தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/குளத்துக்குள் நெருப்பு வைத்தவர்!

குளத்துக்குள் நெருப்பு வைத்தவர்!

குளத்துக்குள் நெருப்பு வைத்தவர்!


PUBLISHED ON : ஜன 01, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 01, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மன்னார்குடி என்னும் கிராமத்திலுள்ள கோவில் குளத்தில் சிறுவர்கள் நாள்தோறும் குதித்துக் கும்மாளம் போட்டுக் கொண்டிருந்தனர்.

இது அவ்வூர் கோவில் பூசாரிக்கு பிடிக்கவில்லை. அவர்களைப் பார்த்து, ''நீங்கள் இங்கே குளிக்கக் கூடாது,'' என்று எச்சரித்தார்.

ஆனால், அவர்களோ கேட்கவில்லை. தினமும் அங்கு வந்து குளித்துக் கொண்டிருந்தனர்.

கோபம் கொண்ட பூசாரி, ''நாளைக்கு நீங்கள் இங்கே குளிப்பதை பார்த்தால், நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது,'' என்று கத்தினார்.

பூசாரியின் பேச்சை மதிக்காத சிறுவர்கள், மறுநாளும் அங்கு வந்து குளித்தனர்.

இதைக் கண்டு கோபம் கொண்ட பூசாரி, கையில் பெரிய தடியுடன் அங்கு வந்து, குளித்துக் கொண்டிருந்த சிறுவர்களை ஓங்கி அடித்தார்.

பலருடைய மண்டைகள் உடைந்தன. எல்லாரும் அழுதபடியே வீட்டிற்குச் சென்றனர்.

நடந்ததை அறிந்த ஊர் மக்கள் கோபம் கொண்டனர்.

கோவில் தர்மகர்த்தாவிடம் வந்த அவர்கள், ''நடந்த கொடுமைக்கு நீங்கள்தான் பூசாரியைத் தண்டிக்க வேண்டும்,'' என்றனர்.

பூசாரியை அழைத்த அவர், ''அன்பின் வடிவமாக இருக்க வேண்டிய நீர், இப்படிக் கொடியவராக நடந்து கொள்ளலாமா? இனி உமக்கு இங்கு வேலை இல்லை,'' என்றார்.

'சிறிய தவறுக்காக இவ்வளவு பெரிய தண்டனையா? இதற்காக இவர்களை எப்படியும் பழி வாங்க வேண்டும். என்ன செய்வது?' என்று சிந்தித்தார் பூசாரி.

'இந்தக் குளத்தை எரித்து விட்டால் எல்லாரையும் பழி வாங்கி விடலாம்' என்ற முடிவுக்கு வந்தார் பூசாரி.

நிறைய எண்ணெய் ஊற்றிப் பெரிய பந்தம் ஒன்றைத் தயார் செய்தார். நள்ளிரவு நேரம் அதைக் கொளுத்தி எடுத்தவாறு குளத்தருகே வந்தார். எரிகின்ற பந்தத்தைக் குளத்திலே வீசி எறிந்தார்.

'இனி நாம் இங்கு இருக்கக் கூடாது. குளத்தை எரித்த குற்றத்திற்காக ஊர் மக்கள் எல்லாரும் நம்மைக் கொன்று விடுவர்' என்று நினைத்த பூசாரி அந்த ஊரை விட்டே ஓட்டம் பிடித்தார்.

பல ஆண்டுகள் சென்றன.

'குளத்தில் நெருப்பு வைத்து எரித்த பூசாரியை அந்த ஊர் மக்கள் நினைவில் வைத்திருக்கிறார்களா?' என்பதை அறிய விரும்பினார் அவர்.

சாமியார் வேடத்தில் மீண்டும் அந்த ஊருக்கு வந்தார்.

வழியில் சந்தித்த ஒரு பெரியவரிடம், ''அந்தக் கோவில் பழைய பூசாரி என்ன ஆனார் என்று உங்களுக்குத் தெரியுமா?'' என்று கேட்டார்.

''குழந்தைகளின் மண்டையை உடைத்த முரடனைத்தானே கேட்கிறீர்கள். அவனைத் தான் அப்பொழுதே வேலையை விட்டு நீங்கி விட்டார்களே,'' என்று பதில் சொன்னார் அவர்.

குளத்தை எரித்ததாகத் தன் மீது யாருக்கும் ஐயம் இல்லை என்பதை உணர்ந்தார் அவர்.

''பெரியவரே! கோவில் குளத்தில் நெருப்பை வைத்து அதைச் சாம்பலாக்கியது யார் என்று ஊராருக்குத் தெரியுமா?'' என்று கேட்டார் அவர்.

''துறவியாரே! ஏன் இப்படிக் கேட்கிறீர்கள்? யாராவது நீர் நிறைந்த குளத்திற்குத் தீ வைக்க முடியுமா? தீ வைத்தாலும் அந்தத் தீ பற்றுமா? நடக்கக் கூடிய செயலா அது?'' என்று சிரித்துக் கொண்டே கேட்டார் அவர்.

அப்போதுதான் பூசாரிக்குத் தன் முட்டாள் தனம் புரிந்தது.

'இதற்கு பயந்து ஊரைவிட்டு ஓடி இப்படிச் சாமியாரானோமே...' என்று நினைத்து நொந்து போனார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us