
திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம், புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில், 1996ல், 7ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.
மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையே ஓவியப் போட்டியில், இரண்டாம் பரிசு வென்றேன். அன்று முதல், ஓவிய ஆசிரியர் அந்தோவுக்கு நெருக்கமானேன். எனக்குள் இருக்கும் ஓவியத்திறனை மெருகேற்றினார். போட்டிகளில் பங்கு பெற வைத்தார்.
அந்த ஊக்கத்தால் நான் வரைந்த ஓவியம், பிப்., 28, 1997 சிறுவர்மலர் இதழில், 'உங்கள் பக்கம்' பகுதியில் வெளியானது. அதைக் கண்டு மகிழ்ந்து பூரித்தார்.
நான் மிகவும் அமைதியாக இருப்பேன். யாரிடமும் அதிகம் பேச மாட்டேன். இதை அறிந்தவர், 'திறமை மட்டும் உயர்த்தாது; திறமையுடன் கூடிய தலைமைப் பண்பு தான் உயர்த்தும்... தலைமைப் பண்பை வளர்க்க கலகலப்பாக பலரிடம் பேசி பழக வேண்டும்...' என்று அறிவுரை கூறினார்.
பள்ளிகளுக்கிடையேயான ஓவிய கண்காட்சி, எங்கள் பள்ளி வளாகத்தில் நடைபெறவிருந்தது. அதில், மாணவர்களை ஒருங்கிணைத்தல், படைப்புகளை காட்சிப்படுத்துதல், வரவேற்பு வாயிலை வடிவமைத்தல் போன்ற பொறுப்புகளை ஒப்படைத்தார்.
செவ்வனே செய்து பாராட்டு பெற்றேன். அன்றுதான், என்னுள்ளிருந்த தலைமைப் பண்பை உணர்ந்தேன்.
தற்போது என் வயது, 36; தனியார் பல்கலைக்கழகத்தில் கணினித்துறை தலைவராக பணிபுரிகிறேன். அந்த ஆசிரியர் உணரச் செய்த தலைமைப் பண்பு, இன்று வழி நடத்துகிறது. அவரை வழிகாட்டியாக எண்ணி வாழ்கிறேன்.
- எஸ்.பிரபுராஜா, மதுரை.
தொடர்புக்கு: 90432 11154

