PUBLISHED ON : டிச 07, 2012

இதுவரை: ஆறாவது சோதனையான அசுரப்பறவைகளை அழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டான் ஹெர்குலிஸ். இனி-
ஹெர்குலிஸ் அவ்வளவு விரைவாக இயங்கிக் கொண்டிருந்தான். அம்பை எடுப்பதோ, வில்லில் பூட்டுவதோ, விடுப்பதோ, யாருக்கும் தெரியவில்லை. எல்லாம் ஒரு நொடிக்குள் நடந்து முடிந்தது. மழை போல அவன் அம்புகள் சென்று கொண்டே இருந்தன. அந்த அம்புகள் தாக்கி, அசுரப் பறவைகள் விழுந்த வண்ணம் இருந்தன.
அவன் வில்லின் நாண் ஒலியும், பறவைகளின் அலறலும் எங்கும் கேட்டபடியே இருந்தது. அவன் நினைத்தது போல அந்த பறவைகள் அங்கிருந்து பறந்து சென்று விடவில்லை. பறவைகள் பல இறந்து விழுந்ததை மற்ற அசுரப் பறவைகள் பார்த்தன. கோபம் கொண்ட அவை பயங்கரமாகக் கூச்சலிட்டன. கூட்டமாக அவனைத் தாக்க வந்தன.
இறகு அம்புகளை அவன் மீது வீசின; அலகுகளால் அவனைக் கொத்தின. எதிர்பாராத இந்தத் தாக்குதலால் திணறினான் ஹெர்குலிஸ். கையிலிருந்த கதையை ஓங்கியபடி அவற்றின் மேல் பாய்ந்தான். வலிமையான கதை தாக்கியதால் அசுரப் பறவைகள் சில இறந்து விழுந்தன.
இதனால் சிதறிய அசுரப் பறவைகள் மீண்டும் ஒன்று சேர்ந்தன. அவனை மூர்க்கமாகத் தாக்கத் தொடங்கின.
அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. மீண்டும் அங்கே தோன்றினாள் அதினா தேவதை. அவனிடம் தெய்வீக கவசம் ஒன்றைத் தந்தாள். அதை அணிந்து கொண்ட அவனைப் பறவைகளால் தாக்க முடியவில்லை.
வேகமாகச் செயல்பட்ட ஹெர்குலிஸ் தன் கதையால் தாக்கிப் பல பறவைகளைக் கொன்றான்.
'இப்படியே எவ்வளவு காலம் தாக்கினாலும் அவற்றை முழுமையாக அழிக்க முடியாது. பித்தளைத் தட்டுகளைப் பயன்படுத்த வேண்டும்' என்ற முடிவுக்கு வந்தான். அந்தப் பித்தளைத் தட்டுகளை இரண்டு கைகளிலும் பிடித்துக் கொண்டான். ஒன்றோடு ஒன்று வலிமையாக மோதுமாறு செய்தான். இப்படியே இடைவிடாமல், பலமுறை செய்து கொண்டிருந்தான்.
தட்டுகள் மோதிய பேரோசையால் காடும், மலையும் அதிர்ந்தன. உயிருடன் இருந்த அசுரப் பறவைகளால், அந்த ஓசையைத் தாங்க முடியவில்லை. நிலைகுலைந்த அவை அங்கிருந்து பறந்து சென்றன.
அதன் பிறகு அங்கு அசுரப் பறவைகளின் கூச்சல் எங்குமே கேட்கவில்லை. இருந்தும், அவன் பித்தளைத் தட்டுகளால் மோதுவதை நிறுத்தவே இல்லை. நீண்ட நேரம் மோதிக் கொண்டே இருந்தான்.
மீண்டும் அசுரப் பறவைகள் அங்கு வராது என்ற உறுதி அவனுக்கு ஏற்பட்டது. தட்டுகளை மோதுவதை நிறுத்தினான்.
அவன் நினைத்தது போலவே மீண்டும் அசுரப் பறவைகள் அங்கு வரவே இல்லை. வெற்றிப் பெருமிதத்துடன், மைசின் நகரம் திரும்பினான் ஹெர்குலிஸ்.
ஸ்டெரம்பிள்சு அசுரப் பறவைகளை ஹெர்குலிஸ் விரட்டி விட்டதை அறிந்தான் யுரிஸ்தியசு. 'என்ன சோதனை வைத்தாலும் வெற்றியுடன் வருகிறானே... அடுத்ததாக, இவனுக்கு என்ன சோதனை வைப்பது!' என்று சிந்தித்தான்.
''ஹெர்குலிஸ்! கிரிட் நாட்டில் யாருக்கும் அடங்காத காளை மாடு ஒன்று உள்ளது. அதை நீ அடக்கி இங்கே கொண்டு வர வேண்டும். இதுவே, ஏழாவது சோதனை,'' என்றான். ''வெற்றியுடன் திரும்புகிறேன்,'' என்று அங்கிருந்து புறப்பட்டான் ஹெர்குலிஸ்.
கப்பலில் ஏறிய ஹெர்குலிஸ் பல மாதங்கள் பயணம் செய்து கிரிட் நாட்டை அடைந்தான். அங்குள்ள அரசவைக்குச் சென்று, அரசன் மீனாசை வணங்கினான். ''அரசே! என் பெயர் ஹெர்குலிஸ். உங்கள் நாட்டில் அடங்காத காளை மாடு ஒன்று உள்ளது. அதை அடக்கி அழைத்துச் செல்ல வந்துள்ளேன். இதற்கு உங்கள் அனுமதி வேண்டும்,'' என்றான்.
''ஹெர்குலிஸ்! நீ இந்த முயற்சியில் வெற்றி அடைய வேண்டும். அப்படி நடந்தால் நானும், இந்நாட்டு மக்களும் மகிழ்ச்சி அடைவோம். ''நீ நினைப்பது போல அந்தக் காளையை அடக்குவது எளிய செயல் அல்ல...'' அந்தக் காளையின் வரலாற்றைச் சொல்கிறேன் கேள். ''நான் அரசனானதும், தேவாதி தேவன் ஜீயசை மகிழ்ச்சிப்படுத்த நினைத்தேன். அவருக்குப் பலி கொடுப்பதற்காக அழகிய பலி பீடம் ஒன்றைக் கட்டினேன்.
'சிறந்த ஒன்றையே ஜீயசிற்குப் பலியாகத் தர வேண்டும். பலியாக என்ன தருவது' என்று சிந்தித்தேன். எனக்கு ஒன்றும் தோன்ற வில்லை. என்ன பலி தரலாம் என்பதற்காகக் கடல் தேவனை நீண்ட காலம் வழிபட்டேன். என் வழிபாட்டிற்கு மகிழ்ந்த அவர் என் முன் தோன்றினார்.
''என்ன வேண்டும்?'' என்று கேட்டார்.
தேவாதி தேவன் ஜீயசுக்குப் பலி தர நினைத்து உள்ளேன். அதற்குத் தகுதியான விலங்கு ஒன்றைத் தந்து அருள வேண்டும்,'' என்று வேண்டினேன். உடனே அவர் அருள் செய்தார்.
''கடலிலிருந்து வெள்ளி மலை போன்று காளை மாடு ஒன்று தோன்றியது. பேரழகுடன் விளங்கிய அது என் முன் வந்து அமைதியாக நின்றது. அந்தக் காளை மாட்டின் அழகில் மயங்கினேன். அதை எனக்கே சொந்தமாக வைத்துக் கொள்ள விரும்பினேன்.
அதற்குப் பதில் வேறொரு காளை மாட்டை ஜீயசிற்குப் பலியிட்டேன். என் சூழ்ச்சியை அறிந்த கடல் தேவன் கோபம் கொண்டார். அந்தக் காளைக்கு வெறி பிடிக்குமாறு செய்தார்.
வெறி பிடித்த அது மூர்க்கம் கொண்டது. பயங்கரமாகக் கத்தியபடியே அங்கும் இங்கும் ஓடியது.
அதை அடக்க எங்களாலான முயற்சிகள் அனைத்தையும் செய்தோம். வலிமையான அதை எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அரண்மனைத் தோட்டத்தையே அது நாசம் செய்தது. அதை அடக்கச் சென்ற வீரர்களைத் தன் கூர்மையான கொம்புகளால் குத்திக் கொன்றது.
அதன் பிறகு கண்ணில் பட்டவர்களை எல்லாம் அது கொல்லத் தொடங்கியது. குழந்தைகள், பெண்கள் என்று பலர் அதனால் கொல்லப்பட்டனர். அதன் கொடுமையைத் தடுக்க வழி தெரியாமல் தவித்தேன். தலைநகரத்திலிருந்து வெளியே செல்லும் கோட்டைக் கதவைத் திறக்கச் சொன்னேன்.
அது வழியாக வெளியே சென்றது மாடு. தன் விருப்பம் போல் இந்தத் தீவைச் சுற்றி வருகிறது. யாரேனும் எதிரில் வந்தால் அவர்களைக் குத்திக் கொல்கிறது. கொடுமையான அந்தக் காளையை அடக்கப் போவதாகச் சொல்கிறாய். உனக்கு எந்த உதவி வேண்டுமானாலும் கேள். தயங்காமல் செய்கிறேன்,'' என்றான்.
''அரசே! உங்கள் அன்பிற்கு நன்றி. எனக்கு எந்த உதவியும் வேண்டாம்! நான் தனியாகத்தான் அந்தக் காளையை அடக்க வேண்டும்,'' என்று அங்கிருந்து புறப்பட்டான் ஹெர்குலிஸ்.
காளையைத் தேடித் தீவு முழுவதும் அங்கும், இங்கும் அலைந்தான். அங்குள்ள ஒரு சுனையில் தண்ணீர் குடிக்க அது வரும் என்பதை அறிந்து, அங்கேயே காத்திருந்தான். அவன் எண்ணம் வீணாகவில்லை.
நிலம் அதிரும்படி அங்கு வந்த காளை மாடு ஹெர்குலிஸைப் பார்த்தது. அவன் அணிந்திருந்த சிங்கத் தோலைப் பார்த்து அது மிரண்டது. பயங்கரமாகக் கத்தியப்படியே தன் கொம்புகளால் அவனைக் குத்திக் கிழிக்க ஓடி வந்தது.
அது ஓடி வருவதைப் பார்த்து, ஹெர்குலிஸ் சிறிதும் அஞ்சவில்லை. இருந்த இடத்தை விட்டும் நகரவில்லை.
அந்த மாடு அருகில் வந்ததும் அதன் இரு கொம்புகளையும் பிடித்துக் கொண்டான். அது விடுபட முடியாத வண்ணம் அவன் பிடி உறுதியாக இருந்தது. தன் கொம்புகளை ஆட்டி விடுபட முயற்சி செய்தது; அதனால் முடியவில்லை.
அவனை முட்டித் தள்ள முயற்சி செய்தது அது. ஆனால், அவனோ அதைப் பின்னுக்குத் தள்ள வேண்டும். கீழே விழ வைக்க வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருந்தான்.
- தொடரும்.
