தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வீரத்தாய்!

வீரத்தாய்!

வீரத்தாய்!


PUBLISHED ON : ஆக 05, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 05, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பழந்தமிழகத்தில் கொல்லி மலை தனி நாடாக இருந்தது. அங்கே மறக் குலத்தில் பிறந்த வேல்விழி என்ற பெண்மணி இருந்தாள்.

அவளுக்கும் வீரநிலவன் என்பவனுக்கும் திருமணம் நடந்தது. இனிய இல்லறத்தின் பயனாக அவளுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்தக் குழந்தைக்கு வேங்கையன் என்று பெயர் வைத்தனர். அவனுக்குப் பத்து வயது நடந்துக் கொண்டிருந்தது.

அப்போது பக்கத்து நாட்டு அரசன் கொல்லி மலையின் மீது படையெடுத்து வந்தான். இதை அறிந்த கொல்லி மலை அரசன், கடும் கோபம் கொண்டான். முரசு அடிப்பவனை அழைத்த அவன், ''நம் நாட்டின் மீது எதிரி படையெடுத்து வந்துள்ளான். அவர்களை ஓட ஓட விரட்ட வேண்டும். இந்தச் செய்தியை மக்களுக்கு தெரிவி!'' என்றான்.

அதன்படியே முரசு அடிப்பவனும் மக்கள் கூடும் வீதி சந்திப்பில் நின்றான். டம டம என்று முரசை அடித்தான். முரசு ஓசையைக் கேட்ட மக்கள் அங்கே ஆர்வத்துடன் கூடினர்.

''வீரம் விளைந்த நம் நாட்டின் மீது மாற்றான் படையெடுத்து வந்துள்ளான். அவனை நாட்டைவிட்டே விரட்ட வேண்டும். வீட்டுக்கு ஒரு ஆண் மகன் நாட்டைக் காக்க வருக!'' என்று அறிவித்தான் அவன்.

அதைக் கேட்ட வேல்விழியின் தந்தை கடமையை நிறைவேற்ற போர்க்களம் சென்றார். வீரத்துடன் போர் புரிந்த அவர் எதிரிகள் பலரை வெட்டி வீழ்த்தினார். எதிரி ஒருவனின் வாளுக்கு இரையாகி மாண்டு போனார்.

அடுத்த நாளும் முரசு அடிப்பவன், ''வீட்டிற்கு ஒரு ஆண் மகன் நாட்டைக் காக்க வருக!'' என்று அறிவித்தான். வேல்விழியின் அண்ணன் போர்க்களத்திற்குச் சென்றான். தந்தையைப் போலவே வீரம் காட்டினான் அவன். எதிரிகள் பலரை வீழ்த்திவிட்டு, அவனும் வீழ்ந்தான்.

மூன்றாம் நாளும் முரசு அடிப்பவன், ''வீட்டிற்கு ஒரு ஆண் மகன் நாட்டைக் காக்க வருக!'' என்று அறிவித்தான்.

வேல்விழியின் கணவன் அவளிடம், ''இன்னும் போர் முடியவில்லை. எதிரிகளுடன் வீரப் போர் புரிந்து வெற்றியுடன் திரும்புகிறேன்! என்றான்.

போர்க்களம் சென்ற அவன் எதிரிகளின் யானைப் படையை அழித்துவிட்டு வீழ்ந்தான். நான்காம் நாளும் போர் முரசு ஒலித்தது. ''நாட்டைக் காக்க வீட்டிற்கு ஒருவன் வருக!'' என்று முழங்கியது.

இதைக் கேட்டாள் வேல்விழி. வீரப் பெண்ணான அவள் தந்தையும், அண்ணனும், கணவனும் போர்க்களத்தில் மாண்டு போனார்கள் என்று கலங்கவில்லை. இன்னும் எதிரிகளை அழித்து வெற்றி பெறவில்லையே என்று வருந்தினாள்.

வீதியில் விளையாடிக் கொண்டிருந்த தன் ஒரே மகனை அழைத்தாள். அவனுக்கு வீர உடை அணிவித்தாள். நெற்றியில் பொட்டு வைத்தாள். கையில் வேல் ஒன்றைக் கொடுத்தாள்.

''மகனே! போர்க்களத்தில் உன் வீரத்தைக் காட்டி வெற்றியுடன் திரும்பு. நம் மறக் குலத்திற்குப் பெருமை சேர்!'' என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

''அம்மா! நம் குலப் பெருமையை நிலை நாட்டுவேன். என் வீரத்தால் எதிரிகளை விரட்டி அடிப்பேன். நாட்டைக் காப்பாற்றுவேன்!'' என்று வீரத்துடன் சொன்னான் அவன்.

கையில் வேல் தாங்கிப் பெருமிதத்துடன் போர்க்களம் சென்றான். மாலை நேரம் வந்தது. போர் முடிந்து வீரர்கள் சிலர் திரும்பிக் கொண்டிருந்தனர். வெற்றி பெற்ற பூரிப்புடன் அவர்கள் பேசிக் கொண்டே வந்தனர்.

அவர்களை பார்த்து அவள், ''ஐயா! என் மகன் பத்து வயது சிறுவன். போர்க்களத்திற்கு அனுப்பி வைத்தேன். இன்னும் திரும்பவில்லை. அவனைப் பற்றிய செய்தி ஏதேனும் தெரிந்தால் சொல்லுங்கள்!'' என்று பரபரப்புடன் கேட்டாள்.

அவர்களின் ஒருவன், ''அம்மா உங்களுக்கு அறிவு இல்லையா? சிறுவனைப் போர்க்களத்திற்கு அனுப்பலாமா? விளையாடுகிற இடமா அது? அங்கே வந்த உன் மகன் யானைகளின் பிளிறலைக் கேட்டு நடுங்கினான். வாளோடு வாள் மோதும் ஓசையும், வீரர்களின் ஆரவாரமும் அவன் நடுக்கத்தை அதிகப்படுத்தின.

''அஞ்சியபடியே அங்கிருந்து ஓட்டம் பிடித்தான். அப்போது எதிரி எறிந்த வேல் அவன் முதுகில் பாய்ந்தது. அங்கேயே இறந்துவிட்டான். கோழை போல முதுகில் வேல் பாய்ந்து அவன் இறந்ததை நம் வீரர்கள் பார்த்தனர். இப்படி ஒரு அவமானம் நேர்ந்ததே என்று தலை கவிழ்ந்தனர்!'' என்றான்.

இதைக் கேட்டதும் அவளின் கண்கள் கோபத்தால் சிவந்தன. ''மறக்குலத்தில் பிறந்த என் மகன் புறமுதுகிட்டு ஓடியிருக்க மாட்டான். இப்போதே போர்க்களம் செல்கிறேன். முதுகில் வேல் தாங்கி அவன் கிடந்தால் அவனுக்குப் பால் கொடுத்த மார்பகத்தை வெட்டி எறிவேன்!'' என்று வஞ்சகம் செய்தாள்.

கையில் தீப் பந்தத்துடன் போர்க்களம் சென்றாள். அங்கே கிடந்த உடல்களை ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே வந்தாள். சிறிது தொலைவில் மகன் உடல் கிடப்பது அவளுக்கு தெரிந்தது. பரபரப்புடன் அங்கே சென்றாள்.

மார்பில் வேல் தாங்கி அவன் இறந்து கிடப்பதைப் பார்த்தாள். அவன் உடலை எடுத்துத் தன் மார்போடு அணைத்துக் கொண்டாள்.

''மகனே! மார்பில் வேல் தாங்கி நம் குலத்தின் பெருமையை நிலை நாட்டி விட்டாய். உன்னை ஈன்ற பொழுதினும் இப்போது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்!'' என்று தழுதழுத்த குரலில் சொன்னாள்.

அவள் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வெளிப்பட்டது.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us