
நான் திருநெல்வேலி மாவட்டம் இடையன்குடியில் உள்ள கால்டுவெல் நினைவு மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது நடந்த சம்பவம்.
எங்களது அக்கவுன்டன்சி ஆசிரியர் முகம்மது மிகவும் கண்டிப்பானவர். ஆனால், நாங்கள் படிக்கும் போது எங்களை கண்டிக்காமல், சொந்தப் பிள்ளைகள் போல் நடத்தினார்.
ஆனால், நாங்கள் அந்த பாசத்தை, சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தினோம். மற்ற எல்லா பாடங்களையும் படித்துவிட்டு அந்த பாடத்தை மட்டும் படிக்காமல், எழுதாமல் வருவோம். அவர் அன்பு கலந்த கண்டிப்புடன் எங்களை படிக்கச் சொல்வார். ஆனால், நாங்கள் அதை கண்டு கொள்வதில்லை.
ஒருநாள் அதிக வீட்டுப் பாடம் கொடுத்திருந்தார். வழக்கம் போல் விளையாட்டாக, பயமில்லாமல் வீட்டுப் பாடத்தை முடிக்காமல் வந்தோம்.
'வீட்டுப்பாடம் எழுதாதவர்கள் யார்?' என்று கேட்டார் ஆசிரியர்.
எல்லாரும் எழுந்து நின்றோம். உடனே, அவருக்கு கோபம் வந்து விட்டது. ஆபீஸ் பியூனைக் கூப்பிட்டு ஏதோ எழுதிக் கொடுத்தார். சிறிது நேரத்தில் பிரின்சிபல் எங்களை அழைப்பதாக பியூன் சொன்னார். எங்கள் வகுப்பு மாணவர்களும், மாணவிகளும் ஆபீஸ் ரூமுக்கு வரிசையாக சென்றோம்.
அங்கு பிரின்ஸிபல் பிரம்பால் எல்லாருக்கும் இரண்டு கைகளிலும் ஒவ்வொரு அடி கொடுத்தார். வேதனையால் துடித்து, அழுகையை அடக்க முடியாமல் விம்மலுடன் தலைகுனிந்து வகுப்பறைக்கு வந்தோம். எல்லா வகுப்பு மாணவர்களும் எங்களை வேடிக்கை பார்த்தனர்.
நாங்கள் எல்லாரும் வகுப்பிற்கு வந்து தலையை கவிழ்ந்து அழுது கொண்டிருந்தோம். இதைப் பார்த்த எங்கள் ஆசிரியர் மிகவும் வேதனையடைந்தார்.
'எனக்கு ஒரே பையன். அவன் கிட்னி பெயிலியராகி தன்னுடைய கடைசி நிமிடங்களை எண்ணிக் கொண்டிருக்கிறான். வீட்டிற்கு போனால் எனக்கு தூக்கமில்லை; நிம்மதியில்லை.
'அதனால்தான் நான் பெற்ற பிள்ளைகளாக நினைத்து உங்களிடம் பாசமாக, பிரியமாக நடந்து கொள்கிறேன். ஆனால், நீங்கள் அந்த தூய்மையான அன்பை தவறாக பயன்படுத்திவிட்டீர்கள். அதனால் தான் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்' என்றார்.
உடனே, நாங்கள் அனைவரும் சத்தமாக அழுதுவிட்டோம். 'நல்ல உள்ளத்தை வேதனைப்படுத்தி விட்டோமே!' என்று சொல்லி அவரிடம் மன்னிப்புக் கேட்டோம். அந்த வாரம் ஞாயிறு அன்று அவருடைய வீட்டிற்கு போய் அவரது மகனை பார்த்துவிட்டு வந்தோம். அது அவருக்கு மிகவும் சந்தோஷத்தை தந்தது.
அதிலிருந்து அக்கவுன்டன்சி பீரியட் வரும்போது நாங்கள் மிகவும் சந்தோஷமாக இருப்போம். அவரது பாடத்தை நன்றாகப் படித்தோம். பன்னிரெண்டாம் வகுப்பில் நாங்கள் அனைவரும் மற்ற பாடத்தை விட அதிக, 'மார்க்ஸ்' எடுத்து, 'பாஸ்' பண்ணினோம்.
அது அவருக்கு நாங்கள் கொடுத்த மிகப்பெரிய சந்தோஷம். அந்த நாட்களை நான் இன்றும் நினைத்துப் பார்க்கிறேன். அந்த சுவாரஸ்யமான, சந்தோஷமான நாட்களுக்காக ஏங்குகிறேன். மாதா, பிதாவைப் போல குருவும் ஒரு தெய்வம் என்பதை அந்த அன்பான ஆசிரியர் மூலம் நான் அனுபவித்து உணர்ந்தேன்.
- எஸ்.நிர்மலா ராணி, மார்க்கம்பட்டி.