
ஏழை குடும்பத்தை சேர்ந்தவன் பாலன். அரசு பள்ளியில், 6ம் வகுப்பில் படித்தான்; படு சுட்டி. முதல் மதிப்பெண் தான் பெறுவான்.
வகுப்பு ஆசிரியை, பாசத்துடன் கவனித்தார். சிறப்பாக பாடம் கற்பித்தார். பொங்கல், தீபாவளி பண்டிகைகளின் போது, அவனுக்கு புதிய சீருடை வாங்கி தந்து உதவுவார்.
அன்று காந்தி ஜெயந்தி -
நேர்மை தவறாத ஒழுக்க நெறிகளை, கதை போல வகுப்பில் கூறினார் ஆசிரியை. அது, பாலன் மனதில் பதிந்தது.
அவன் குடியிருந்த பகுதியில், பல்பொருள் அங்காடி ஒன்று துவங்கப்பட்டிருந்தது. புதுப் பொலிவுடன், பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மின் விளக்கு அலங்காரம் சுண்டியிழுத்தது.
அங்கு சென்று பார்க்க பாலனுக்கு ஆசை.
அன்று வகுப்பு ஆசிரியை அங்காடிக்கு சென்றார்.
இதை கண்டதும், உடன் சென்று பொருட்களை பார்வையிட்டான் பாலன்.
அந்த அங்காடிக்கு காரில் வந்திருந்தான் ஓர் இளைஞன். தங்க சங்கிலி, மோதிரங்கள் அணிந்து பகட்டாக காணப்பட்டான். அவன் பொருட்களை பார்ப்பது போல், சாக்லேட்டுகளை திருடி, உடைக்குள் மறைப்பது கண்டு திடுக்கிட்டான் பாலன்.
'வசதிகள் இருந்தும் திருடுகிறானே... இவனை என்ன செய்வது'
யோசித்தான் பாலன்.
உடனே அந்த இளைஞனை நெருங்கி, 'அங்கிள்... பெரிய பல்லி ஒன்று உங்க சட்டைக்குள் புகுந்திருக்கு...' என்றான்.
அலறியபடி சட்டையை கழட்ட, மறைத்திருந்த பொருட்கள் வெளியே விழுந்தன.
அவமானம் தாங்காமல், அசடு வழிந்தபடி மன்னிப்புக் கேட்டான். பின், பணம் கொடுத்து பொருட்களை பெற்று சென்றான் அந்த இளைஞன்.
இதை கண்ட அங்காடி உரிமையாளர், பாலனை அழைத்து பாராட்டினார். சாக்லேட் பெட்டியை, அன்பளிப்பாக தந்தார்.
அதை மறுத்து, 'மன்னித்து விடுங்கள் ஐயா... காசு தராமல் வாங்குவது சரியல்ல...' என்றான் பாலன்.
இதை கவனித்து கொண்டிருந்தார் வகுப்பு ஆசிரியை.
மறுநாள் காலை -
பள்ளியில் இறை வணக்க கூட்டம் முடிந்தது. பாலனை அழைத்த ஆசிரியை, அவன் நேர்மையை, பெருமை பொங்க வகுப்பில் கூறி பாராட்டினார்.
வாண்டூஸ்... ஆசையை அடக்கி, ஒழுக்கத்துடன் வாழ்ந்தால் பாராட்டுகள் குவியும்.

