தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தேவலோகம் - 2

தேவலோகம் - 2

தேவலோகம் - 2


PUBLISHED ON : ஜன 22, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 22, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''கனகா, தேவலோகம்னா சொர்க்கம்னு சொல்லுவார்களே... அதுதானே? நானும் இறந்த பிறகு அங்கே போகத்தான் ஆசைப் படுகிறேன். அதற்காக நான் செல்லாத கோவில் இல்லை; கும்பிடாத கடவுள் இல்லை. எப்படியாவது என்னையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்,'' என்றாள் கனகாவின் தாயார்.

''நீ எங்களுடன் வந்துவிட்டால், தங்கச்சியை யார் பார்த்துக் கொள்வார்கள்!'' என்றாள் கனகா.

''ஆமாம். அது ஒரு சங்கடம் இருக்கிறது. அவளையும் என்னுடன் கூட்டிக் கொண்டு வந்து விடுகிறேன். உனக்கும் பொழுது போகத் துணையாக இருக்கும்,'' என்றாள் கனகாவின் தாயார்.

''சரி. நான் எப்படியாவது அவரிடம் சொல்லி விடுகிறேன். அடுத்த பவுர்ணமி நினைவிருக்கட்டும்,'' என்றாள் கனகா.

இச்சமயத்தில், ''கனகா நீ சொல்லிக் கொண்டிருந்ததையெல்லாம் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். என்னையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்,'' என்ற குரல் கேட்டது.

கனகா திரும்பிப் பார்த்தாள். அங்கே அவளுடைய உயிர்த்தோழி பானு நின்றிருந்தாள். அவள் இளமைப் பருவத்திலிருந்து கனகாவுடன் பழகியவள். ஒருவரை விட்டு, ஒருவர் பிரியமாட்டார்கள். அவள் தானும் வருகிறேன் என்று கூறியதும் இவளால் மறுக்க முடியவில்லை. சரி என்று கூறினாள்.

தேவலோகம் செல்வோரின் எண்ணிக்கை அத்துடன் நின்றால் பரவாயில்லையே! பானு தனக்கு தெரிந்தவர்களிடமெல்லாம் தான் தேவலோகம் செல்லப் போகும் செய்தியைக் கூறி விட்டாள்.

பவுர்ணமியன்று இரவு ஜீவாவின் வீட்டுக்கு ஒவ்வொருவராக வந்தனர்.

ஜீவாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. ''என்ன இது?'' என்று கனகாவைப் பார்த்துக் கேட்டான்.

''இவர்களெல்லாம் நம்மை வழியனுப்ப வந்திருக்கிறார்கள் போலிருக்கிறது,'' என்றாள் கனகா.

இரவு எல்லாரும் தூங்கிவிட்ட பிறகு அனைவரும் கோவில் தோட்டத்துக்குச் சென்றனர். ஐராவதம் சொன்னது சொன்ன படியே வந்துவிட்டது. வந்ததும் அங்குக் குழுமியிருந்த கூட்டத்தைப் பார்த்து திகைத்தது.

''இவ்வுளவு பேர் எதற்கு வந்திருக்கின்றனர்?'' என்று ஜீவாவை தனியே அழைத்துக் கேட்டது ஐராவதம்.

''நான், என் மனைவி மற்றும் குரங்கு, மூவரும்தான் வருகிறோம். மற்றவர்கள் எல்லாரும் வேடிக்கை பார்க்க வந்திருக்கின்றனர்,'' என்றான் ஜீவா.

சரி! என்று கூறிய வெள்ளை யானை, ''என் வாலை கெட்டியாக பிடித்துக் கொள்,'' என்று கூறிவிட்டு மெல்ல மேலே எழும்பத் தொடங்கியது.

ஜீவா குரங்கைத் தோள்மேல் வைத்தபடி வெள்ளை யானையின் வாலை கெட்டியாக பிடித்துக் கொண்டான். பிறகு, தன் மனைவியைப் பார்த்து, ''அடியே, என் கால்களை கெட்டியாக பிடித்துக் கொள்,'' என்றான்.

கனகா ஓடிச் சென்று ஜீவாவின் கால்களை கெட்டியா பிடித்துக் கொண்டாள். பிறகு தன் தாயாருக்குச் சைகை காட்ட, அவள் ஓடி வந்து கனகாவின் கால்களை பிடித்துக் கொண்டாள். பிறகு அவளுடைய இளைய மகள், அதற்குப் பிறகு பானு, அவளைத் தொடர்ந்து வந்திருந்தோர் அனைவரும் ஒருவர் கால்களை, ஒருவர் உறுதியாகப் பிடித்துக் கொண்டனர்.

ஐராவதம் பூமியிலிருந்து மேலே எழும்பி விட்டது. ஜீவா கீழே குனிந்து பார்த்தான். அவனைத் தொடர்ந்து ஒரு பெரிய கூட்டம் சங்கிலித் தொடர்போல் வந்து கொண்டிருப்பதைக் கண்டான். அவனுக்கு தூக்கிவாரிப் போட்டது.

ஐராவதம் தேவலோகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

கொஞ்ச தூரம் சென்றதும், ''ஏங்க இன்னும் ரொம்ப தூரம் போகணுமா?'' என்று கனகா, ஜீவாவிடம் கேட்டாள்.

''எனக்கு என்ன தெரியும்? நான் என்ன முன்னே பின்னே, தேவலோகம் போயிருக்கிறேனா?'' என்று எரிச்சலுடன் கூறினான் ஜீவா.

''ஏங்க, தேவலோகத்திலும் நம் ஊரில் இருப்பதைப் போல் புடவைக் கடைகளும், நகைக்கடைகளும் இருக்குமா?'' என்று கேட்டாள் கனகா.

''இன்னும் உனக்கு இந்த புடவைப் பித்து போகவில்லையே! எதற்காக இப்படிக் கேட்கிறாய்?'' என்று மனைவியைக் கடிந்து கொண்டான்.

''அதற்கு இல்லைங்க. மாற்றுப் புடவை கூட எடுக்காமல் கிளம்பி விட்டேன். அதற்காகத் தான் கேட்டேன்,'' என்றாள் கனகா.

''கனகா, தேவலோகத்திலே கோழி முட்டை கிடைக்குமான்னு உன் வீட்டுக்காரரைக் கேள்,'' என்றாள் கனகாவின் தாயார்.

''கோழி முட்டை எதற்கு?''

''உன் தங்கச்சி மிகவும் மெலிந்து போயிருக்கிறாள். தினமும் ஒரு கோழி முட்டை வேக வைத்து அவளுக்குத் தர வேண்டும். அதற்காகத்தான் கேட்டேன்,'' என்றாள் கனகாவின் தாய்.

''அங்கே கோழி இருக்கிறதா என்றே எனக்குத் தெரியாது. அப்படியே கோழி இருந்தாலும்... நம் ஊர்க் கோழி மாதிரி சாதாரண முட்டையா இடும்? தங்க முட்டைகள்தானே இடும்,'' என்றாள் கனகா.

மனைவியும், மாமியாரும் தொண தொணவென்று பேசுவது ஜீவாவுக்கு பிடிக்கவில்லை. இந்தச் சமயத்தில் அவனுடைய மைத்துனி, ''ஏன் மாமா தேவலோகத்திலே நிறைய வீடுகள் இருக்குமா?'' என்று கேட்டாள்.

''இருக்கும், கொஞ்ச நேரம் சும்மா இரு,'' என்றான் ஜீவா.

''ஏங்க, அங்கேயுள்ள வீடுகள் நம் ஊரிலுள்ளதைப் போல், சின்னதாக இருக்காது இல்லையா?'' என்று கேட்டாள் கனகா.

''தேவலோகமாச்சே! சின்னதாக இருந்தால் அதற்கு எப்படி மதிப்பிருக்கும். எல்லாம் பெரியதாகத்தான் இருக்கும்,'' என்றான் ஜீவா.

''அப்படியானால் நம் ஊர்ப் பூசணிக்காய் அங்கே எவ்வளவு பெரியதாக இருக்கும்?'' என்று கேட்டாள் கனகாவின் தங்கை.

''இவ்வளவு பெரியதாக இருக்கும்,'' என்று இருகைளையும் அகல விரித்துக் காட்டினான் ஜீவா. அடுத்த கணம் அனைவரும் தலைகுப்புறக் கீழே விழுந்தனர்.

- முற்றும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us