
ஸ்ரீவில்லிபுத்துார், சி.எம்.எஸ்.உயர்நிலைப் பள்ளியில், 1956ல், 9ம் வகுப்பு படித்தபோது, விடுதியில் தங்கியிருந்தேன். தலைமை ஆசிரியர் ஜி.ஐ.மாணிக்கவாசகம், விடுதி காப்பாளராகவும் பணியாற்றினார்.
சீசனில் விடுதி மாணவர்களை, குற்றாலத்துக்கு சுற்றுலாவாக அழைத்துச் சென்றார். மூன்று நாட்கள் அங்கு தங்கியிருந்தோம். காலையில் அருவிகளில் குளித்து, விடுதியில் சாப்பிட வேண்டும். பின், இயற்கையை ரசிக்க அழைத்து செல்வார். மீண்டும் அருவிகளில் குளிக்க வேண்டும்.
இரவு உணவுக்குப் பின், கலை நிகழ்ச்சிகள் நடத்தி, குதுாகலம் கொள்ள வைத்தார். இவ்வாறு மூன்று நாட்கள் மகிழ்ச்சி அனுபவித்தோம்.
சுற்றுலாவின் முதல் நாள், அனுமதியின்றி தென்காசி திரையரங்கில் படம் பார்க்க சென்றனர் சில மாணவர்கள். அவர்களை, கண்டுபிடித்து அழைத்து வந்தனர் ஆசிரியர்கள்.
குற்றாலத்தில் இருக்கும் வரை அவர்களுக்கு எந்த தண்டனையும் இல்லை. சீசனை அனுபவித்து திரும்பியதும், 80 பக்க
நோட்டு புத்தகம் வாங்கி வர செய்தார் தலைமை ஆசிரியர். அதில், 'குற்றால சீசனை அனுபவிக்காமல், சினிமா பார்த்து கடமை தவறினேன். இனி, இதுபோன்று தவறு செய்ய மாட்டேன்' என, 2 ஆயிரம் முறை எழுத வைத்தார். அத்துடன், ஐந்து ரூபாய் அபராதமும் விதித்தார்.
அது, கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நடைமுறையை, பசு மரத்தாணிப்போல் மனதில் பதிய வைத்தது. அவரை போல் சிறந்த ஆசிரியராக வேண்டும் என சபதம் ஏற்று படித்தேன்; பள்ளி கல்வித்துறையில் சேர்ந்து, நல்லாசிரியர் விருது பெற்றேன்.
இப்போது என் வயது, 79; தொடக்க கல்வி துறையில், துணை இயக்குனராக பதவி வகித்து ஓய்வு பெற்றேன். லட்சியத்துடன் பணியாற்ற துாண்டிய அந்த தலைமை ஆசிரியரை நன்றியுடன் நினைவில் கொண்டுள்ளேன்.
- ஜி.கோவிந்தசாமி, சென்னை.

