
கடலூர் மாவட்டம், மணவாளநல்லூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 1975ல், 5ம் வகுப்பு படித்தேன். தலைமை ஆசிரியராக இருந்த, ச.துரைராஜ் அன்பு, கருணையுடன் பாடம் நடத்துவார். எளிய உதாரணங்கள் மூலம் விளக்குவார். அவை மனதில் பதியும்.
ஒருமுறை தீப்பெட்டியை காட்டி, 'இதன் ஓரத்தில் உள்ள ரசாயனமும், தீக்குச்சி முனையில் இருக்கும் ரசாயனமும் ஒன்றே... உரசும் போது தீப்பெட்டி எரியவில்லை; குச்சி மட்டும் எரிகிறது... அதற்கு உரிய காரணம் தெரியுமா...' என கேட்டார். தெரியாமல் விழித்தோம்.
தெளிவாக்கும் வகையில், 'தீப்பெட்டியின் இருபுறமும் ரசாயனம், சீராக பரவியுள்ளது. ஆனால், குச்சியின் ஒரு முனையில், ரசாயனம் குவிந்துள்ளது; தலை கனமாக இருப்பதால் குச்சி எரிகிறது...' என்று நகைச்சுவையாக கூறினார்.
அத்துடன், 'படிப்பில் தலைக்கனம் வந்தால், அழிவு தான் ஏற்படும்... எனவே, எல்லாவற்றிலும் சீரான சிந்தனையுடன் நிதானமாக செயல்பட வேண்டும்...' என்று மென்மையாக போதித்தார்.
என் வயது, 57; ஒவ்வொரு ஆண்டும் அவரை நேரடியாக சந்தித்து, வாழ்த்து பெறுவதை வழக்கமாக கொண்டிருந்தேன். கொரோனா தொற்றால் கடந்த ஆண்டில், அவர் இறந்ததை அறிந்து, பெரும் துயரம் அடைந்தேன். அவர் கற்று தந்ததை மனதில் ஏந்தி வணங்கி வருகிறேன்.
- க.ராசசேகர், கடலுார்.
தொடர்புக்கு: 81486 88543