்கார கிழவியிடம் வளர வேண்டும் என்று விதி இருந்தால், விதிப்படி நடக்கட்டும்,'' என்று கூறி தன் கணவனை தேற்றினாள்.

மனைவிக்கு குழந்தை பிறந்ததும், மந்திரக்கார கிழவி நேராக வந்து, பிறந்த பெண் குழந்தையை தூக்கிக் கொண்டு குழந்தைக்கு, 'பொன் அழகி' என்று பெயர் சூட்டுவதாக கூறி அந்த குழந்தையை தன் வீட்டிற்கு எடுத்து வந்து விட்டாள்.

மந்திரக்கார கிழவியின் தோட்டத்தில் வளரும் குழந்தையை பெற்றவர்கள் தங்கள் வீட்டு தோட்டத்தில் இருந்து பார்த்தபடி, பெருமூச்சு விட்டனர்.

குழந்தைக்கு பதினான்கு வயது வந்த உடன் மந்திரக்கார கிழவிக்கு பயம் வந்து விட்டது. குழந்தை பக்கத்து வீட்டில் வசிக்கும் தன் தாய், தந்தையிடம் சென்று விடப் போகிறாள் என்று பயந்து, குழந்தையை யாரும் பார்க்காத இடத்தில் மறைத்து வைத்தாள்.

அவள் மறைத்து வைத்த இடம் ஒரு உயரமான கோட்டை. அந்த கோட்டையில் ஒரு உயரமான கோபுரம் போன்ற அறையில்தான் மந்திரகார கிழவி பொன் அழகியை அடைத்து வைத்தாள்.

-தொடரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us