
''மன்னித்து விடுடா... கோபத்தில் பேசிட்டேன்...''
நண்பனிடம் மன்னிப்புக் கோரிய மாணவன் சிபியை, கனிவுடன் கவனித்தார் ஆசிரியர் நாராயணன்.
அவனை, தனியாக மரத்தடிக்கு அழைத்தார். பயந்தபடியே வந்தவனிடம், ''மன்னிப்புக் கேட்பது நல்ல பண்பு; உன்னை பாராட்டுவதற்காக தான் அழைத்தேன்...'' என்றார்.
மனம் நெகிழ்ந்தான்.
''அடிக்கடி நீ கோபப்படுவதை பார்க்கிறேன்; இனி, கோபப்பட்டு பேசும் ஒவ்வொருமுறையும், இந்த மரத்தில் ஒரு ஆணியை அடி...'' என்றார்.
சிபி ஒப்புக்கொண்டான்.
ஒரு மாதத்திற்குப் பின் மீண்டும் அழைத்தார் ஆசிரியர்.
மரத்தில் ஏராளமாக ஆணிகளை அடித்திருந்தான்.
அனைத்தையும் பிடுங்கி எடுக்கச் சொன்னார்; எடுத்தான்.
இப்போது மரத்தை காட்டினார்.
''ஆணிகளை எடுத்த பின், காயம் போல் துளைகள் இருப்பதை பார்த்தாயா... அதுபோல, சுடுச்சொற்கள் பேசியதற்காக மன்னிப்பு கேட்டாலும், அந்த காயம் அப்படியே தான் இருக்கும்...'' என அறிவுரைத்தார்.
தவறை உணர்ந்தான் சிபி.
சினம் என்னும் சேர்ந்தார்க் கொல்லியையும், கடுஞ்சொல் எனும் பெருங்கேட்டையும் கைவிட்டான்.
குட்டீஸ்... இனியதையே நினையுங்கள்; இனியதையே படியுங்கள்; இனியதை பேசுங்கள்

