PUBLISHED ON : ஆக 24, 2018

அமெரிக்காவில் உள்ள அலபாமா மாநிலம், டஸ்கிகீ நகரில், பிப்ரவரி 4, 1913ல், ரோசா பார்கஸ் பிறந்தார். இயற்பெயர், ரோசா லூசி மெக்காலி. 'கருப்பினத்தை சேர்ந்தவள் என்பதற்காக, யாருக்கும் குறைந்தவள் இல்லை' என்று குழந்தை பருவத்திலே மன உறுதியுடன் இருந்தார். துணிச்சல் மிக்கவர். நவீன குடியுரிமை இயக்கத்தின் தாய் என, போற்றப்படுகிறார்.
ஒருசமயம், அமெரிக்கா, மாண்ட்கோமரி நகரத்தில், பேருந்துக்காக காத்திருந்தார். பேருந்தில், 'வெள்ளையர் அமரும் இடம் காலியாக இருந்தாலும், கருப்பர் அமரக்கூடாது' என்பது அப்போதைய நடைமுறை. அதேசமயம், வெள்ளை இனத்தவர் அதிகம் பயணித்தால், கருப்பினத்தவர், இருக்கையை விட்டுத்தர வேண்டும். இது, எழுதப்படாத விதியாக இருந்தது.
பேருந்து வந்தது; இருக்கையில் அமர்ந்தார், ரோசா. வெள்ளையர்கள் அமர, இருக்கை இல்லை. வழக்கம் போல, நடத்துனர் உத்தரவிட, கறுப்பர்கள் எழுந்து இருக்கையை தந்தனர். ஆனால், ரோசா இருக்கையை விட்டுத் தர மறுத்துவிட்டார்.
பின்னிருக்கைக்கு, நகரச் சொன்னார் நடத்துனர். அதற்கு, 'நான் இங்கு அமர்ந்தால் என்ன...' என்று எதிர்கேள்வி கேட்டார்.
'தெரியாத மாதிரி பேசாதே... பேருந்தின் முன் வரிசை இருக்கைகள், வெள்ளை இனத்தவர் அமர ஒதுக்கப்பட்டவை; இதில் கருப்பர் அமரக் கூடாது...' என்றார், நடத்துனர்.
'பயணிக்கும் அனைவரும் மனிதர்கள் தான்; இங்கே நிற வேறுபாடு காட்டுவதை, எதிர்க்கிறேன்; என் இருக்கையை விட்டுத்தர மாட்டேன்...' என்று அமைதியாக சொன்னார், ரோசா!
அவர் மீது, விதி மீறல் சட்டம் பாய்ந்தது. கைது செய்து, அபராதம் விதித்தனர்.
வெகுண்டெழுந்தவர், மக்களை திரட்டினார். கொடுமைகளை கண்டித்து முழங்கினார். இது, கருப்பின மக்களை கவர்ந்தது. நிறத்தின் பெயரால் நடக்கும் மனித உரிமை மீறல்களை, மீட்க வீறுகொண்டு எழுந்தனர், கருப்பின மக்கள். பேருந்து பயணத்தையே புறக்கணித்தனர்; அனைத்து பேருந்துகளும் காலியாகச் சென்றன. ஒரு ஆண்டுக்கும் மேலாக, இந்த போராட்டம் தொடர்ந்தது.
வன்முறையில்லை; கல்வீச்சு இல்லை. இப்படி ஒரு போராட்டத்தை அமெரிக்கர்கள் கண்டதில்லை. இறுதியில், அமெரிக்க உச்சநீதி மன்றம், 'பேருந்து இருக்கைகளை பிரிக்கும் சட்டம், அமெரிக்க அரசியல் அமைப்புக்கு எதிரானது' என்று தீர்ப்பு கூறியது.
சிறை சென்றதால் ரோசாவின் வேலை பறிபோனது. ஆனால், அவரது மனம் தளராத போராட்டம் வென்றது.
'ரோசா பார்க்ஸ் மை ஸ்டோரி' என்ற தன்வரலாற்று நூலை, 1992ல், வெளியிட்டார். அது, பிரபலமானது. அவர், 92 வயதில், அக்டோபர் ௨௪, ௨௦௦௫ல் மரணம் அடைந்தார்.
இறுதிச் சடங்கில், அமெரிக்க அரசாங்கம், அரசு மரியாதை செலுத்தியது. நகர பேருந்துகளின் முன்னிருக்கையில், கருப்பு நிற ரிப்பன்கள் வைத்து, பயணிகளும் அஞ்சலி செலுத்தினர்.
பேருந்து இருக்கைக்காக போராடியவர், மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
இருக்கை கேட்டு, நிறவெறிக்கு எதிராக பாடுபட்ட ரோசாவுக்கு, அமெரிக்க அரசின், 'பிரெசிடென்சியல் மெடல் ஆப் பிரிடம்' என்ற உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. இது, அவரது போராட்டத்துக்கு பெருமை சேர்க்கிறது. மாண்ட்கோமரி நகர அருங்காட்சியகம், நூலகம் ஆகியவற்றுக்கு, இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க தேசிய சிலை காட்சியகத்தில், சமூக முன்னோடிகளின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில், ரோசாவின் சிலையும் இடம் பெற்றுள்ளது. அமெரிக்க வாழ் ஆப்பிரிக்கரின், முதல் சிலை இதுதான்! இவர் உருவம் பொறித்த அஞ்சல் தலையை, அமெரிக்க அரசு, 2013ல், வெளியிட்டு பெருமை படுத்தியது.
