PUBLISHED ON : அக் 19, 2012

இதுவரை: வீராதி வீரன் ஹெர்குலிஸ், ஜீயஸ் தேவனின் மகன். இவன் மீது பொறாமை கொண்ட ஹீரா அவனை அழிக்க நினைத்தாள். இனி-
முதலில் வந்த பெண்மணி விலை உயர்ந்த நகைகள் அணிந்திருந்தாள். பளபளக்கும் வண்ண ஆடையுடன் அழகாக காட்சி அளித்தாள்.
ஹெர்குலிஸைப் பார்த்து , ''இளவரசே! எந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பத்தில் உள்ளாய். கொடிய மலைப் பாதையில் சென்று எதற்காகத் துன்பப்பட வேண்டும்? இனிய பாதையையே தேர்ந்தெடு,'' என்றாள்.
''நீ அந்தப் பாதையில் சென்றால், நான் எப்போதும் உன்னுடன் இருப்பேன். நீ அங்கே உழைக்கவே வேண்டாம். மகிழ்ச்சியாக வாழலாம். உனக்கு அங்கே எந்த ஆபத்தும் வராது. அங்கே உன் விருப்பம் போல உண்ணலாம்; குடிக்கலாம்; கும்மாளம் போடலாம். அங்கே எப்போதும் மகிழ்ச்சிதான்; துன்பமே கிடையாது,'' என்று ஆரவாரமாகப் பேசினாள்.
''அம்மா! உங்கள் பெயர் என்ன?'' என்று கேட்டான் ஹெர்குலிஸ்.
''என்னை உனக்குத் தெரியாதா? என் பெயர்தான் மகிழ்ச்சி. என்னை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. என் எதிரிகள் சிலர் என்னைச் சோம்பல் என்றும் அழைப்பர். பொறாமையால் என்னை அவர்கள் அப்படி அழைக்கின்றனர்,'' என்றாள்.
இன்னொரு பெண்மணியைப் பார்த்தான்.
அவள் வெண்ணிற ஆடை அணிந்து எளிமையாகக் காட்சி தந்தாள். அவள் கண்களில் உண்மை ஒளி வீசியது. பெருமைக்குரியவளாக அவள் தோற்றம் இருந்தது.
ஹெர்குலிஸைப் பார்த்து அவள், ''இளைஞனே! நீ சோம்பலாக வாழ்க்கை நடத்துவதற்காகப் பிறந்தவன் அல்ல. அரிய பெரிய செயல்கள் செய்வதற்காகப் பிறந்தவன். உனக்கு ஏற்ற பாதை மலைப் பாதைதான்.
''இந்தப் பாதை மிகவும் கடினமானதுதான். இதில், ஆபத்துக்கள் நிறைய உள்ளன. போராடித்தான் அவற்றை வெல்ல வேண்டும். உன் வீரத்திற்கும், வலிமைக்கும் இங்கே சோதனைகள் பல காத்திருக்கின்றன. அவற்றில் வெற்றி பெற்றால் பேரும், புகழும் அடைவாய்,'' என்றாள்.
''அம்மா! உங்கள் பெயர் என்ன?'' என்று கேட்டான் அவன்.
''என்னைப் புகழ் என்று அழைப்பர். நற்பண்பு என்று எனக்கு இன்னொரு பெயரும் உண்டு.
''போராட்டம் ஏதும் இல்லாமல் வாழ்வது ஒரு வாழ்க்கையா? போராட்டம் இல்லையேல் புகழ் இல்லை; பெருமையும் இல்லை. மலைப்பாதையை நீ தேர்ந்தெடு,'' என்றாள்.
இரண்டு பாதைகளையும் மீண்டும் ஒருமுறை பார்த்தான் அவன். இனிய பாதையிலிருந்து நகரத்து மகிழ்ச்சி ஆரவாரம் அவனுக்குக் கேட்டது.
மலைப்பாதையைப் பார்த்தான். அதன் உச்சி அவன் கண்களுக்குத் தெரியவில்லை.
ஏதோ முடிவுக்கு வந்தவனாய் புகழைப் பார்த்தான்.
''அம்மா! மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். பேரும், புகழும் பெற வேண்டும். இதுவே, என் வாழ்க்கையின் குறிக்கோள். அதற்காக, எத்தகைய துன்பங்களையும் ஏற்றுக் கொள்வேன். எனக்கு ஏற்ற பாதை மலைப் பாதைதான்,'' என்று தன்னை மறந்து சொன்னான்.
அவன் கனவு கலைந்தது.
அந்தக் கனவை அடிக்கடி நினைத்துக் கொண்டான் ஹெர்குலிஸ். தன் வீரமும், வலிமையும் மக்களுக்குப் பயன்பட வேண்டும். அதற்கு என்ன செய்வது என்று சிந்தித்தபடி இருந்தான்.
'நாட்டு மக்கள் கொடிய காட்டு விலங்குகளுக்கு அஞ்சியபடியே வாழ்கின்றனர். அவர்களுக்குத் துன்பம் தரும் விலங்குகளைக் கொல்ல வேண்டும்' என்று முடிவு செய்து உடனே செயலில் இறங்கினான்.
வலிமையான கதை ஒன்றைத் தன் தோளில் வைத்துக் கொண்டான். கொடிய விலங்குகளான சிங்கம், புலி போன்றவற்றைத் தேடி காட்டில் அலைந்தான். கண்ணில் பட்ட விலங்குகளை எல்லாம் கொன்று ஒழித்தான்.
கொடிய விலங்குகளை ஹெர்குலிஸ் வேட்டையாடுவதை மக்கள் அறிந்தனர். தங்களைக் காப்பாற்ற வந்த மாவீரன் என்று அவனைப் புகழ்ந்தனர். இதனால் ஹெர்குலிஸின் புகழ் எங்கும் பரவத் தொடங்கியது. எல்லாரும் அவனைப் பற்றிப் பெருமையாகப் பேசத் தொடங்கினர்.
ஹெர்குலிஸ் புகழ் பெற்று வருவதை அறிந்தாள் தேவதை ஹீரா. அவன் மீது மிகுந்த கோபம் கொண்டாள்.
இதை அறிந்தார் ஜீயஸ் தேவன். அவளால் ஹெர்குலிசுக்குத் துன்பம் வருவதை அவர் விரும்பவில்லை. அவளின் கோபத்தைத் தீர்க்க தன்னாலான முயற்சி அனைத்தையும் செய்தார். அவள் கோபம் தீரவே இல்லை. வேறு வழியில்லாத அவர் அவளை அமைதிப்படுத்த நினைத்தார்.
''ஹீரா! ஹெர்குலிஸ் துன்பங்களை அனுபவிக்க வேண்டும். இதுதானே உன் ஆசை!''
''மைசின் நகர அரசனான யுரிஸ்தியசு உள்ளான். அவன் ஹெர்குலிசின் சிற்றன்னையின் மகன். அவர்கள் இருவருக்கும் எப்போதுமே ஆகாது. அவன் வைக்கும் பத்துச் சோதனைகளைச் செய்து முடிக்க ஹெர்குலிசுக்கு கட்டளை இடுகிறேன். அவன் வெற்றியாக முடித்து விட்டால், அதன் பிறகு அவன் வழியில் குறுக்கிடக் கூடாது... என்ன சொல்கிறாய்?'' என்று கேட்டார் ஜீயஸ்.
'சூழ்ச்சியில் யுரிஸ்தியசை வெல்லக் கூடியவர் யாரும் இல்லை. அவன் வைக்கும் ஒரு சோதனையையே ஹெர்குலிஸால் தாங்க முடியாது' என்று நினைத்தாள் ஹீரா.
''அவன் வைக்கும் சோதனைகளில் ஹெர்குலிஸ் வெற்றி பெறட்டும். அதன் பிறகு அவன் வாழ்க்கையில் நான் குறுக்கிடவே மாட்டேன்!'' என்றாள்.
தேவாதி தேவன் ஜீயஸின் கட்டளை ஹெர்குலிசுக்கும், யுரிஸ்தியசுக்கும் தெரிவிக்கப்பட்டது.
இதைக் கேட்ட யுரிஸ்தியசு எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தான்.
'என் எதிரியும், மாவீரனுமான ஹெர்குலிஸ் எனக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இது கடவுளின் கட்டளை. இனி அவன் என்னிடமிருந்து தப்பவே முடியாது. வீரமும், வலிமையும் இருந்தால் போதுமா? என் சூழ்ச்சிகளை அவனால் வெல்ல முடியுமா? பார்த்து விடுகிறேன்' என்று நினைத்தான்.
ஜீயஸின் கட்டளையை ஏற்றான் ஹெர்குலிஸ்.
'யுரிஸ்தியசு எப்படிப்பட்ட சோதனைகளை வேண்டுமானால் வைக்கட்டுமே. வீரமும், வலிமையும் உடையவன் நான். அந்தச் சோதனைகளைத் தூள் தூளாக்கி வெல்வேன். இதனால் என் புகழ் மேலும் பரவும்' என்று நினைத்தபடியே மைசின் நகரத்தை நோக்கி நடந்தான்.
நல்ல உயரம், வலிமையான தோற்றம், உருண்டு திரண்ட தோள்கள், முறுக்கேறிய நரம்புகள், இடது தோளில் வில், முதுகில் அம்புக் கூடு, வலது தோளில் கதை, வீர நடை நடந்து பெருமிதத்துடன் மைசின் நகரத்திற்குள் நுழைந்தான்.
அந்த மாவீரனை மக்கள் வியப்புடன் பார்த்தனர்.
யாரிடமும் எதுவும் பேசாமல் அரண்மனைக்குள் நுழைந்தான். அங்கே அரியணையில் யுரிஸ்தியசு வீற்றிருந்தான்.
சிங்கத்தைப் போலப் பெருமிதமாக வந்த ஹெர்குலிஸைப் பார்த்தான்.
'எமனைப் போல இருக்கிறானே... இவன் தோற்றத்தைப் பார்த்தாலே அச்சமாக இருக்கிறதே' என்று உள்ளுக்குள் நடுங்கினான்.
அவனை வா என்று வரவேற்கவும் இல்லை; உரிய மதிப்பு தரவும் இல்லை யுரிஸ்தியசு.
அரசவையில் நின்றபடியே இருந்தான் ஹெர்குலிஸ்.
'இவனின் நெருங்கிய உறவினன் நான். என்னை வரவேற்க வேண்டும் என்ற நல்ல பண்பு இவனிடம் இல்லையே' என்று நினைத்தான் ஹெர்குலிஸ்.
இருவரும் ஒருவரை ஒருவர், பார்த்தபடியே இருந்தனர்.
அமைதியைக் கலைத்தான் ஹெர்குலிஸ்.
''தேவாதி தேவன் ஜீயஸின் கட்டளையை ஏற்று இங்கு வந்துள்ளேன். நீ எனக்குப் பத்துச் சோதனைகள் வைக்கலாம். அவற்றை நான் தொண்ணூறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்,'' என்று இடி போன்ற குரலில் முழங்கினான்.
- தொடரும்.
