PUBLISHED ON : ஜூலை 01, 2016

சில பறவைகள் ஆபத்துக் காலங்களில் தங்கள் உடல் நிறத்தையும், அமைப்பையும் சுற்றுச் சூழலுக்கு ஏற்ப மாற்றி, எதிரியின் கண்களில் மண்ணைத் தூவி, ஏமாற்றித் தப்பும் குணமுடையவை. இங்குள்ள பறவையின் பெயர் 'பிட்டர்ன்.'
இது தன் உடலைக் குறுக்கி, விரைப்பாக்கிக் தான் அமர்ந்திருக்கும் தாவரத் தண்டைப் போலாக்கிக், கழுத்தும், அலகும் வானத்தை நோக்கி நீண்டிருக்க அமர்ந்து கொண்டிருக்கிறது. அதேசமயம், எதிரி தாக்க நேர்ந்தால் அதற்கும் தயாராக எச்சரிக்கையோடு காத்திருக்கிறது. உடல், கழுத்துப் பகுதியின் இறகுகள் அழுத்தப்பட்டுள்ளன.
புயல்-மழைப் பருவங்களில் இப்பறவை நாணல் புதரின் தண்டுகளில் அமர்ந்து, அதன் ஆட்டத்துக்கு ஏற்ப ஆட்டம் போடும். அப்போது இது தன் உடல் நிறத்தை விரோதியின் கவனத்தைக் கவராதிருக்க முட்டாளாக்க மாற்றிக் கொள்ளும்.
இன்னொரு பறவை- 'போர்டகஸ்' என்று பெயர். 'மோர்போர்க்' என்றும் 'பிராக் மவுத்' என்றும் கூட இதை அழைப்பதுண்டு. ஆபத்துக் காலத்தில் சூழ்நிலைக்கேற்பத் தன் உடலை மாற்றிக் கொள்ளும் குணமுடையது இப்பறவை. இது இரவு நேரத்தில் சஞ்சரிக்கும் பறவை. ஆகவே, உருமாற்றம் தேவை இல்லைதான்.
கதகதப்பான பூச்சிகள் நிறைந்த இரவுக் காற்றில் தன் பெரிய அலகை (வாயை) திறந்தபடி வாயின் உட்பக்கமுள்ள மஞ்சள் நிறம் தெரியும்படி, கண்களை அகல விரித்தபடி பறந்து போகும். பகல்வேளையில் மரத்தின் மீது அமர்ந்திருக்கும். நிமிர்ந்த நிலையில் இறக்கையை உடலோடு இறுக்கியபடி- பட்டுப்போன மரக்கிளைபோல - கிளையோடு கிளையாக கண்களை மூடி ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும். பார்ப்பவர்களுக்கு அது அம்மரத்தின் பட்டுப்போன கிளை என்று தோன்றும்.
வாவ்... என்னவொரு டெக்னிக்.

