
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம், அரசு உயர்நிலைப் பள்ளியில், 1973ல், எஸ்.எஸ்.எல்.சி., படித்த போது நிகழ்ந்த சம்பவம்!
தலைமை ஆசிரியர், எஸ்.வி.சுப்ரமணியம் ஆங்கில பாடம் எடுப்பார். விடுமுறை நாட்களில், சிறப்பு வகுப்பு நடத்தி உற்சாகப்படுத்துவார்.
கல்வி ஆண்டின் இறுதியில், கிராமத்துக்கு சென்றவர், எதிர்பாராத விதமாக, மிதிவண்டியில் இருந்து தவறி விழுந்துவிட்டார். இடது கையில் அடிப்பட்டு, மாவு கட்டு போட வேண்டிய நிலை ஏற்பட்டது.
பொதுத்தேர்வு நெருங்கி கொண்டிருந்தது. எனவே, வேறு ஆசிரியரை வைத்து, பாடங்களை முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கு அவர் ஒப்புதல் அளிக்கவில்லை.
வலியைப் பொருட்படுத்தாமல் தவறாமல் வந்து வகுப்பை நடத்தினார். அனைத்து பாடங்களையும் பொறுப்பாக கற்றுத்தந்தார்.
இறுதி தேர்வில் அனைவரும் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றோம்; மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
என் வயது, 63; உடன் படித்த தோழர்களை சந்திக்கும் போது, அந்த தலைமை ஆசிரியரின் நற்பண்புகளை நினைவு கூர்ந்து மகிழ்கிறேன்!
- பி.மோகன்ராஜூ, சென்னை.
தொடர்புக்கு: 98841 61988

