
வெண்பாக்கம் காட்டில், உயர்ந்த மரங்கள் இருந்தன; மரப்பொந்துகளில் கூடுகட்டி மகிழ்ச்சியுடன் வசித்தன பறவைகள். அவை நட்புடன் பழகி வந்தன.
ஒரு நாள் -
இரவு நெருங்கிய போது, மரத்தை நோக்கி, குட்டிப் பாம்புகள் வந்தன.
அவற்றைக் கண்டதும், பறவைகள் கூச்சலிட்டன.
'எல்லாரும் அமைதியாக இருங்கள்...' என்றபடி, 'இங்கே ஏன் வந்தீர்...' என கேட்டது அந்த மரம்.
கனிவான பேச்சை கேட்டதும், 'விளையாடிய போது வழி தவறி வந்து விட்டோம்...இருட்டாக இருப்பதால், இன்றிரவு தங்க இடம் தேடுகிறோம். இங்கு தங்கலாமா...' என, கேட்டன பாம்புகள்.
சம்மதித்து, 'அமைதியாக ஓய்வெடுங்கள்...' என்றது மரம்.
அனைத்து பறவைகளும் கூட்டிற்குச் சென்றன.
நன்றி தெரிவித்து மரத்தின் அடியில் சுருண்டன குட்டிப் பம்புகள்.
காலையில், பாம்புகளை தேடின பறவைகள்.
இதைக் கவனித்த மரம், 'அதிகாலையே அவை கிளம்பி விட்டன...' என்றது.
அப்போது -
பதட்டத்துடன், 'ஆபத்து... ஆபத்து...' என கூச்சலிட்டன பறவைகள்.
விபரத்தை விசாரித்தது மரம்.
'அதோ பாருங்கள்... மரத்தை வெட்ட மனிதர்கள் வருகின்றனர்...' என்றன.
செய்வதறியாமல் திகைத்தது மரம்.
வந்தவர்களில் ஒருவன் எதையோ சுட்டிக் காட்டினான். மிரண்ட மற்றவர்கள், 'வேணாப்பா... கிளம்புங்க... வேற இடம் பார்த்துக்கலாம்...' என ஓட்டம் பிடித்தனர்.
குழம்பியவாறு பார்வையை திருப்பியது மரம்.
அங்கே, மரத்தை நெருங்கி வந்து கொண்டிருந்தன பாம்புகள். அதில், குட்டிப் பாம்புகளும் இருந்தன.
பாம்புகளின் தலைவன், 'எங்கள் குழந்தைகளை பத்திரமாக தங்க வைத்ததற்கு நன்றி...' என கூறியது.
'இப்போது தான் புரிகிறது... பாம்புகளை பார்த்ததும் பதறி ஓடி விட்டனர் மரத்தை வெட்ட வந்தவர்கள். செய்த உதவி உயிரை காத்தது...' என்றது மரம்.
குழந்தைகளே... உரியவருக்கு உரிய காலத்தில் உதவி புரிய பழக வேண்டும்.
- வெ.விக்னேஸ்வரி

