PUBLISHED ON : செப் 17, 2022

கடலுார் மாவட்டம், விருத்தாசலம், அரசு உயர்நிலைப் பள்ளியில், 1979ல், 8ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு!
அரையாண்டு தேர்வில் அன்று சமூகவியல் பாடத் தேர்வு நடந்தது. சமூகவியல் ஆசிரியர் ஜெகதீசனே, மேற்பார்வையாளராக வந்திருந்தார். வினாத்தாளை வாங்கியதும், நன்கு படித்து தெளிவு பெற்றேன். பின், விடைகளை எழுத ஆரம்பித்தேன்; ஒரு விடை நினைவில் வரவில்லை. பக்கத்திலிருந்த தோழியிடம், வினா எண்ணை கூறி, 'காந்திஜியின் குரு யார்...' என்று கேட்டேன். இதை, கண்டும் காணாமல் இருந்தார் ஆசிரியர்.
வினாவிற்குரிய பதிலை, ரகசியமாக உதடுகளை குவித்தபடி சொன்னாள் தோழி. அவள் கூறிய, 'கோகலே' என்பதை புரிந்து கொள்ளாமல் அவசரத்தில், 'கேக்கலே' என எழுதி விட்டேன். திருத்திய விடைத்தாளை என்னிடம் கொடுத்தபோது, 'உதடுகளை குவித்து உன் தோழி, சரியாக விடை கூறிய போதும், செவியில் வாங்காமல், தவறாக எழுதி விட்டாயே...' என்றார் ஆசிரியர். என் முகத்தில் அசடு வழிந்தது. தவறை உணர்ந்து திருந்தினேன்.
இப்போது என் வயது, 59; பள்ளி பருவத்தில் நடந்த நிகழ்வை, பேரன், பேத்தியர் மற்றும் என் தோழியரிடம் பகிர்ந்து மகிழ்கிறேன்.
- ஜெ.சாவித்திரி, காஞ்சிபுரம்.
தொடர்புக்கு: 63827 05824
