PUBLISHED ON : அக் 16, 2021

மதுரை, பு.மு.மாரிமுத்து நாடார் உயர்நிலைப் பள்ளியில், 1953ல், 6ம் வகுப்பில் சேர்வதற்கு நுழைவு தேர்வு எழுத போனேன். சுற்றியுள்ள, 15 கிராமங்களுக்கும் ஒரே பள்ளி அதுதான். அதனால், மாணவர் கூட்டம் அதிகமாக இருந்தது.
ஒருவன், தேர்வு எழுத போதிய வெள்ளைத்தாள் எடுத்து வரவில்லை. ஆசிரியர் மரிய பொன்னையாவிடம் அதுபற்றி கூறினான். கூடுதல்தாள் வைத்திருப்பவர் கொடுக்கும்படி வேண்டினார். போட்டி மனப்பான்மையுடன் யாரும் கண்டு கொள்ளவில்லை.
என் அருகில் வந்து உதவ கோரினார். இரண்டு தாள்களை தந்தேன். தேர்வு முடிந்து, பள்ளியில் சேர அனுமதி கிடைத்தது.
இடைநிலை வகுப்பை முடித்து, 9ம் வகுப்புக்கு பிரிவு மாற்றம் செய்தனர்; சிறப்பு கணிதம் தேர்ந்தெடுத்திருந்தேன். கோவிந்தன் என்ற மாணவன் என் பிரிவில் சேர்ந்து, முதல் நாளே நெருங்கிய நண்பனாகி விட்டான். மூன்று ஆண்டுகள் சேர்ந்து படித்தோம்.
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிந்தது. விடைபெறும் நேரம் வந்த போது என் கைகளை பற்றி, 'அன்று நுழைவுத் தேர்வின் போது வெள்ளைத்தாள் தந்து நீ உதவாமல் இருந்திருந்தால் இங்கு அட்மிஷன் கிடைத்திருக்காது...' என விழிகள் பனிக்க கூறினான் அந்த நண்பன்.
தற்போது, என் வயது, ௭௯; சிறு உதவியை மனதில் சுமந்த அந்த நண்பனுடன் தொடர்பு அறுந்து, பல ஆண்டுகளாகி விட்டன. ஆயினும், நினைவு பசுமையாகவே உள்ளது!
- வெ.சுந்தரராஜன், மதுரை.
