தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சாரி நண்பா!

சாரி நண்பா!

சாரி நண்பா!


PUBLISHED ON : பிப் 08, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 08, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சங்கர் வீட்டில் அவனது பிறந்த நாள் விழாவுக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. சங்கருக்கு இது பன்னிரண்டாவது பிறந்த நாள்.

இன்னும் சிறிது நேரத்தில், அவன் வெட்டப்போகும் கேக் தயாராக மேசை மீது வைக்கப்பட்டிருந்தது. அன்று இரவு உணவுக்காக, அவன் தன் நண்பர்களை வீட்டிற்கு அழைத்திருந்தான். சங்கரின் அம்மா உணவை சமைத்துக் கொண்டிருந்தாள்.

ஒவ்வொரு நண்பராக வீட்டிற்கு வரத் தொடங்கினர். சங்கர் எல்லாரையும் வரவேற்றான். முதலில் கார்த்திக் வந்து, புத்தகம் ஒன்றை சங்கருக்கு பரிசளித்தான். தொடர்ந்து விமல், பிரகாஷ், சவும்யா, சேகர் என எல்லாரும் சற்று விலையுயர்ந்த பரிசுகளை அளித்தனர்.

சங்கரின் தந்தை சிவக்குமார் தன் வீட்டிற்கு வந்திருந்த சங்கரின் அனைத்து நண்பர்களையும் கவனித்தார். சங்கரின் நெருங்கிய நண்பன் கோபியைக் காணவில்லை.

சிவக்குமார் சங்கரை அழைத்து, ''கோபியை இன்னும் காண வில்லையே... அவன் வந்தவுடன் கேக் வெட்டி விடலாம் அல்லவா?'' என்று கேட்டார்.

''இல்லையப்பா... அவன் வரமாட்டான் போலிக்கிறது... நான் கேக்கை வெட்டி விடுகிறேன்...'' என்று பதிலளித்தான்.

சங்கரின் பதிலில் திருப்தியுறாத அவனது தந்தை, ''கோபி ஏன் வரமாட்டான்? அவன் ஊருக்கு ஏதேனும் போயிருக்கிறானா?'' என்று மீண்டும் கேட்டார்.

''இல்லையப்பா... நான் அவனை அழைக்கவில்லை!'' என்று சொன்னான்.

''ஏன் அழைக்கவில்லை?'' என்று கேட்டார்.

சங்கர் தன் தந்தையை உள் அறைக்கு அழைத்துப் போய், ''அப்பா! நேற்று என் சைக்கிள் பழுதாகி விட்டதால், நான் பள்ளிக்கு நடந்துதான் சென்றேன். மாலையில் கோபி என்னை அவனது சைக்கிளில் வீட்டிற்கு அழைத்து போவதாகச் சொன்னான். ஆனால், என்னை விட்டுவிட்டு, அவன் மட்டும் கிளம்பி வந்துவிட்டான். கோபி மீதுள்ள கோபத்தைக் காட்டுவதற்காகத்தான், அவனை என் பிறந்த நாளுக்கு அழைக்க வில்லை...!'' என்று மெதுவாகச் சொன்னான்.

''சங்கர்! நீ செய்தது மிகவும் தவறு. உன்னை சைக்கிளில் அழைத்துப்போகிறேன் என்று சொன்னதை அவன் மறந்து போயிருக்கலாம் அல்லது வேறு ஏதேனும் காரணமாக இருக்கலாம்! நீயாகவே அவன் உனக்குத் துரோகம் செய்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. அவன் இதற்கு முன்பு, எத்தனையோ முறை உன்னைத் தன் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்துச் சென்றிருக்கிறான். பள்ளியிலிருந்து வீட்டிற்கும் அழைத்து வந்திருக் கிறான். அவன் செய்த நன்மைகளையெல்லாம் மறந்துவிட்டு, ஏதோ அறியாமல் நிகழ்ந்த தவறுக்காக, அவன் மீது விரோதம் கொண்டால் தேவையில்லாமல் வன்மம்தான் வளரும். ஒருவர் ஏதேனும் சூழலில் நமக்குத் தீமை செய்தாலும் கூட அவர் செய்த நன்மைகளை மட்டும் நினைவில் வைத்து, நாம் அவருக்கு நன்மையே செய்ய வேண்டும். இதுதான் நல்ல மனிதர்களின் பண்பு. நீ உடனே, தொலைபேசியில் கோபியை வரச்சொல்...'' என்று சொன்னார் சிவக்குமார்.

தந்தையின் அறிவுரையில் சங்கரின் மனம் மாறிவிட்டது. அவன் உடனே சென்று தொலைபேசியில் கோபியை அழைத்தான்.

''கோபி! என் பிறந்தநாள் விழாவைப் பற்றி முன்பே சொல்லாததற்கு என்னை மன்னித்துக் கொள். நீ உடனே புறப்பட்டு வா! உனக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறோம். நீ வந்தவுடன், கேக்கை வெட்டிக் கொண்டாட வேண்டும். இன்று இரவு என் வீட்டில்தான் உணவு சாப்பிட வேண்டும்,'' என்று நெகிழ்ச்சியோடு சொன்னான் சங்கர்.

சற்று நேரத்தில் சங்கர் வீட்டிற்கு வந்த கோபி, ''சங்கர்! நேற்று என் சைக்கிளில் உன்னை அழைத்து வருவதாகச் சொன்னதை நான் மறந்தே போய்விட்டேன். பாதி வழியில்தான் நினைவுக்கு வந்தது. நான் மீண்டும் பள்ளிக்கு திரும்பி வந்து பார்த்தேன். உன்னைக் காணவில்லை. இன்று உன் பிறந்த நாள் என்பது எனக்கு நினைவில் இல்லை. இப்போது கடைசி நேரத்தில் என்னை அழைத்ததால் என்னால் உனக்கு எளிய பரிசைத் தான் வாங்கிவர முடிந்தது!'' என்று சொல்லி, பேனா ஒன்றை பரிசாகக் கொடுத்தான்.

''அன்போடு கொடுக்கும் எந்தப் பரிசும் விலை மதிப்பற்ற பரிசுதான் கோபி!'' என்று பேனாவைப் பெற்றுக் கொண்டான் சங்கர். சற்று நேரத்தில் அங்கே மகிழ்ச்சியான பிறந்தநாள் விழா ஆரம்பமானது.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us