PUBLISHED ON : ஏப் 21, 2017

கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன், தேனி, கொண்டு ராஜா நடுநிலைப்பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். என் வகுப்பு தோழி சரஸ்வதி, படிப்பில் ஆர்வமே இல்லாதவள். அடிக்கடி ஏதாவது காரணம் கூறி, லீவு லெட்டர் எழுதி கொடுத்தனுப்பி விட்டு பள்ளிக்கு வர மாட்டாள்.
ஒருநாள், வகுப்பாசிரியர் குருசாமி, 'இந்த இரண்டு மாதத்தில், மூன்று முறை பாட்டி இறந்துவிட்டதாக லீவு லெட்டர் கொடுத்துள்ளாய். சரி, உனக்கு இன்னும் எத்தனை பாட்டிகள் மீதம் உள்ளனர்' என்று சரஸ்வதியிடம் கேட்டார்.
விழி பிதுங்கி, தலை குனிந்து நின்றாள் சரஸ்வதி. வகுப்பில் உள்ள அனைவரும், 'கொல்' என்று சிரித்து விட்டோம். சற்று கோபத்துடன், 'அமைதி!' என்று கூறிய ஆசிரியர், சில நொடிகளில் சாந்தமாகி, மேலும் தொடர்ந்தார்.
'பிள்ளைகளே, நீங்கள் பெற்றோரை சுலபமாக ஏமாற்றலாம்; ஆசிரியரையும் கூட ஏமாற்றி விட்டதாக நினைக்கலாம். ஆனால், உங்களையே நீங்கள் ஏமாற்று கிறீர்கள் என்பது தான் உண்மை. உங்களின், சிறப்பான எதிர்கால வாழ்க்கைக்கு உரமிடும் உன்னதமான பருவம், பள்ளி மாணவப் பருவம் தான்.
'மீண்டும் பெற முடியாத இந்த மாணவப் பருவத்தை, பாழ்படுத்தாமல், பக்குவமாக பயன்படுத்தி, முன்னேற்றம் காணுங்கள்...' என்றார் மிக உருக்கமாக.
எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய இந்த ரத்தின சுருக்கமான வாசகங்கள், இப்போதும் கூட, என் இதயத்தினுள் ஒலித்து கொண்டே இருக்கிறது.
- வி.ராஜலட்சுமி, திருவூர்.
உங்க தோழி திருந்தினாங்களா இல்லையான்னு சொல்லவே இல்லையே...
- பொறுப்பாசிரியர்.
