தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஹெர்குலிஸ் (4)

ஹெர்குலிஸ் (4)

ஹெர்குலிஸ் (4)


PUBLISHED ON : நவ 02, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 02, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இதுவரை: கொடிய சிங்கத்தை கொன்று வரும்படி சவால் விடப்பட்டது ஹெர்குலிசுக்கு. ஹெர்குலிஸ் சிங்கத்தின் கழுத்தை பிடித்துக் கொண்டான். இனி-

நேரமாக நேரமாக சிங்கத்தின் வலிமை குறைந்து கொண்டே வந்தது. அவன் பிடி இறுகிக் கொண்டே இருந்தது. மூச்சுத் திணறி இறந்தது சிங்கம். சிங்கம் அசைவின்றிக் கிடப்பதைப் பார்த்த ஹெர்குலிஸ் தன் பிடியை விட்டான். இறந்து கிடந்த சிங்கத்தின் நகங்களைப் பிடுங்கினான். கூர்மையான அந்த நகங்களைக் கொண்டே அதன் தோலை உரித்தான்.

அதன் கழுத்திலிருந்த தோலைத் தன் தலைக்குக் கவசம் போலத் தைத்துக் கொண்டான். அதன் உடல் தோல் அவனுக்குச் சட்டையாயிற்று. கால்களின் தோலை உரித்துத் தன் தோள்களுக்கும், கால்களுக்கும் ஆடை செய்தான். இவற்றை எல்லாம் அணிந்து கொண்ட அவன், பார்ப்பதற்கு சிங்கத்தைப் போல காட்சி அளித்தான்.

அந்தச் சிங்கத்தின் உடலைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டான். காட்டை விட்டு வெளியே வந்த அவனை அங்கிருந்த மக்கள் பார்த்தனர். கொடிய சிங்கத்தை அவன் கொன்று தூக்கி வருகிறான் என்பது அவர்களுக்குப் புரிந்தது.

''சிங்கத்தைக் கொன்ற மாவீரன் ஹெர்குலிஸ் வாழ்க!'' என்று அவர்கள் ஆரவாரம் செய்தனர். மைசின் நகரத்தை நோக்கி புறப்பட்டான். மக்கள் கூட்டம் அவனைப் பின்தொடர்ந்து வந்தது. கோட்டை வாயிலை அடைந்தான் ஹெர்குலிஸ்.

அங்கிருந்த வீரர்கள் அரசனிடம் சென்று செய்தியைச் சொன்னனர்.

''ஹெர்குலிஸை மட்டும் இங்கே அனுப்பிவையுங்கள். மற்றவர்கள் யாரும் அவனுடன் வரக்கூடாது,'' என்று கட்டளையிட்டான் யுரிஸ்தியசு. அரசவைக்குள் நுழைந்தான் ஹெர்குலிஸ். சிங்கம் ஒன்று சிங்கத்தைச் சுமந்து வருவது போல அவன் தோற்றம் இருந்தது. சிங்கத்தின் நகங்கள் கிழித்ததால், அவன் உடலில் பல இடங்களில் ரத்தம் வழிந்தது. தான் சுமந்து வந்த சிங்கத்தின் உடலை அரசனின் முன் பொத்தென்று போட்டான்.

'கொடிய சிங்கத்தையே இவன் கொன்று விட்டானே' என்று நடுங்கினான் அரசன்.

அவன் நடுக்கத்தைப் பார்த்த ஹெர்குலிஸ், ''இந்தச் சிங்கம் இறந்து விட்டது. உயிர் இல்லாத இதற்காக இப்படி அஞ்சுகிறாயே?'' என்று கேலி செய்து சிரித்தான்.

தன் நடுக்கத்தை மறைத்துக் கொண்ட அவன் ஹெர்குலிஸைப் பார்த்தான். சிங்கத் தோல் ஆடையில் ஹெர்குலிஸ் அழகாக இருந்தான். ''என் கட்டளையை நிறைவேற்றி விட்டாய். சிங்கத்தின் தோலை என்னிடம் தா,'' என்று கேட்டான்.

''சிங்கத்தின் தோலை நீ எடுத்து வரத்தான் சொன்னாய். கொண்டு வந்து தரச் சொல்லவில்லை. இந்த ஆடையை நான் இனி எப்போதும் அணிந்து கொண்டிருப்பேன். இதைப் பார்ப்பவர்கள் என் வீரத்தை அறிந்து கொள்வர். நான் செய்ய வேண்டிய இரண்டாவது வேலை என்ன? அதைச் சொல்,'' என்று இடி போன்ற குரலில் முழங்கினான்.

'இந்த முறை இவன் உயிருடன் திரும்பக் கூடாது. மிகவும் கடினமான வேலை ஒன்று வைக்க வேண்டும். என்ன வேலை வைப்பது?' என்று சிந்தித்தான் யுரிஸ்தியசு.

சூழ்ச்சி நிறைந்த அவனுக்கு நல்ல வழி ஒன்று தோன்றியது.

''ஹெர்குலிஸ்! வெர்னா காட்டுப் பகுதியில் பெரிய மடு ஒன்று உள்ளது. அதில், ஒன்பது தலைகளை உடைய ஹைட்ரா என்ற பாம்பு வாழ்கிறது. நீ அதை எப்படியாவது கொல்ல வேண்டும். இதுதான் நீ செய்து முடிக்க வேண்டிய இரண்டாவது வேலை,'' என்றான் யுரிஸ்தியசு.

''அந்தப் பாம்பைக் கொன்று விட்டு வருகிறேன்,'' என்று அங்கிருந்து புறப்பட்டான் ஹெர்குலிஸ்.

ஹைட்ரா பாம்பை பற்றிப் பலரிடம் விசாரித்தான். கிடைத்த செய்திகள் அனைத்தும் திடுக்கிடும்படி இருந்தன.

''இங்கிருந்து வெகு தொலைவில் ஆர்கோசு நாடு உள்ளது. அங்கே எல்லையே காண முடியாத காடு ஒன்று உள்ளது. அந்தக் காட்டிற்கு, 'வெர்னா காடு' என்று பெயர்.

அந்தக் காட்டின் நடுவில் பெரிய மடு ஒன்று உள்ளது. அதில், ஒன்பது தலைகளை உடைய கொடிய நச்சுப் பாம்பு ஒன்று உள்ளது. அதன் பெயர் ஹைட்ரா. அதன் மூச்சுக் காற்றுப் பட்டால் போதும். யாராக இருந்தாலும், துடிதுடித்து இறந்து விடுவர்.

அந்தப் பாம்பு எல்லையற்ற ஆற்றல் வாய்ந்தது. அதன் ஒரு தலையை வெட்டி வீழ்த்தினால் போதும், வெட்டப்பட்ட இடத்திலிருந்து உடனே இரண்டு தலைகள் முளைக்கும். அதன் ஒன்பதாவது தலையை யாரும் வெட்ட முடியாது. அந்த தலை சாகாத்தன்மை கொண்டது. அது அந்த மடுவில் பெரிய குன்றைப் போலக் கிடக்கிறது. அதன் நச்சு மூச்சுக் காற்று அந்த இடத்தைச் சுற்றி வீசுகிறது. அதனால் அங்கிருந்த மரம், செடி, கொடிகள் அனைத்தும் சாம்பலாகி விட்டன. மனிதர்கள் யாரும் அந்தப் பக்கம் செல்வதே இல்லை,'' என்றனர்.

'இவர்கள் சொல்வதைப் பார்த்தால் பெரிய சோதனை காத்திருக்கிறது. அந்தப் பாம்பைக் கொல்ல என்ன செய்வது? வழி ஏதும் உள்ளதா?' என்று சிந்தித்தான் ஹெர்குலிஸ்.

தன்னுடன் துணைக்கு யாரையாவது அழைத்துச் செல்லலாம் என்ற முடிவுக்கு வந்தான் ஹெர்குலிஸ்.

வீரமும், துணிவும் நிறைந்த அயோலசின் நினைவு அவனுக்கு வந்தது. தன் உறவினனான அவனைச் சந்தித்தான் ஹெர்குலிஸ். தன் எண்ணத்தைச் சொன்னான்.

''உங்களுடன் வருவது எனக்குப் பெருமை அல்லவா? இப்போதே புறப்படுகிறேன்,'' என்று ஆர்வத்துடன் சொன்னான் அயோலசு.

இருவரும் தேரில் அமர்ந்தனர். அயோலசு தேரை ஓட்ட, இருவருமே ஆர்கோசு நாட்டை அடைந்தனர்.

தேரிலிருந்து இறங்கிய அவர்கள் வெர்னா காட்டுக்குள் நுழைந்தனர். நீண்ட பயணத்திற்குப் பின் அந்த மடுவை அடைந்தனர். அதில்தான், அந்த ஒன்பது தலை நாகம் வாழ்ந்து வந்தது.

ஹெர்குலிஸின் ஒரு கையில் கதை இருந்தது. இடுப்பு உறையில் நீண்ட வாள் தொங்கியது. இன்னொரு கையில் வில்லும், அம்புகளும் இருந்தன.

அவர்கள் இருவரையும் ஒன்பது தலை நாகம் பார்த்து விட்டது. ஒன்பது தலைகளையும் தண்ணீருக்கு மேலே தூக்கியது.

ஒன்பது வாய்களையும் அகலமாகத் திறந்தது. அதன் ஒவ்வொரு வாயும் பெரிய குகை போலக் காட்சி அளித்தது. அவற்றிலிருந்து நெருப்புப் போல நச்சுக் காற்று வீசியது.

சீற்றத்துடன் அது எழுப்பிய பேரோசையால் மடுவைச் சுற்றியிருந்த பகுதிகள் அப்படியே அதிர்ந்தன.

அந்தப் பாம்பைப் பார்த்த ஹெர்குலிஸ் வேகமாகச் செயல்பட்டான். தன் வில்லில் அம்பு பூட்டினான். அதன் தலைகளுக்குக் குறி வைத்து எய்து கொண்டே இருந்தான்.

அவன் குறி தவறவே இல்லை. ஒவ்வொரு அம்பும் பாம்பின் ஒவ்வொரு தலையைத் துண்டித்து வீழ்த்தியபடியே இருந்தது.

என்ன வியப்பு. தலை துண்டிக்கப்பட்ட இடத்தில் உடனே இரண்டு தலைகள் முளைத்தன. அந்தக் தலைகளும் ஹெர்குலிஸைப் பார்த்து சீற்றத்துடன் நச்சுக் காற்றை வீசின.

அம்புகளினால் பயன் இல்லை என்பதை உணர்ந்த ஹெர்குலிஸ், கதையைக் கையில் பிடித்தபடி அந்தப் பாம்பின் மேல் பாய்ந்தான். இடி போல முழக்கம் இட்டான்.

- தொடரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us