
ராமநாதபுரம் மாவட்டம், நடுவப்பட்டி, ராமமூர்த்தி அரசு உயர்நிலைப் பள்ளியில், 1972ல், 7ம் வகுப்பு படித்தபோது, தலைமை ஆசிரியராக இருந்தார் என் தந்தை. பட்டதாரி ஆசிரியையாக பணிபுரிந்தார் அம்மா.
அன்று மதியவேளை, வகுப்பறையில் வாந்தி எடுத்தான் உடன்படித்த நண்பன். உடலில், சக்தியின்றி தளர்ந்து, மேஜையில் சாய்ந்திருந்தான். பாடம் நடத்த வந்த தமிழாசிரியர் ராமலிங்கம், வகுப்பறை வழக்கத்தை விட, அமைதியாக இருந்தது கண்டு விசாரித்தார். சக மாணவன் துன்பத்தில் துவண்ட போது, உதவாதது கண்டு வருந்தி கடிந்தார்.
உடனே, சுறுசுறுப்பாக செயல்பட்டு வகுப்பறையை சுத்தம் செய்தார். அவருக்கு உதவும் வகையில் ஓடினோம். உடல் நலமின்றி வாடியவனை பரிவுடன் விசாரித்து முதலுதவி அளித்தார். தக்க துணையுடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
பின், என்னிடம், 'தலைமை ஆசிரியரின் மகன் நீ... பாதிக்கப்பட்டவனுக்கு உதவுவதில் முன்னிலை வகிக்க வேண்டாமா... எங்கும் மனிதநேயம் தான் முக்கியம்; அது இல்லாத கல்வியால் எந்த பயனுமில்லை...' என அறிவுரைத்தார்.
என் வயது, 63; பிரபல தனியார் நிறுவனத்தில், பொது மேலாளராக உயர் பொறுப்பு வகித்து ஓய்வு பெற்றேன். அந்த ஆசிரியர் கூறிய கருத்து மனதில் நிறைந்துள்ளது. அதன்படி, உதவுவதை வாழ்வின் முதன்மை நோக்கமாக பேணி வருகிறேன்.
- வை.தியாகராஜன், சென்னை.
தொடர்புக்கு: 98409 35685