PUBLISHED ON : ஆக 02, 2019

சிவகங்கை மாவட்டம், சருகணி, புனித சின்னப்பர் நடுநிலைப் பள்ளியில், 1993ல், 8ம் வகுப்பு படித்தேன்.
சமூக அறிவியல் பாட ஆசிரியர் ஆரோக்கியசாமி, அன்புடன் உரையாடுவார். ஒரு நாள், 'உங்கள் திறமைகளை கூறுங்கள்...' என்று மாணவர்களைக் கேட்டார். அனைவரும் கூறினர்.
நான், சொல்வதறியாது திணறினேன். மிகுந்த கூச்சத்தால் தயங்கி நின்றேன். திரும்ப திரும்ப கேட்டும், சொல்ல இயலாமல் தவித்தேன். அருகிலிருந்த மாணவர்கள், 'நல்லா மனப்பாடம் செய்வான் ஐயா; எத்தனை பக்கம் கொடுத்தாலும், உடனே ஒப்பிச்சுடுவான்...' என்றனர்.
வியந்த ஆசிரியர், ஆங்கில புத்தகத்தில், ஒரு பக்கத்தை குறித்து, 'இதை, 10 நிமிடங்களில் மனப்பாடம் செய்து ஒப்பித்து காட்டு...' என்றார்.
உடனடியாக ஒப்பித்தேன்; மகிழ்ந்து பாராட்டியவர், வகுப்பு முடிந்ததும், வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
அவரது நுாலகத்தைக் காட்டி, 'நிறைய படிக்க வேண்டும்; படிப்பதால் தன்னம்பிக்கை வளரும்; தாழ்வு மனப்பான்மையும், கூச்ச சுபாவமும் விலகும்...' என, உணர்த்தி, நுால்கள் கொடுத்தார்.
அவரது துாண்டுதலால், 14 வயதில் பொது நுாலக உறுப்பினர் ஆனேன். அன்று முதல் வாசிப்பே, என்னை வழி நடத்தி வருகிறது.
எத்தனையோ இலக்கியக் கூட்டங்களில் பேசியிருக்கிறேன்; கவிதை பட்டறைகளில் வகுப்பெடுத்திருக்கிறேன். அனைத்து முன்னணி தமிழ் இதழ்களிலும், என் படைப்புகள் வெளி வந்திருக்கின்றன.
தற்போது என் வயது, 39. சாதாரண கிராமத்தில் பிறந்த என்னை, இந்த நிலைக்கு உயர்த்தியது நுால் வாசிப்பு என்ற ராஜபாட்டை தான். அதற்கு துாண்டிய ஆசிரியர் இருக்கும் திசை நோக்கி, விழுந்து வணங்குகிறேன்!
- துஷ்யந்த் சரவணராஜ், சிவகங்கை.
தொடர்புக்கு: 99433 32116
